Tuesday, September 26, 2023
தமிழக ஆசிரியர் கூட்டணி, கிருஷ்ணகிரி மாவட்டக் கிளையின் முப்பெரும் விழா......
தமிழக ஆசிரியர் கூட்டணி கிருஷ்ணகிரி மாவட்டக் கிளையின் சார்பில் முப்பெரும் விழா 23.09.2023ல் ஒசூரில் உள்ள ஓட்டல் தமிழ்நாடு கூட்டரங்கில் நடைபெற்றது.
ஆசிரியர் தினவிழா, பணிநிறைவு பெற்றவர்களுக்கு பாராட்டுவிழா, தலைமைப் பண்பு கருத்தரங்கம் ஆகியவை இணைந்த முப்பெருவிழாவாக நடைபெற்ற இவ்விழாவிற்கு ஒசூர் கல்வி மாவட்டத் தலைவராக இருந்த வெ. இராஜேந்திரன் தலைமை தாங்கினார். டி. ஜான்சங்கர் முன்னிலை வகித்தார்.
முன்னதாக கிருஷ்ணகிரி மாவட்ட ஒருங்கிணைப்பாளராக இருந்த ம. பவுன்துரை அனைவரையும் வரவேற்றார். என்.லோகேஷ், செ. இராஜேந்திரன், தூ. மனுநீதி, இரா. இராஜேஸ் எபிநேசர் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.
மாநிலத் தலைவர் திருமிகு மா. நம்பிராஜ், மாநிலப் பொதுச் செயலாளர் திருமிகு அ. வின்செண்ட் பால்ராஜ், மாநிலப் பொருளாளர் திருமிகு க.சந்திரசேகர் ஆகியோர் சிறப்புரை ஆற்றினர்.
தொடர்ந்து அகில இந்திய துவக்கப் பள்ளி ஆசிரியர் சங்கங்களின் கூட்டமைப்பின் அகில இந்திய பொதுச் செயலாளர் மதிப்புமிகு அண்ணன் வா. அண்ணாமலை அவர்கள் ஓய்வு பெற்ற ஆசிரியர்களுக்கு பாராட்டு செய்தும், இயக்கப் பொருப்பாளர்களுக்கு தலைமைப் பண்பு கருத்தரங்க உரை நிகழ்த்தியும், ஆசிரியர் தின பேருரை ஆற்றினார். அப்போது அவர் இன்றைய சவாலான காலகட்டத்தில் ஆசிரியர்கள் ஆற்ற வேண்டிய பணிகள் குறித்தும், ஆசிரியர்களுக்கு அரசு நிறைவேற்ற வேண்டிய கோரிக்கைகள் பற்றியும் விரிவாக எடுத்துக் கூறி எமிஸ் என்னும் அரக்கனின் பிடியில் இருந்து விடுதலை பெறும் நாளே ஆசிரியர்களுக்கான பொற்காலம் என்றும் கூறி முடித்தார்.
இறுதியில் இசக்கிஞானம் அனைவருக்கும் நன்றி கூறினார். விழாவில் 200க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் கலந்துக்கொண்டனர்.
Monday, September 25, 2023
Saturday, June 24, 2023
பள்ளிக்கு குடிநீர் சுத்திகரிப்பான் வழங்கிய முன்னாள் மாணவர்கள்...
ஊத்தங்கரை ஒன்றியம் ஜோதிநகர், ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில், இன்று
(24.06.2023) எட்டாம் வகுப்பு வரை முடித்த முன்னாள் மாணவர்கள் தாம் பயின்ற
பள்ளிக்கு உதவிடும் வகையில் குடிநீர் சுத்திகரிப்பான் இயந்திரம் வழங்கினர்.
இந்நிகழ்வில் பொறுப்பு தலைமை ஆசிரியர் மஞ்சுநாதன், உதவி ஆசிரியர் இராம்குமார்,
தற்காலிக ஆசிரியர் அனிதா மற்றும் பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள் கோகிலா, பாரதி
ஆகியோரும் கலந்துக்கொண்டனர். குடிநீர் சுத்திகரிப்பான் வழங்கிய முன்னாள் மாணவர்களான
விநோதினி, ரஞ்சிதா, பியங்கா, பாரதி, பிரேம்குமார், கோகுல், விக்னேஷ், அருண்குமார்,
பாண்டியன், கார்த்தி, நவீன்குமார், இராமன், லட்சுமணன், பிரபு, சுரேந்தர்
ஆகியோருக்கு பள்ளியின் சார்பில் நன்றியும் வாழ்த்துகளும் தெரிவிக்கப்பட்டது.
இவர்களில் ஒரு மாணவன் தற்போது சென்னை IIT யில் படித்து கொண்டு இருப்பது இப்
பள்ளிக்கு பெருமை தரும் செய்தியாகும்.
Wednesday, May 17, 2023
G.O.Ms.No.142/143 - அரசு ஊழியர், ஆசிரியர்களுக்கு 4% அகவிலைப்படி உயர்வு அரசாணை வெளியீடு.....
4% அகவிலைப் படி உயர்வு - தமிழ்நாடு முதலமைச்சர் உத்தரவு. 01.04.2023 முதல் அகவிலைப்படி உயர்வு - இனிவரும் காலங்களில் ஒன்றிய அரசு அறிவிக்கும் போதெல்லாம் உடனுக்குடன் அதைப் பின்பற்றி தமிழ்நாடு அரசும் செயல்படுத்தும் என முதலமைச்சர் அறிவித்தார்.
அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வரும் கோரிக்கையான அகவிலைப்படி உயர்வு குறித்து கனிவுடன் பரிசீலித்து, இந்த உயர்வினை 01.04.2023 முதல் செயல்படுத்திட மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள் உத்தரவிட்டுள்ளார்கள்.
இதன்படி, தற்போது 38 சதவீதமாக உள்ள அகவிலைப்படி 01.04.2023 முதல் 42 சதவீதமாக உயர்த்தப்பட்டு வழங்கப்படும்.
அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வரும் கோரிக்கையைக் கனிவுடன் பரிசீலித்து, எதிர்வரும் காலங்களிலும் ஒன்றிய அரசு அகவிலைப்படி உயர்வை அறிவிக்கும்போதெல்லாம், உடனுக்குடன் தமிழ்நாடு அரசும் அதைப் பின்பற்றி அரசு அலுவலர் மற்றும் ஆசிரியர்களுக்கும் அகவிலைப்படி உயர்வைச் செயல்படுத்திடும்.
file:///C:/Users/Hp/Downloads/GO_Ms_No_142_Finance%20(Allowance)_Dated_17.05.2023_FC%20-%20Final%20-%20English.pdf
Thursday, March 30, 2023
ஆசிரியருக்கு ஏன் தேவை பணிப் பாதுகாப்புச் சட்டம்?
தாய் தந்தைக்குப் பிறகும் கடவுளுக்கு முன்பும் போற்றப்பட வேண்டியவர்கள் ஆசிரியர்கள் ஆவர். ஒவ்வொரு பெற்றோரும் தம் குழந்தைகளுக்கு இரண்டாவது ஆசிரியராகவும் அதுபோல் ஒவ்வொரு ஆசிரியரும் பள்ளிப் பிள்ளைகளுக்கு இரண்டாவது பெற்றோராகத் திகழ வேண்டும் என்பது சமுதாயத்தின் எதிர்பார்ப்பாகும். ஒருவர் தம் வாழ்வில் எப்போதும் தாம் ஒரு நல்ல மாணவராகவே விளங்க வேண்டும் என்பதையே தம் குறிக்கோளாகக் கொண்டு முன்னேற்றம் கண்டவர்கள் பலர் என்பது கண்கூடு.
ஆசிரியர் வேலை என்பது தொழில் அல்ல. அஃதொரு பணியாகும். ஒரு நல்ல ஆசிரியர் வெறும் கூலிக்கு மாரடிக்க ஒருபோதும் விரும்ப மாட்டார். அதுபோல், தம் நல்ல அறிவுஞானம் முழுவதையும் அணுவளவும் விடுபடாமல் ஒவ்வொரு குழந்தைக்கும் எப்பாடுபட்டேனும் தம் கற்பித்தல் வழியாகக் கடத்திவிட ஒவ்வொரு நாளும் முயற்சித்துக் கொண்டே இருக்கின்றார். விதை நெல்லுக்கு ஆகும் செலவை யாரும் கணக்குப் பார்க்க மாட்டார்கள். ஆசிரியர் பணியும் அத்தகையது. ஆசிரியர் பணியில் காணப்படும் ஊதிய முரண்பாடுகளும் குறைபாடுகளும் ஏராளம் இருப்பினும் அதனூடாக நிகழ்த்தப்படும் ஆசிரியர் விரோத போக்குகள் மலிந்த போதும் தாயுள்ளத்துடன் குழந்தைகளை வகுப்பறைகளில் எந்தவொரு ஆசிரியரும் அறிவுப்பசிப்பிணி போக்க தவறுவதில்லை.
இன்றைய சூழ்நிலையில் ஆசிரியர் பணியானது நெருப்பாற்றை ஒவ்வொரு கணமும் நீந்திக் கடப்பதற்கு ஈடாக உள்ளது. எந்நேரமும் ஏதேனும் ஓர் அபாய நிலையில் தம்மைத் தாமே உருக்கிய நிலையில் சுடர் ஒளி உமிழ வேண்டிய துர்பாக்கிய நிலையில் ஆசிரியர் சமூகம் இருப்பது வேதனைக்குரியது. கோடிக்கைகள் கொண்ட மூச்சு விடும் நிணமும் குருதியும் உள்ள நவீன மனித எந்திரனாக இருக்க வேண்டிய நிர்ப்பந்தம் இன்றைய ஆசிரியருக்கு இருப்பது அறியத்தக்கது.
அரசின் இணையவழிப் பதிவேற்றப் பதிவுகள் மற்றும் பதிவேடுகள் உருவாக்குதலும் பராமரிப்புச் செய்தலும் உள்ளிட்ட பள்ளி சார்ந்த பணிகளும், இல்லம் தேடிக் கல்வி, புதியபாரதம், சத்துணவு வழங்குதல் மற்றும் காலை உணவுத் திட்டம் உள்ளிட்ட பள்ளி சாராத வேலைகளும், மக்கள்தொகை, பொருளாதார கணக்கெடுப்பு, தேர்தல் பணி உள்ளிட்ட தேசிய கட்டாயம் பங்கெடுப்புகளும் மாணவர் உடல்நலம் சார்ந்த மருத்துவ சேவைகளும் பணியாளர் வாராத நாள்களில் பள்ளித் துப்புரவுப் பணிகளும் பருவங்கள் தோறும் அவ்வப்போது வழங்கப்படும் பதினான்கு வகையான பாடப்புத்தகங்கள், குறிப்பேடுகள், சீருடைகள், கற்றல் கற்பித்தல் கருவிகள், காலணிகள் முதலான நலத்திட்ட உதவிகளைத் தூக்கிச் சுமந்து சேர்க்கும் கடைநிலை ஊழியங்களும் என முதுகெலும்பு முறியும் பல்வேறு வேலைகளுக்கிடையில் கற்பித்தல் பணியாற்ற வேண்டிய சூழலில் தற்போதைய ஆசிரியர்கள் உள்ளனர்.
இத்தகைய துறை சார்ந்த அகவய பணி நெருக்கடிகளுக்கிடையில் செம்மையாகப் பணிபுரிந்து வரும் ஆசிரியப் பெருமக்களுக்கு அண்மைக்காலமாகப் பல்வேறு நெறிபிறழ் மாணவர்கள் மற்றும் கண்மூடித்தனமாக பெற்றோர்கள் உள்ளிட்ட புறவய நெருக்கடிகள் மற்றும் அச்சுறுத்தல் மலிந்து வருவது எண்ணத்தக்கது. நின்றால் குற்றம்; நடந்தால் குற்றம் என்பதுபோல அச்சு மற்றும் காட்சி ஊடகங்கள் வணிகப் போட்டி காரணமாகத் தம் கோரப்பசிக்கு ஆசிரியர்களையும் மாணவர்களையும் இரையாக்கி வருவது குறிப்பிடத்தக்கது. அனைத்தும் இங்கு ஊதிப்பெருக்க வைக்கப்பட்டுக் காட்சிப்படுத்தப்படுவதும் செய்தியின் உண்மைத்தன்மை உணராது பரப்புரை செய்யப்படுவதும் அதற்கு உடனடியாக எதிர்வினை நிகழ்த்துவதும் அதனையே உண்மை என்று குருட்டுத்தனமாக நம்புவதும் அதிகரித்து வருவது நல்லறமாகா.
ஆசிரியர்கள் மீதான மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் கொண்டிருக்கும் மதிப்புகளில் இன்று பேரிடி விழுந்துள்ளது. எனினும், இன்றும் பல கிராமங்களில் உள்ள பெற்றோர்கள் தம் இல்ல சுக, துக்க நிகழ்வுகளில் உள்ளூர் ஆசிரியப் பெருமக்களை சாதி, மதம் பாராமல் தம் நெருங்கிய உறவினர்களாக நினைத்துப் பாவித்து அவை சார்ந்த அழைப்பிதழ்களில் பெயரை அச்சடித்துப் பெருமை சேர்த்து வருவது குறிப்பிடத்தக்கதாகும். எனினும், ஆசிரியர் பற்றிய மதிப்பீடுகள் சமுதாயத்தில் சரியவும் சீர்குலையவும் காரணமானவர்களாக முற்றிலும் தடம் புரண்ட மாணவர்களையும் மரியாதை குன்றிய சமுதாயத்தினரையும் குற்றம் சுமத்துவது என்பது சரியல்ல.
ஆசிரியர்கள் அனைவரும் யோக்கியமானவர்கள் என்று கூறுவது பேதைமையாகும். அது இங்கு நோக்கமுமல்ல. யோக்கியமானவர்கள் பலர் ஆசிரியர்களாக இருக்கின்றனர் என்பது மட்டும் உண்மை. அப்படியிருக்க, மாணவர்கள், பெற்றோர்கள் மற்றும் சமுதாயத்தினருள் ஒரு சிலர் ஆசிரிய சமுதாயத்தின் மீது வன்மமும் அவமதிக்கும் குறுகிய எண்ணமும் கொண்டு செயல்படுவது என்பது சகிப்பதற்கில்லை. கட்டுப்பாடு அற்ற சுதந்திரத்தை கட்டவிழ்த்து விட்டதன் விளைவு ஆசிரியர்கள் மீதான விரோதமும் குரோதமும் வளர காரணமாகி விட்டது. தாம் என்ன செய்கிறோம் என்று அறியாதோரை மன்னித்து மறந்து விடலாம். தம் வகுப்பு அல்லது பாட ஆசிரியரை எந்தவகையில் எல்லாம் சிறுமைப்படுத்த முடியும் என்று திட்டமிட்டு கேலியும் கிண்டலும் தெனாவெட்டும் எண்ணம், சொல், செயலில் காட்டுவது என்பது ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்றாகும்.
ஆசிரியர்களுள் ஒரு சிலர் வெளிப்படையாகக் காட்டும் குணக்கேடான முகம் சுளிக்க வைக்கும் செய்கைகளால் ஒட்டுமொத்த ஆசிரியர் சமூகமும் கழுவிலா தொங்க முடியும்? தாம் ஆசிரியர் என்பதைத் துறந்து பள்ளிக்கு வருவதில் தொடர்ந்து ஒழுங்கீனம், காரண காரியம் இல்லாமல் தகவல் தெரிவிக்காமல் தொடர் விடுப்பில் இருத்தல், குடிநோயாளியாகி பொதுவிடங்களில் அருவருக்கத்தக்க வகையில் கிடத்தல், வகுப்பறையில் தொடர்ந்து பாடம் எடுக்காமை, பிஞ்சுக் குழந்தைகளிடம் பாலியல் தொடர்பான சீண்டல்கள் மற்றும் அத்துமீறல்களில் மறைமுகமாக ஈடுபடுதல், சாதியத் திமிருடன் நடந்து கொள்ளுதல், தாம் மேற்கொள்ளும் பிற வருவாய் ஈட்டும் தொழில்களில் அல்லது வேலைகளில் வெளிப்படையாக முழுநேரமும் மூழ்கியிருத்தல், போதைப்பொருள்களை வகுப்பறையில் மாணவர்கள் முன்னிலையில் பயன்படுத்துதல் போன்ற தீய செயல்கள் புரியும் நச்சுச்செடிகளைக் கவனமுடன் களையெடுப்பதில் அரசு இயந்திரம் ஒருபோதும் மெத்தனம் காட்டக் கூடாது. உண்மையிலேயே ஒரு நல்லவருக்கு நியாயமாகப் கிடைக்க வேண்டிய எல்லாவிதமான மாலையும் மரியாதையும் இதுபோன்ற விரும்பத்தகாத செயல்களில் ஈடுபடும் தீயவர்களுக்கு அநியாயமாகப் போய்ச் சேருவதால் ஏற்படும் நீறுபூத்த கோபம் ஊருக்கு இளைத்த எளிய ஆசிரியரிடம் கண்மூடித்தனமாக, தாறுமாறாக வெளிப்படுத்தப்படுகின்றன.
பள்ளி இறுதி நாட்களில் வகுப்பறையில் காணப்படும் தளவாடப் பொருள்களுக்குப் பெரும் சேதம் விளைவித்தல், ஆசிரியரைச் சுற்றிச் சுற்றி வந்து கும்மியடித்தல், மறைமுகமாகச் சீண்டி விளையாடுதல், குறிப்பாக பெண் ஆசிரியைகளைத் தவறான கண்ணோட்டத்தில் குற்றவுணர்ச்சியே இல்லாமல் உற்று நோக்குதல், உருவ கேலி செய்தல், தவறான வகையில் நடத்துக் காட்டுதல், கொஞ்சம் கூட கீழ்ப்படியாதிருத்தல், வகுப்பறையில் அத்துமீறி தவறிழைத்தல், போதைப்பொருள் நுகர்தல், தடை செய்யப்பட்ட ஆபாச காணொலிகளைக் கண்டு மகிழ்தல் மற்றும் சக குழுவில் பகிர்தல், வயதுக் கோளாறு காரணமாக மேற்கொள்ளும் கூடாப்பழக்கம் குறித்து அக்கறை படும் ஆசிரியர்கள் மீது வீண் பழி சுமத்துதல் மற்றும் சட்டத்தைத் தவறாகப் பயன்படுத்தித் தண்டித்தல், மரியாதை குறைவாக பள்ளி வளாகத்திற்குள் நடந்து கொள்ளுதல், தட்டிக் கேட்கும் ஆசிரியரிடம் எகிறுதல், நிலைமை கைமீறிப் போகும் போது அடியாட்களாகப் பெற்றோர் அல்லது உறவினரை அழைத்து வந்து மிரட்டுதல், அச்சுறுத்துதல் மற்றும் கொலைவெறித் தாக்குதலில் ஈடுபடுதல், மேலும் உயிர்ச் சேதம் விளைவித்தல் என அண்மைக்கால ஆசிரியர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் ஏராளம்! ஏராளம்.
மாணவர்கள் தாம் வகுப்பறைகளில் வேண்டுமென்றே கிழித்துப் போடும் குப்பைகளையும் அவர்கள் அன்றாடம் பயன்படுத்தும் மற்றும் போதிய பாதுகாப்பு வசதியின்மையால் ஊரார் அசிங்கப்படுத்தி வைக்கும் பள்ளிக் கழிவறைகளையும் பகுதிநேர துப்புரவுப் பணியாளர் பணிக்கு வராத காலங்களில் ஆசிரியர்கள் தாம் செய்யவேண்டிய அவலநிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். ஒவ்வொரு தனிநபரும் தாம் பயன்படுத்திய ஓய்வறையைத் தாமே சுத்தப்படுத்துவது என்பது இன்றியமையாத கடமையாகும். பள்ளிகளில் தொன்றுதொட்டு கற்பிக்கப்பட்டு வரும் வாழ்வியல் திறன்களை இங்கு கற்றுக் கொள்ளாமல் நீட், ஜேஇஇ உள்ளிட்ட போட்டித் தேர்வுகளுக்குத் தயார்படுத்தும் கொள்ளை இலாபம் ஈட்டும் வணிகக் கற்றல் சிறப்பு வாழ்க்கைத் திறன் மேம்பாட்டு மையங்களிலா மாணவர் கற்பர்?
ஓர் ஆசிரியர் உடலாலும் மனத்தால் எந்தவொரு மாணவரையும் காயப்படுத்துதல் என்பது தகாத செயலாகும். தன் நிலையை மறந்து இதனை மீறும் ஆசிரியர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க எத்தனையோ உகந்த வழிகள் உள்ளன. அதனை விடுத்து குடிகாரருடன் வந்து மிரட்டுவதும் குருபக்தியைக் காலில் போட்டு மிதித்து வயதிற்கு மீறி தாமே தாக்க முற்படுவதும் பள்ளிக்குள் புகுந்து உயிருக்கு அச்சுறுத்தல் விளைவிக்கும் விதமாகக் குடும்பமாகத் தாக்கிக் காயப்படுத்துவதும் என்பன மனிதத்தன்மையற்ற செயலாகவே கருதப்படும்.
இத்தகு சூழலில், உயிரைக் காக்கப் போராடும் மருத்துவருக்கு இருப்பது போன்ற ஒரு பணிப் பாதுகாப்புச் சட்டம் உள்ளத்தைப் பண்படுத்தும் ஆசிரியர் சமூகத்திற்கு இதுநாள் வரை இல்லாதது நீதிக்குப் புறம்பானதாகும். இந்த நாட்டில் தீங்கு விளைவிக்கும் விலங்குகளுக்குக் கூட பாதுகாப்புச் சட்டம் உள்ளது. ஆசிரியர் உயிர் இழிவாகியும் மலிவாகியும் போனதோ?! ஆசிரியர் மனசைக் கேட்டறியும் எல்லோருக்குமான இந்த விடியல் அரசுக்கு ஆசிரியர்களின் உயிரையும் உடைமையையும் சுய மரியாதைக்குச் சற்றும் குறைவில்லாமல் பாதுகாத்து அரண் அமைத்துத் தரவேண்டிய கடமையும் பொறுப்பும் இருப்பதைத் தட்டிக் கழிக்க இயலாது. சென்னையில் பட்டப்பகலில் வகுப்பறையில் ஒரு மாணவனால் ஓர் இளம் ஆசிரியை ஒருவர் குத்திக்கொலை செய்யப்பட்டபோதே ஆசிரியர் நலன் காப்பதாகக் கூறிக்கொள்ளும் ஆசிரியர் இயக்கங்கள் எதிர்வரும் காலங்களில் இதுபோன்ற குருதிப்புனல் பெருக்கும் சம்பவங்கள் நடைபெறாமலிருக்க அன்றைய அரசை வலியுறுத்தி ஏனைய ஆசிரியர்களின் பணிப் பாதுகாப்பை உறுதி செய்திருக்க வேண்டும்.
இப்போதாவது விழித்துக் கொள்வது புத்திசாலித்தனமாகும். ஆசிரியர்கள் தரப்பின் நியாயம் உணர்ந்து அரசும் ஆசிரியர் பணிப் பாதுகாப்பின் முக்கியத்துவம் குறித்து உணர்வதும் அதற்குரிய வரைவை உருவாக்குவதும் நம்பிக்கை அளித்து உதவிட முன்வருதல் இன்றியமையாதது. ஆளாளுக்கு பள்ளிக்குள் புகுந்து அடிக்க தாயில்லாத அநாதைகள் அல்லர் ஆசிரியர்கள். ஒரு குற்ற நிகழ்வு நடந்த பின்னர் துரிதமாக மேற்கொள்ளப்பட்ட கடும் நடவடிக்கைகள் பாராட்டுக்குரியதுதான். எனினும், பொதுவெளியில் நிகழ்த்தப்பட்ட அவமரியாதைக்கும் இழிவுபடுத்த முனைவதற்கும் அதனால் ஏற்படும் காலத்தால் அழியாத வடுவிற்கும் மனவேதனைக்கும் மருந்துளதோ? இந்த ஆசிரியர்களைக் கேட்பதற்கு ஒரு நாதியும் இங்கில்லை என்கிற தைரியம் தானே இந்த கொடும்பாதக செயலுக்குக் காரணம் என்பதை அரசாங்கம் முதலில் உணருதல் நல்லது. ஆதலால், காலம் தாழ்த்தாமல் அவசர அவசியம் கருதி ஆசிரியர் பணிப்பாதுகாப்புச் சட்டம் இயற்றும் நடவடிக்கையைத் துரிதப்படுத்த முன்வர வேண்டும். இதுவே தக்க தீர்வாக அமையும்.
நன்றி....
எழுத்தாளர் மணி கணேசன்
Subscribe to:
Posts (Atom)