Friday, October 11, 2019

தமிழக ஆசிரியர் கூட்டணி வட்டார செயற்குழுக் கூட்டம்



தமிழக ஆசிரியர் கூட்டணி, ஊத்தங்கரை வட்டாரக் கிளையின் செயற்குழுக் கூட்டம் இன்று (11.10.2019) ல் ஊத்தங்கரையில் நடைபெற்றது.

ஊத்தங்கரை வட்டாரக் கிளையின் தலைவர் திரு கி. நாகேஷ் அவர்கள் தலைமையில் நடைபெற்ற சிறப்புக் கூட்டத்திற்கு வட்டாரக் கிளையின்  செயலாளர் திரு சே. லீலாகிருஷ்ணன் வரவேற்புரை ஆற்றினார். 

சிறப்பு அழைப்பாளராக மத்தூர் கல்வி மாவட்டக் கிளையின், மாவட்டச் செயலாளர் திரு. செ. இராஜேந்திரன் அவர்கள் கலந்துக் கொண்டார். அவர் தனது சிறப்புரையில் இன்றைய தொடக்கக் கல்வித் துறையின் பல்வேறு செயல்பாடுகள் குறித்தும், அரசு மற்றும் கல்வித் துறையால் புதுமை என்ற பெயரால் அரசுப்பள்ளி ஆசிரியர்களுக்கு வழங்கும் பல்வேறு பணிச் சுமைகளால் மாணவர்களுக்கு கற்பிக்கும் நேரம் பெருமளவு பாதிக்கப்படுவது குறித்து தமது கவலையை பகிர்ந்துக் கொண்டதோடு, கல்வித் துறையோடு தொடர்பில்லாத பல்வேறு தனியார் தொண்டு நிறுவனங்கள்  தாம், கல்வியில்/பள்ளியில்/ஆசிரியர்களிடையே பல புதிய மாற்றங்களை கொண்டு வருகிறோம் என்ற பெயரில் அறிமுகப்படுத்தும்,  அவர்களின் கருத்துக்கள் உள்ளடக்கிய பயிற்சிகளையும், திட்டங்களையும் அப்படியே ஏற்று அரசு பள்ளிகளில் மட்டும் புகுத்துவதை மறுபரிசீலனை செய்ய வேண்டும் எனவும், அரசு பள்ளிகளில் குறைந்து வரும் மாணவர் சேர்க்கையை அதிகரிக்கச் செய்ய வேண்டியதன் அவசியம் குறித்தும் விரிவாகப் பேசினார்.

மேலும் அரசு பள்ளிகளில் துவக்கப்பட்ட மழலையர் வகுப்புகளுக்கு கற்பிக்க துவக்க, நடுநிலைப் பள்ளிகளில் பணியாற்றும் இடைநிலை ஆசிரியர்களை கட்டாய மாறுதல் மூலமும், மாற்றுப் பணி மூலமும் நியமனம் செய்யப்பட்டவர்களை உடனடியாக திரும்ப சம்மந்தப்பட்ட பள்ளிகளுக்கோ அல்லது தேவையான இடைநிலை ஆசிரியர் காலிப் பணியிடத்திலோ நியமிக்க வேண்டுமெனவும், தகுதித் தேர்வு தேர்ச்சி பெற்று, இன்னும் வேலையில்லாமல் இருப்பவர்களை அப்பணியிடத்தில் நியமனம் செய்து கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும் எனவும் அரசை கேட்டுக் கொண்டார்.

 மேலும் ஊத்தங்கரை ஒன்றியத்தில் ஓராண்டுக்கும் மேலாக துவக்க/நடுநிலைப் பள்ளிகளில் 47 இடைநிலை ஆசிரியர்கள் காலிப் பணியிடம் உள்ளதை சிறப்பு கவனம் கொண்டு உடன் நிரப்பிட வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார்.

 பின்னர் கீழ்க்கண்ட தீர்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.

தீர்மானம் : 1
தற்போது ஊத்தங்கரை ஒன்றியத்தில் ஏற்கனவே 47 இடைநிலை ஆசிரியர் (தகுதியுள்ள) பணியிடம் காலியாக உள்ளதால் ஒன்றிய துவக்கக் கல்வி பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளது. எனவே உடனடியாக இக்காலிப் பணியிடங்களை நிரப்பி ஒன்றியத்தின் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும் என மாவட்ட கல்வித் துறையையும், மாநில தொடக்கக் கல்வித் துறையையும் கேட்டுக் கொள்ளல்.

தீர்மானம் : 2.
ஊத்தங்கரை ஒன்றியம் ஜோதிநகர் நடுநிலைப் பள்ளியில் கடந்த இரண்டு ஆண்டுகளாக, 1 முதல் 5 வரையிலான வகுப்புகளுக்கு கற்பிக்க ஓர் இடைநிலை ஆசிரியர் கூட இல்லாத நிலையில், இதுவரையில் மாற்றுப் பணியில் கூட யாரையும் நியமிக்காமல் உள்ளதற்கு இச்செயற்குழுக் கூட்டம் கண்டனம் தெரிவிப்பதோடு, உடன் மாற்றுப் பணியில் இடைநிலை ஆசிரியர் நியமித்து அப்பள்ளி மாணவர்களின் கல்வி கற்றலுக்கு உதவிட கேட்டுக் கொள்ளப்படுகிறது.

தீர்மானம் : 3. 
     கடந்த ஜூலை 2019 முதல் வழங்கப்பட வேண்டிய அகவிலைப்படி 5%ஐ மத்திய அரசு அறிவித்த நிலையில்  தமிழக அரசும் உடனடியாக வழங்க  அரசை கேட்டுகொள்ளல்.

தீர்மானம் : 4.
     தமிழக கல்வித் துறையில் இன்று பணியாற்றும் ஆசிரியர்கள் அனைவரும் திறன்பேசியை தொடர்ந்து வகுப்பறையில் பயன்படுத்தி கற்பிக்க  வேண்டிய கட்டாயச் சூழல் ஏற்பட்டுள்ளதால் அனைத்து ஆசிரியர்களுக்கும் தரமான, கற்றல்/கற்பித்தல் செயலிகள் பதிவிரக்கம் செய்யப்பட்ட விலையில்லா திறன்பேசியை வழங்கிட தமிழக அரசைக் கேட்டுக்கொள்ளல்
தீர்மானம் : 5.
     தமிழகத்தில் குழந்தைகள் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம் 2009ன் படி  அனைத்து துவக்கப் பள்ளிகளிலும் மாணவர் எண்ணிக்கையை கருத்தில் கொள்ளாமல் குறைந்தது இரண்டு ஆசிரியர் பணி புரியும் நிலையை உறுதி செய்ய தமிழக அரசை வலியுறுத்துதல்.
தீர்மானம் : 6.
     அரசு துவக்கப் பள்ளிகள் அனைத்தும் புதிய பொழிவு பெறும் பொருட்டும், மாணவர்களை கவர்ந்து ஈர்க்கும் பொருட்டும் அரசின் சிறப்பு நிதி ஒதுக்கீட்டின் படி அனைத்து பள்ளிக் கட்டிடங்களுக்கும் வர்ணம் பூசிடவும், பலவண்ண ஓவியங்கள் வரையவும், தமிழக கல்வித் துறை முயற்சி மேற்கொண்டு, தமிழக அரசை வலியுறுத்த கேட்டுக் கொள்ளல்.

தீர்மானம் : 7.
     பள்ளி சார்ந்த அனைத்து தகவல்களும் தற்போது இணைய மின்னஞ்சல் மற்றும் குறுஞ் செய்திகள் வழியே தற்போது வழங்க வேண்டி உள்ளதாலும், மாணவர்களுக்கு இணைய வளங்கள் மூலமே கற்றல்/ கற்பித்தலை நிகழ்த்த வேண்டி உள்ளதாலும் அனைத்து துவக்க/நடுநிலைப் பள்ளிகளுக்கும் அகன்ற கற்றை இணைய இணைப்பு வசதியுடன் கூடிய மடிக்கணினி வழங்கிட தொடக்கக் கல்வித் துறையைக் கேட்டுகொள்ளல். 

(இயக்க சார்பு தீர்மானங்கள்)

தீர்மானம் : 1.
     இயக்க சட்ட விதிமுறைகளின் படி மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை இந்திய ஜனநாயக முறைப்படி நடத்தப்பட வேண்டிய வட்டார மற்றும் மாவட்ட கிளைத் தேர்தல்களை இம்மாத இறுதிக்குள் முறையாக திட்டமிட்டு நடத்திட முடிவு செய்யப்படுகிறது.

தீர்மானம் : 2.
     நவம்பர் 2019 மாதத்திற்குள் ஐபெட்டோ அகில இந்திய செயலாளர் திரு வா. அண்ணாமலை அவர்கள் உள்ளிட்ட தமிழக ஆசிரியர் கூட்டணியின் மாநில பொருப்பாளர்கள் அனைவரையும் அழைத்து வட்டாரக் கிளையின் சார்பில் முப்பெரும் விழா நடத்துவது என தீர்மானிக்கப்படுகிறது.

இறுதியில் வட்டார செயற்குழு உறுப்பினர் திரு பூ. இராம்குமார் அனைவருக்கும் நன்றி கூறினார்.

     கூட்டத்தில், மாவட்ட மகளிர் அணிச் செயலாளர் க. தமிழ்ச்செல்வி, கல்வி மாவட்டப் பொருளாளர் திரு த. செல்வம் செயற்குழு  உறுப்பினர்கள் ஈ. அகிலாண்டேஸ்வரி, இராமாண்டவர், பன்னீர்செல்வம் உள்ளிட்ட அனைத்து உறுப்பினர்களும் கலந்துக்கொண்டனர்.