Thursday, May 29, 2014

அளவுகோள் அற்ற அளவீடு - அடிப்படையே தவறு




இன்றைய ஊடகங்களும், கல்விக்கும் அதன் வளர்ச்சிக்கும் கடுகளவும் தன்னை வருத்திக்கொள்ளாதவர்களும் கல்வியை காப்பாற்றுவதாகக் கூறி அதன் மீது சேற்றை பூசுபவர்களும் 12ம் வகுப்பு பொதுத் (எழுத்து) தேர்வின் தேர்ச்சி விகிதத்தை மட்டுமே அளவுகோளாகக் கொண்டு தனியார் பள்ளிகளையும் - அரசு பள்ளிகளையும் ஒப்பிடுவது அடிப்படையிலேயே தவறானது. அவர்களை மேலும் ஊக்குவிக்கும் வகையில் அதிகாரிகள் ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுப்பது  அதைவிடவும் தவறானது.
ஏன் தெரியுமா? இதோ கீழே அதற்கான எதார்த்தமான உண்மைகள்…….
தனியார் பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு கிடைக்கும் வசதிகளும் வாய்ப்புகளும் - அரசுபள்ளியில் பயிலும் மாணவர்களுக்கும் கிடைக்கிறது என யாராவது உறுதி தர முடியுமா?
தனியார் பள்ளியில் படிக்கும் மாணவர்களின் வாழ்க்கைத் தரமும் - அரசுப் பள்ளியில் படிக்கும் மாணவர்களின் வாழ்க்கைத் தரமும் சம அளவானதுதான் என யாராவது கூற முடியுமா?
பெற்றோர் என்ற வகையில் தனியார் பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு கிடைக்கும் கவனிப்பு - அரசு பள்ளியில் படிக்கும் அனைத்து மாணவர்களுக்கும் கிடைக்கிறது என யாராவது கூற முடியுமா?
தனியார் பள்ளியில் பெற்றோர்/மாணவர்கள் மீது தினிக்கப்படும் சட்ட திட்டங்களை - அரசுபள்ளியிலும் செயல்படுத்த முடியும் என்றோ அல்லது அதற்கான வழி வகைகள் உள்ளது என்றோ யாராவது கூற இயலுமா?
தனியார் பள்ளியில் பணியாற்ரும் ஆசிரியர்களுக்கு கற்பித்தல் பணியைத் தவிற பிற பணிகள் ஏதும் வழங்கப்படுவதில்லை என்ற நிலைப்பாட்டை - அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கும் செயல்படுத்த யாராவது முன்வருவார்களா?
தனியார் பள்ளியில் படிக்கும் மாணவனுக்கு படிப்பு மட்டுமே முழு நேர தொழில் - அரசுப் பள்ளி மாணவர்களுக்கும் இதைச் செயல்படுத்திட அவர்களின் குடும்பச் சூழல் உகந்ததாக உள்ளது என யாராவது கூற முடியுமா?
தனியார் பள்ளி மாணவனின் கல்விக்காக அவனது ஒட்டுமொத்த குடும்பமும் தம்மை அர்ப்பனித்துக் கொண்டு செயல்படுகிறது - அரசு பள்ளி மாணவனுக்கும் இதே அளவி ஒத்துழைப்பு அவனது குடும்பத்திலிருந்து கிடைக்கிட யாராவது உத்தரவாதம் தர இயலுமா?
அரசுப் பள்ளிகளில் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின் படி வயதுக்கேற்ற வகுப்பில் மாணவரைச் சேர்க்க (இதற்கு முன்பு பள்ளியே செல்லாதவராய் இருந்தாலும் கூட)வலியுறுத்தும் அதிகாரிகள் மற்றும் கல்வி ஆர்வலர்கள் எனப்படுவோர் இது போன்ற முறையில் தனியார் பள்ளியில் எத்தனை மாண்வர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர் எனக் கூற முடியுமா?
பள்ளியே செல்லாத/பள்ளியை விட்டு இடையில் நின்ற மாணவர் எந்த வயதுடையவராக இருந்தாலும் (14 வதுக்குள்), அண்டின் எந்த மாதத்தில் எந்த நாளில் வந்தாலும் அரசுப் பள்ளியில் சேர்க்க வேண்டும் என்ற சட்டம் - தனியார் பள்ளிகளிலும் செயல்படுத்தப்படுகிறதா? இது வரையில் எந்தப் பள்ளியில் எத்தனை மாணவர்கள் சேர்க்கப்பட்டுள்ளார்கள் விபரம்தர யாராவது தயாரா?
10ம் வகுப்பில் 5 பாடங்களுக்கும் தனித்தனியே தேர்ச்சி மதிப்பெண் அட்டை வைத்திருப்பவரெல்லாம் கூட (முதல் தேர்வில் 5பாடங்களிலும் தோல்வி கண்டவர்) அரசுப்பள்ளியில் 11ம் வகுப்பில் சேரத்தகுதியானவராகக் கருதப்பட்டு சேர்த்துக்கொள்ளப்படுகிறார்கள் - இதே போன்ற நிலையை எந்த ஓர் தனியார் பள்ளியிலாவது காட்ட இயலுமா?
அரசுப் பள்ளியின் தலைமை ஆசிரியருக்கும் ,ஆசிரியர்களுக்கும் மாதத்தின் பல நாட்களில் வழங்கப்படும் அலுவலகப் பணிகள்தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கும் வழங்கப்படுகிறதா?
தனியார் பள்ளியில் பணியாற்றும் ஆசிரியர்களை எந்த ஓர் பெற்றோரும் அல்லது பொதுமக்களும் பள்ளி வளாகத்தில் நேரடியாகச் சந்திக்க இயலாதுஇத்தகைய பாதுகாப்பு அரசுப்பள்ளி ஆசிரியர்களுக்கும் உண்டா?
அரசுப் பள்ளியில்  தேசிய பசுமைப் படை, இளைஞர் செஞ்சிலுவைச் சங்கம், தேசிய மாணவர் படை, தேசிய சாரணியர் இயக்கம், செஞ்சுருள் சங்கம், நுகர்வோர் சங்கம்,  என பல்வேறு அமைப்புகள் செயல்படுத்த வேண்டுமென்ற கட்டாய ஆணை உள்ளது. இது போன்ற அமைப்புகள் எத்தனை தனியார் பள்ளிகளில் உள்ளது எனக் கூற முடியுமா?
இதனை வேறுபாடுகளுக்கும் இடையில்தான் அரசு பள்ளி மாணவர்கள் விளையாட்டு உள்ளிட்ட பல்வேறு துறைகளில் மாவட்ட , மாநில, தேசிய அளவில் சிறப்பிடம் பெற்று நாட்டுக்கு பெருமை சேர்த்து வருகிறார்கள்.
     இத்தனை வேறுபாடுகள் தனியார் மற்றும் அரசுப் பள்ளிகளுக்கிடையே    உள்ளபோது வெறும் தேர்ச்சி சதவீதத்தை மட்டுமே அடிப்படையாகக் கொண்டு இருவேறு பள்ளிகளையும் ஒப்பிடுவது எவ்வகையில் நியாயம், சிந்திப்பீர் தெளிவு பெறுவீர். 
                           ஆக்கம்………
                                                            
                                                            கவி.செங்குட்டுவன் () செ. இராஜேந்திரன்,
                                                                                மாவட்டத்தலைவர்,
தமிழக ஆசிரியர் கூட்டணி, ஊத்தங்கரை
கிருஷ்ணகிரி மாவட்டம்

No comments:

Post a Comment