Thursday, November 20, 2014

தர மதிப்பீடுகள் அவசியமே...........


         மத்திய அரசின் கல்வி அமைச்சகம், மனிதவள மேம்பாட்டுக் கல்வித் துறை, 2000ம் ஆண்டில், அனைவருக்கும் கல்வி (சர்வ சிக்ஷா அபியான்) என்ற, புதிய கல்வித் திட்டத்தை அறிமுகப்படுத்தியது.ஆரோக்கியமான புதிய கற்பித்தல் முறை, ஆடல் பாடல்களுடன் குழந்தைகளின் கற்றல், போதிய கல்வித் திறன்களை மாணவர்கள் எட்டுதல், தேக்கமில்லாத 100 சதவீத தேர்ச்சி என்பது, அரசின் முடிவு. இதைக் கருத்தில் கொண்டே, எட்டாம் வகுப்பு வரை, கட்டாயத் தேர்ச்சி முறையை, மத்திய அரசு சட்டமாக்கியது.

             உளவியல் அறிஞர்கள், சிந்தனையாளர்கள் தேர்வுமுறை பற்றி, பல்வேறு கருத்துகளை வைப்பதும் கவனிக்கத்தக்கது. தேர்வு பயம், தோல்வி பற்றிய அச்சம், மதிப்பெண் குறைவால் பெற்றோரின் நெருக்கடி, வகுப்பாசிரியரின் வசை, சமூகத்தின் ஏளனப் பார்வை இவற்றால், சிறு குழந்தைகள் உளவியல் ரீதியாகப் பாதிப்படைகின்றனர் என்பது, அவர்களது வாதம். இன்முகம், மகிழ்ச்சியுடன் கற்றலை எதிர்கொள்ள வேண்டிய சிறார்கள், தேர்வு பயத்தால், கல்வியை வெறுப்பது சரியல்ல என்பதும் ஏற்கக்கூடிய கருத்தே. அதே சமயம், 'தேர்ச்சி, தேர்வு
   அவசியம்' என்பவர்களது வாதம், இதற்கு நேர் மாறானது. தகுதியற்ற மாணவர்கள் பெருக்கம், கல்வித் தரம் தாழ்ந்து போதல், அனைத்துத் துறைகளிலும் திறமையற்றவர்களின் கூட்டம், தேசத்தின் வளர்ச்சியில் தேக்கம், பின்தங்கிய நாடுகளின் வரிசையில் இந்தியா சேர்தல் இவற்றை, நம் சந்ததி சந்திக்க வேண்டுமா என்பவர்களது கேள்வியிலும், அர்த்தமில்லாமல் இல்லை. எட்டாம் வகுப்பு வரை கட்டாயத் தேர்ச்சியால், அடிப்படைக் கல்வித் திறன் இல்லாதவர்களும், ஒன்பதாம் வகுப்புக்கு வருகின்றனர். வகுப்பு மாற்றங்களுக்குத் தேர்வு அவசியம். குறைந்தபட்சத் தேர்ச்சி மதிப்பீடு முதல் வகுப்பிலிருந்து இருக்கட்டும் என்பது, சில கல்வியாளர்களது வாதம். நாம், காய்கறிகளைக் கூட, தரம் பார்த்தே வாங்குகிறோம். அரசின் தவறான கல்விக் கொள்கைகளால், தேசத்தின் கல்வித் தரம் தாழ்வது நல்லதல்ல. கல்வியாண்டின் தொடக்கத்திலிருந்தே, தொடர் தேர்ச்சி மதிப்பீடு முறையில், வகுப்பு மாற்றங்கள் இருக்கட்டும். தேர்வு பயமின்றி, கற்பதில் ஆரோக்கிய மூட்டும் கல்வி முறை, பாடத் திட்டங்களில் மாற்றம் தேவையான சீர்திருத்தங்கள் கல்வி முறையில் தேவை. தொடக்கக் கல்வியில், தற்போதுள்ள பாடச் சுமைகள் தேவையற்றவை. செயல்வழிக் கற்றல், ஆடல் பாடல்களுடன் கற்றல் என்ற தற்போதுள்ள கற்பித்தல் முறையால் மொழியாளுமை, நினைவாற்றல் குறைவது நல்லதல்ல. பொழுது போக்கு அம்சங்கள் நிறைந்த கல்வி முறை, திறன்களை வளர்க்காது.

No comments:

Post a Comment