Friday, January 9, 2015

அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கான பொங்கல் பரிசு; தமிழக அரசு அறிவிப்பு .......


                தமிழக அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு ரூ.3 ஆயிரம் வரை போனஸ் வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. அதில், ஏ, பி பிரிவைச் சேர்ந்தவர்களுக்கு ஆயிரம் ரூபாயும் சி,டி பிரிவைச் சேர்ந்தவர்களுக்கு ரூ.3,000 வரையிலும் போனஸாக அளிக்கப்படும் என அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 இதுகுறித்து தமிழக அரசு வியாழக்கிழமை வெளியிட்ட அறிவிப்பு:
            ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் பண்டிகையை ஒட்டி, அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு போனஸ், சிறப்பு போனஸ் ஆகியன தமிழக அரசால் வழங்கப்பட்டு வருகிறது. கடந்த ஆண்டு வழங்கப்பட்டதைப் போன்று, இந்த ஆண்டும் வழங்க முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் உத்தரவிட்டுள்ளார்.
அதன் விவரம்: கடந்த 2013-14-ஆம் ஆண்டுக்கு சி, டி தொகுதியைச் சேர்ந்த அலுவலர்கள், ஆசிரியர்களுக்கு ரூ.3,000 என்ற உச்சவரம்புக்குள்பட்டு 30 நாள்கள் ஊதியத்துக்கு இணையாக மிகை ஊதியம் வழங்கப்படும்.
ஏ, பி தொகுதியைச் சேர்ந்த அலுவலர்கள், ஆசிரியர்கள் கடந்த நிதியாண்டில் குறைந்தபட்சம் 240 நாள்கள் அல்லது அதற்கு மேலாக பணிபுரிந்து வருவோருக்கு சிறப்புமிகை ஊதியமாக ஆயிரம் ரூபாய் வழங்கப்படும்.
அதாவது, சில்லரைச் செலவினத்தின் கீழ் மாத அடிப்படையில் நிர்ணயிக்கப்பட்ட ஊதியம் பெறும் முழுநேர, பகுதி நேரப் பணியாளர்கள், தொகுப்பூதியம் பெறும் பணியாளர்கள், சிறப்புக் கால முறை ஊதியம் பெற்று வரும் சத்துணவுத் திட்டப் பணியாளர்கள், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சிப் பணிகள் திட்டத்தில் பணிபுரியும் அங்கன்வாடி பணியாளர்கள், கிராம உதவியாளர்கள், பஞ்சாயத்து உதவியாளர்கள், ஒப்பந்தப் பணியாளர்கள், ஒப்பந்த அடிப்படையிலான தாற்காலிக உதவியாளர்கள், தினக்கூலி அடிப்படையில் பணியாற்றுபவர்கள், ஒரு பகுதி தினக் கூலிகளாக பணியாற்றி பின்பு நிரந்தரப் பணியாளர்களாக பணியமர்த்தப்பட்டவர்கள் ஆகியோருக்கு இந்த சிறப்பு மிகை ஊதியம் அளிக்கப்படும்.
            உள்ளாட்சி அமைப்புகள், அரசு உதவி பெறும் கல்வி நிறுவனங்கள் ஆகியவற்றில் பணிபுரியும் அலுவர்கள், ஆசிரியர்கள், பல்கலைக்கழக மானியக் குழு, அனைத்திந்திய தொழில்நுட்பக் கல்விக் குழு, இந்திய வேளாண் ஆராய்ச்சிக் கழகம் ஆகியவற்றின் கீழ் சம்பள விகிதம் பெறுபவர்கள், அனைத்திந்தியப் பணி விதிமுறைகளின் கீழ் சம்பளம் பெறுபவர்கள் ஆகியோருக்கும் இந்த மிகை-சிறப்பு மிகை ஊதியம் வழங்கப்படும்.
           ஓய்வூதியம், குடும்ப ஓய்வூதியம் பெறுபவர்கள், முன்னாள் கிராம நிர்வாக அலுவலர்கள் ஆகியோருக்கு ரூ.500 பொங்கல் பரிசாக வழங்கப்படும்.
பொங்கலை ஒட்டி வழங்கப்படும் போனஸ், சிறப்பு போனஸ் வழங்க அரசுக்கு ரூ.326.49 கோடி கூடுதல் செலவு ஏற்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
 

No comments:

Post a Comment