Friday, May 27, 2016

அரசு பள்ளிகளில் காலைச் சிற்றுண்டி.....



        அரசு பள்ளிகளில் காலை மெனு ,கோதுமை உப்புமா, கேழ்வரகு புட்டு, ரவா கேசரி, சேமியா கேசரி, சவ்வரிசி கஞ்சி ....

 

தமிழகத்தில் தற்போது சத்துணவு திட்டத்தின் கீழ் மாணவர்களுக்கு மதிய உணவு வழங்கப்பட்டு வருகிறது. இனிமேல் பள்ளிகளில் காலையில் மாணவர்களுக்கு டிபன் வழங்கப்படும் என்று முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.ஏற்கனவே அரசு தொடக்கப்பள்ளிகள் முதல் உயர்நிலைப் பள்ளிகள் வரை,அதாவது ஒன்றாம் வகுப்பு முதல் 10ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு மதிய உணவு வழங்கப்பட்டு வருகிறது.
            அதுமட்டுமின்றி சத்துணவு பணியாளர்கள் சம்பளம் போதாது என்று பல்வேறு போராட்டங்கள் நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் பள்ளிகளில் காலை டிபன் என்பது சாத்தியமா என்ற கேள்விஎழுந்துள்ளது.தமிழகத்தில் ஏற்கனவே அரசு பள்ளிகளில் மத்திய உணவாக ஒரு நாள் புளியோதரை, மறுநாள் வெஜ்டபிள் பிரியாணி, அடுத்த நாள் சாம்பார் சாதம், கறிவேப்பிலை சாதம், லெமன் சாதம் என்று 13  வகையான சாப்பாடு வழங்கப்பட்டுவருகிறது. இத்துடன் தினமும் ஒவ்வொரு மாணவனுக்கு முட்டையும், முட்டை சாப்பிடாதவர்களுக்கு வாழைப்பழமும் வழங்கப்படுகிறது. சத்துணவு திட்டத்தில் மதிய உணவுக்காக ஒவ்வொரு மாணவனுக்கும் ரூ.6.88 பைசா என்று நிர்ணயம் செய்து  உணவுப்பொருள்கள் வழங்கப்படுகிறது. இதன் மூலம் ஒவ்வொரு ஆண்டும் இந்த மதிய உணவு திட்டத்தில் 55 லட்சம் மாணவர்கள் பயன்பெறுகின்றனர். சத்துணவு திட்டத்தில் மதிய உணவு தயாரிப்பில் சத்துணவு அமைப்பாளர்கள், சமையலர், உதவியாளர்கள் என்று 78 ஆயிரம் பேர் பணியாற்றுகின்றனர். சத்துணவு பணியாளர்கள் சம்பளம், உணவுப்பொருள்கள் என்று ஒவ்வொருஆண்டும் அரசு  ரூ,747 கோடியே 28 லட்சம் செலவிடப்படுகிறது.தற்போது அரசு பள்ளிகளில் காலை டிபன் என்ற அறிவிப்பு பெற்றோர்களிடையே பெரும் வரவேற்பபை பெற்றுள்ளது. ஆனால், சத்துணவு பணியாளர்கள் தரப்பிலோ கூடுதல் பணிச்சுமை, சம்பளம் பற்றாக்குறை என்று புலம்புகின்றனர்.
இது தொடர்பாக தமிழ்நாடு சத்துணவு பணியாளர்கள் சங்க மாநில தலைவர் கே.பழனிச்சாமியை தொடர்பு கொண்டு பேசினோம். ''தமிழகத்தில் ஆரம்பத்தில் ஒரு லட்சத்து 27ஆயிரம் பேர் பணியாற்றினோம். ஆனால், பணி நிரந்தரம் இல்லாதது, சம்பளம் பற்றாக்குறை போன்ற காரணங்களினால் பல ஆயிரம் பேர் வேறு பணிகளுக்கு சென்று விட்டனர். தற்போது 40 ஆயிரம் காலியிடங்கள் இருக்கின்றன. கிட்டத்தட்ட இப்போது 80 ஆயிரம் பேர்தான் பணியாற்றுகின்றனர். சென்னை, மதுரை, கோவை போன்ற மாநகராட்சி பகுதிகளில் சத்துணவு அமைப்பாளர்களுக்கு 10 ஆயிரம் ரூபாய் சம்பளமும், சமையலருக்கு 4 ஆயிரத்து500 ரூபாயும், உதவியாளருக்கு 3 ஆயிரத்து 500 ரூபாயும் சம்பளமாக வழங்கப்படுகிறது.மதிய உணவு தயாரிப்பதற்காக காலை 9 மணிக்கு பள்ளிக்கு சென்று மதியம் இரண்டரை மணிக்கு பணியை முடித்து விடுவோம். இப்போது காலை டிபன் திட்டத்திற்காக காலை 6 மணிக்கு சென்றால்தான் 8 மணிக்குள் டிபன் தயாரித்து மாணவர்களுக்கு வழங்க முடியும்,. பிறகு மதிய உணவு தயாரிக்க வேண்டும். இதனால் பணி நேரம் அதிகரித்து கூடுதல் பணிச்சுமையால் சிமரப்படுவோம். எங்களுக்கு சம்பளமும் போதவில்லை. பணி நிரந்தரம் செய்வதும் இல்லை. இதை விட முக்கியமான பிரச்னை விலைவாசி உயர்வு காரணமாக மாணவர்களுக்கு அரசு நிர்ணயித்த விலையில் தரமான உணவை கொடுக்க முடிவதில்லை. எனவே, அரசு மாணவர்களுக்கு நிர்ணயித்த விலையை உயர்த்தி வழங்க வேண்டும். காலை டிபனால் பணிச்சுமை கூடுவதால் சம்பளத்தை உயர்த்தி தர நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என்றார்.
இதுதொடர்பாக சத்துணவு திட்டத்தின் இணை இயக்குனர் இளங்கோவனை தொடர்பு கொண்டோம். ''முதல்வர் அறிவித்தபடி முதல் கட்டமாக ஒன்றாம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரை உள்ள 26 ஆயிரத்து 709 அரசு தொடக்கப்பள்ளிகளில் இந்த திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது. இதன் மூலம் தொடக்கப்பள்ளியில் படிக்கும் 266 லட்சத்து 85 ஆயிரம் மாணவர்கள் பயன்பெறுவார்கள். ஒரு மாணவனுக்கு காலை டிபனுக்காக ரூ.3 நிர்ணயிக்கப்பட்டுள்ளது. சத்துணவு பணியாளர்கள் காலை 6 மணிக்கு பள்ளிக்கு வந்து 8 மணிக்கு மாணவர்களுக்கு டிபன் வழங்குவார்கள்.ஒவ்வொரு மாணவனுக்கும் 100 கிராம் எடையளவு கொண்ட டிபன் வழங்கப்படும்.வாரத்தில் 5 நாட்களுக்கு முதல் நாள் கோதுமை உப்புமா, கேழ்வரகு புட்டு, ரவா கேசரி, சேமியா கேசரி, சவ்வரிசி கஞ்சி என்று ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வகை டிபன் வழங்கப்படும். இதன் மூலம் மளிகை சாமான்கள், போக்குவரத்து செலவு என்று ஒரு ஆண்டுக்கு ரூ.354 கோடிரூபாய் 86 லட்சம் ரூபாய் செலவாகும். பிறகு அடுத்தகட்டமாக மற்ற பள்ளிகளுக்கும் இந்த திட்டம் படிப்படியாக அமல்படுத்தப்படும்.
காலை டிபன் தொடர்பாக சத்துணவு துறை மூலம் அரசுக்கு அறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. கோடை விடுமுறை முடிந்துஜூன் மாதம் ஒன்றாம் தேதி பள்ளிகள் திறக்கப்படவுள்ளன.அந்த நாள் முதல் பள்ளிகளில் காலை டிபன் வழங்கப்படுமாஇல்லை தள்ளிப்போகுமா என்று தெரியவில்லை. அரசிடம் இருந்து இந்த திட்டம்           தொடர்பாக முறையான அறிவிப்புகள்இன்னும் வரவில்லை. விரைவில் வரும் என்று எதிர்பார்த்து காத்திருக்கோம்'' என்றார்.
இருதரப்பிலும் பேசியதிலிருந்து முதல்வர் அறிவித்த காலை உணவு திட்டம் சாத்தியம்தான் என்று தோன்றினாலும், ஆள் பற்றாக்குறையால் காலை டிபன் தயாரிக்கும் பணி தாமதமாகலாம் எனவும், விலை ஏற்றத்தால், தரமான பொருட்களை உபயோகித்து இதன் மூலம் சுவையான உணவு கொடுக்கப்படாமல் போகலாம் எனவும் சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.ஒரு துறை வெற்றிகரமாக இயங்கவேண்டுமானால், அந்த உள்ள அனைத்து குறைகளையும் அரசு முதலில் களைய வேண்டும் என்பதும் அவர்களின் கோரிக்கையாக இருக்கிறது.


No comments:

Post a Comment