Wednesday, July 31, 2024
5 ரூபாய்க்கு தேநீர், யாரை அவமதிக்கிறது கல்வித் துறை..... ஆசிரியர்களையா, பெற்றோர்களையா.....
அனைத்து அரசு துவக்க / நடுநிலை/ உயர்/ மேல்நிலைப் பள்ளிகளிலும் பள்ளி மேலாண்மைக்குழு மறு கட்டமைப்பு எனும் நிகழ்வு இம்மாதம் முழுவதும் நடைபெற உள்ளது. அதன் முதல் நிகழ்வு வரும் 02.08.2024 வெள்ளிக்கிழமை அன்று தமிழ்நாடு முழுமையும் அனைத்து அரசுப் பள்ளிகளிலும் பெற்றோர்கள் கலந்தாலோசனைக் கூட்டமும், தொடர்ந்து 10.08.2024, 17.08.2024, 24.08.2024, 31.08.2024 ஆகிய நாட்களில் 4 கட்டமாக பள்ளி மேலாண்மைக் குழு தலைவர் உள்ளிட்ட உறுப்பினர்களும் தேர்வு செய்வதற்கான கூட்டம் நடைபெற உள்ளது.
இதற்காக தமிழ்நாடு அரசு தனியாக அரசாணையே வெளியிட்டு உள்ளது. இக்கூட்டங்களில் அனைத்து பெற்றோர்களையும் பங்கேற்கச் செய்ய வேண்டியது சம்மந்தப்பட்ட பள்ளி தலைமை ஆசிரியர்களின் தலையாயப்பணியாகும். இக்கூட்டங்களில் பங்கு பெறும் அனைத்து பெற்றோர்களுக்கும் தேநீர் வழங்கிட கல்வித்து றையால் நிதி ஒதுக்கீடு செய்யப்படுள்ளது. எவ்வளவு தெரியுமா, அனைவரையும் ஆச்சரியப்பட வைக்கும் பெருந்தொகை, ஆம் ஆளுக்கு 5 ரூபாய் வீதம் தேநீர் செலவினமாக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இது ஏதோ கடந்த 10, 15 ஆண்டுகளுக்கு முன்பு போடப்பட்ட செயல்முறைக் கடிதம் அல்ல 30.07.2024ல் போடப்பட்ட கடிதம்தான். இன்றைய காலகட்டத்தில் 5 ரூபாய்க்கு எங்கே தேநீர் கிடைக்கும், ஒதுக்கீடு செய்தவர்களுக்கே இது வெளிச்சம்.
அவர்கள் இந்த உலகத்தில்தான் உள்ளார்களா? தெரியவில்லை. இதன் மூலம் கல்வித்துறை யாரை அவமதிக்கிறது என்பதுதான் இப்போதைய சந்தேகம். செலவினத்தை மேற்கொள்ள உள்ள பள்ளித் தலைமை ஆசிரியர்களையா? அல்லது கூட்டத்திற்கு பங்கேற்க வ்ரும் பெற்றோர்களையா.......
Tuesday, July 30, 2024
வருமான வரி கணக்கில் தவறான தகவல் அளித்து 'ரீபண்டு' பெற்றால் நடவடிக்கை பாயும் - வருமான வரித்துறை எச்சரிக்கை.......
வருமான வரி கணக்கு தாக்கல் செய்யும்போது, 'ரீபண்டு' பெறுவதற்காக தவறான தகவல்களைத் தெரிவிக்கக் கூடாது. தவறான தகவல் தருவது அல்லது தகவலை மறைப்பது தண்டனைக்குரிய குற்றமாகும்' என, வருமான வரித்துறை எச்சரித்துள்ளது.
கடந்த 2023 - 24 நிதியாண்டுக்கான வருமான வரி கணக்கு தாக்கல் செய்வதற்கான கடைசி நாள், இம்மாதம் 31ம் தேதி. இந்தக் காலக்கெடு நீட்டிக்கப்படாது என்று கூறப்படுகிறது.
வருமான வரித்துறை மற்றும் அதை நிர்வகிக்கும் மத்திய நேரடி வரி வாரியம் ஆகியவற்றின் தகவலின்படி, இதுவரை, ஐந்து கோடிக்கும் மேற்பட்டோர் வருமான வரி கணக்கை தாக்கல் செய்துள்ளனர்.
மேலும் இதில், மூன்றில் இரண்டு பங்கினர், புதிய நடைமுறையின்படி கணக்கு தாக்கல் செய்துள்ளதாக புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன. வருமான வரி விதிகளின்படி, தற்போது, இரண்டு நடைமுறைகள் உள்ளன.
பழைய நடைமுறையின்படி, வரி அடுக்கு மற்றும் அதற்கான வரி விகிதம் அதிகமாக இருக்கும். அதே நேரத்தில், பல்வேறு வரிச் சலுகைகளைப் பெற முடியும்.
புதிய நடைமுறையின்படி, வரி அடுக்கு குறைவாக இருப்பதுடன், வரி விகிதமும் குறைவாக இருக்கும். அதே நேரத்தில், இதில் வரிச்சலுகை கோர முடியாது. சமீபத்தில் தாக்கல் செய்யப்பட்ட மத்திய பட்ஜெட்டில், புதிய நடைமுறைக்கு பல புதிய சலுகைகளும் அறிவிக்கப்பட்டுள்ளன. இது நடப்பு நிதியாண்டுக்கான கணக்கு தாக்கலில் நடைமுறைக்கு வரும்.
'ரிட்டர்ன்' எனப்படும் வருமான வரி கணக்கு தாக்கல் செய்வதற்கு, ஜூலை, 31ம் தேதி கடைசி நாள். கடந்தாண்டில் எட்டு கோடிக்கும் மேற்பட்டோர் கணக்குத் தாக்கல் செய்துள்ளனர்.
இதுவரை ஐந்து கோடிக்கும் அதிகமானோர் தாக்கல் செய்துள்ளனர். அடுத்த மூன்று நாட்களில், மீதமுள்ளவர்கள் தாக்கல் செய்வர் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், மத்திய நேரடி வரி வாரியம் சமீபத்தில், சில அறிவுறுத்தல்களை வெளியிட்டுள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது:
வருமான வரி கணக்கு தாக்கல் செய்வோர், ரீபண்டு எனப்படும் பிடித்த வரியை திரும்ப பெறுவதற்காக சில தகவல்களை அளிக்கின்றனர். இதற்காக பொய்யான தகவல்களை அளிப்பது அல்லது தன் வருவாயை குறைத்துக் காட்டுவது போன்றவற்றில் ஈடுபட வேண்டாம்.
ரீபண்டு கேட்பவர்களின் விண்ணப்பங்கள் முழுமையாக ஆய்வு செய்யப்படுகின்றன. அதில் சந்தேகம் இருந்தால், சம்பந்தப்பட்டவருக்கு, நோட்டீஸ் அனுப்பி விளக்கம் கேட்கப்படும். அதிலும் திருப்தி இல்லை என்றால் அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
சரியான மற்றும் துல்லியமான தகவல்களை மட்டுமே கணக்கு தாக்கலில் தெரிவிக்க வேண்டும். அவை முறையாகப் பரிசீலிக்கப்பட்டு, ரீபண்டு அளிக்கப்படும். தவறான தகவல் அளிப்பது தண்டனைக்குரிய குற்றமாகும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
வரிச்சான்று -- அரசு விளக்கம்
சமீபத்தில் தாக்கல் செய்யப்பட்ட மத்திய பட்ஜெட்டில், வெளிநாட்டுக்கு பயணம் செய்வதற்கு, வரி பாக்கி இல்லை என்ற சான்றிதழ் சமர்ப்பிப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.இது குறித்து மத்திய நிதி அமைச்சகம் அளித்துள்ள விளக்கம்:இந்த உத்தரவு அனைவருக்கும் அல்ல. வரிச் சட்டத்தின்படி, அதிக வரி நிலுவை வைத்துள்ளவர்கள், நிதி மோசடிகளில் ஈடுபட்டவர்கள் உள்ளிட்டோருக்கு மட்டுமே இந்த உத்தரவு பொருந்தும். வரி பாக்கியை வசூலிக்கவும், நிதி மோசடி செய்து வெளிநாடு தப்பிச் செல்வதைத் தடுக்கவும், கருப்புப் பணச் சட்டத்தின்படி, இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Friday, July 26, 2024
பள்ளி அளவிலான சதுரங்க போட்டி....
ஊத்தங்கரை ஒன்றியம் ஜோதிநகர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் இன்று பள்ளி அளவிலான சதுரங்கப் போட்டிகள் நடைபெற்றது.
முன்னதாக பள்ளித் தலைமை ஆசிரியர் திரு செ. இராஜேந்திரன் சதுரங்கப் போட்டியின் விதிமுறைகளை அனைவருக்கும் விளக்கி போட்டியைத் துவக்கி வைத்தார்.
போட்டிகள் 11 வயதுக்கு உட்பட்டவர்கள், 14 வயதுக்கு உட்பட்டவர்கள் என இரு பிரிவுகளாக ஆண்களுக்கும் பெண்களுக்கும் தனித் தனியாக நடைபெற்றது. அதில் 11 வயதுக்கு உட்பட்டவர்கள் ஆண்கள் பிரிவில் தா. யோகேஸ்வரன், சே. நித்திஷ் ஆகியோரும், பெண்கள் பிரிவில் ம. பூஜா, சே. ஸ்ரீவர்த்தனி ஆகியோரும், 14 வயதுக்கு உட்பட்டவர்கள் ஆண்கள் பிரிவில் ம. குரு, க. நவீன்குமார் ஆகியோரும், பெண்கள் பிரிவில் கோ. அகிலா, தா. தாரணி ஆகியோரும் சிறப்பிடம் பெற்றனர். இவர்கள் அனைவரும் ஆகஸ்ட் 6 அன்று நடைபெறும் வட்டார அளவிலான போட்டிகளில் பங்குபெற தகுதி பெற்றனர்.
இவர்களுக்கு அனைத்து ஆசிரியர்களும் வாழ்த்து தெரிவித்தனர்.
நிகழ்வில் உதவி ஆசிரியர்கள் கோ. ஆனந்தன், பூ. இராம்குமார், மா. யோகலட்சுமி, மு. அனிதா, கணினி பயிற்றுநர் மு. அகிலா ஆகியோர் கலந்துக்கொண்டனர்.
Saturday, July 20, 2024
தலைமை ஆசிரியர் இல்லாத பள்ளிகள் - கேள்விக்குறியாகும் மாணவர்களின் கல்வி......
தமிழ்நாட்டில் முதல்முறையாகத் தொடக்கக்கல்வி வரலாற்றில் தலைமையாசிரியர்கள் இல்லாமலேயே பள்ளிகள் திறக்கப்பட்டு ஐம்பது நாட்களைக் கடக்க இருக்கின்றன. தமிழகத்தில் செயல்படும் அரசுப்பள்ளிகள் இதுவரை இல்லாத அளவுக்குக் கடும் நெருக்கடியைச் சந்தித்து வருவது குறிப்பிடத்தக்கது. அதாவது 670 மேனிலைப் பள்ளிகள், 435 உயர்நிலைப் பள்ளிகள், 1924 தொடக்க மற்றும் 1042 நடுநிலைப் பள்ளிகள் உள்ளிட்ட 4500க்கும் மேற்பட்ட அரசுப் பள்ளிகள் இப்போது தலைமை ஆசிரியர்கள் இல்லாமல் இயங்கிக் கொண்டிருப்பதாகப் புள்ளிவிவரங்கள் வழி அறிய முடிகிறது.
இதுதவிர, தொடக்கக்கல்வித் துறையில் மட்டும் 1877 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களும் 4475 இடைநிலை ஆசிரியர் பணியிடங்களும் பல்வேறு காரணங்களால் காலியாக இருப்பதாக செய்தி வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது. இதுகுறித்து அரசுக்கும் சமூகத்திற்கும் கவலையோ, வருத்தமோ கிஞ்சித்தும் இருப்பதாகத் தெரியவில்லை. குறைந்தபட்சம் அக்கறை கொண்டதாகக் கூட தென்படாதது வருந்தத்தக்கதாகும்.
இந்த அவலநிலை நீதிமன்ற வழக்குகளைக் காரணம் காட்டி கடந்த ஓரிரு ஆண்டுகளுக்கு மேலாக உயர்நிலை மற்றும் மேனிலைப்பள்ளிகளில் தலைமையாசிரியர் பதவி நிரப்பப்படாமல் இருந்து வந்த நிலையில் நடப்புக் கல்வியாண்டில் இதன் நீட்சியாக 6-14 பள்ளி வயதுக் குழந்தைகள் பயிலும் நடுநிலை மற்றும் தொடக்கப்பள்ளிகளிலும் விரிந்து படர்ந்து விட்ட கொடுமையை என்னவென்பது?
தலைமைப்பதவி என்பது ஏதோ ஒரு நாற்காலியில் யாரோ ஒருவரை அமர்த்திடும் பொம்மைப் பதவி அல்ல. அஃது ஒட்டுமொத்த பள்ளி நிர்வாகத்தையும் ஒரு குடையின் கீழ் செம்மையாக வழிநடத்திடும் ஆளுமை கொண்டதாகும். ஒரு நாட்டின் நுண்ணிய அலகாக விளங்கும் குடும்பம் மற்றும் ஒரு குடும்பத்தின் பேருருவாகத் திகழும் நாடு ஆகிய இரண்டிற்கும் நல்ல தலைமை நிச்சயம் அவசியம். வெறும் கணிணிகளும் கோப்புகளும் தாள்களும் தூசுகளும் நிரம்பிய அலுவலகங்களுக்கே ஒரு தலைமைப்பதவி இன்றியமையாததாக ஈண்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.
அந்த வகையில் பள்ளிகள் என்பவை வெறும் செங்கற்கள் சூழ்ந்த வெற்று அறைகள் அல்லவே; பிஞ்சு உயிர்கள் இன்புற்று வாழும் கற்றல் வாழிடங்களாவன. பெயருக்குப் பொறுப்பு ஆசிரியர் ஒருவரை அந்த இடத்தில் தற்காலிகமாக நியமித்து விட்டால் எல்லாம் சரியாகி விடும் என்று நம்புவது பேதைமை. எந்தவொரு அதிகாரமும் அடிபணிந்து பணிபுரிதலும் இல்லாத இடத்தில் நல்ல கற்றல் விளைவுகளை எவ்வாறு எதிர்பார்க்க இயலும்?
அதுபோல், இந்த நெருக்கடியான காலகட்டத்தில் வீணாகும் கல்வியை எதைக் கொண்டு ஈடுகட்ட முடியும்? கல்வி தானே என்கிற அலட்சியம் அதுகுறித்து சம்பந்தப்பட்ட அனைவரிடமும் மேலோங்கி இருப்பதுதான் இதற்கு முழுமுதற் காரணமாகும். இதையே நாட்டுக்கு, வீட்டுக்கு, உயிருக்குக் கேடு தரும் மதுவை ஓர் ஆணை மூலம் மூடச் சொல்லிவிட்டால் அந்த ஆணையைச் சிரமேற்கொண்டு பணிந்து இழுத்து மூடி விடுவார்களா என்ன? அவமதிக்க இங்கு வலியுறுத்தவில்லை. அக்கறை எடுத்துக் கொண்டு எந்தத் தரப்பும் பாதிக்காத வண்ணம் உரிய காலத்தில் தக்கதொரு கொள்கை முடிவு எடுப்பதில் ஏன் இவ்வளவு அசட்டை என்பது தான் இங்கு கேள்வி!
எங்கேனும் நிரந்தரமாக ஆண்டு கணக்கிலோ அல்லது மாதக் கணக்கிலோ பொறுப்பு மாவட்ட ஆட்சியர், வருவாய் அலுவலர், வட்டாட்சியர், செயற்பொறியாளர், ஆணையர், தலைமை மருத்துவ அலுவலர், சார் பதிவாளர், காவல் கண்காணிப்பாளர் பணியிடங்கள் இருப்பதாகத் தெரியவில்லை. ஆனால், தலைமையாசிரியர் பணியிடத்திற்கு மட்டும் கூடுதல் பொறுப்புப் பதவியாக மாநில அளவிலும் சரி, ஒன்றிய அளவிலும் சரி போதிய பணிமூப்பு இல்லாத, எஞ்சிய தம் பணிக்காலத்தில் தலைமையாசிரியர் பதவி உயர்வே கிடைக்க வாய்ப்பில்லாத சம்பந்தப்பட்ட பள்ளி அளவில் மட்டுமே பணியில் மூத்த ஆசிரியரை பெருந்தன்மையோடு நியமிப்பதாகப் பறைசாற்றிக் கொள்வது என்பதும் கடமை முடிந்து விட்டது என்று அதுகுறித்து பேசாதிருப்பது என்பதும் நற்செயல் ஆகாது.
எல்லாவற்றிற்கும் மேலே உச்சியிலும் உயரத்திலும் இருப்பவர்கள் பார்த்துக் கொள்வார்கள் என்றால் மக்களின் மனசாட்சியாகவும் குடியாட்சியின் உயிர்நாடியாகவும் இறையாண்மையின் இதயமாகவும் விளங்கும் மக்கள் மன்றங்கள் மற்றும் அரசுகளின் நிலைதான் என்ன? வளமான, வலிமையான, உயர்வான, உன்னதமான மானுடத்தை உண்டுபண்ணும் கல்வியை நட்டக் கணக்கில் சேர்த்து கைகழுவும் முயற்சியா? அல்லது தலைமுழுகும் பயிற்சியா? என்ற கேள்வி ஏழை, எளிய, விளிம்பு நிலை படிக்காத, பாமர பெற்றோர்களின் கேள்வியாக உள்ளது எண்ணத்தக்கது.
தலைமையாசிரியர் இல்லாவிட்டால் பள்ளி என்ன குடிமுழுகவா போகிறது என்று கேட்கத் தோன்றும். ஆம். ஆயிரம் அம்மாக்கள் வரலாம்; போகலாம். ஒவ்வொரு குழந்தையும் தேடித் தவிப்பது தமக்குச் சொந்தமான அம்மா ஒருவரைத்தான்! அப்படித்தான் ஒவ்வொரு பள்ளியும் தமக்குரிய தலைமையாசிரியருக்காகக் காத்திருக்கிறது...சுருங்கச் சொன்னால் தலைமையாசிரியர் இல்லாத பள்ளியும் கல்வியும் பாழ்! பள்ளியானது யாரோ ஒரு பொறுப்பு ஆசிரியரால் இயக்கப்படுமே ஒழிய தாமாக இயங்காது. அதாவது, செயற்கை சுவாசம் போல வேண்டுமானால் இழுத்துப் பறித்துக் கொண்டு மூச்சிருக்கும். சரியான இயக்கம் இருக்காது என்பது திண்ணம்.
நீதிக்குத் தேவையானவை தக்க ஆதாரங்களும் சாட்சியங்களும் வாதங்களும் மட்டுமே. மனித மதிப்புகளும் மாண்புகளும் ஒருபோதும் கணக்கில் கொள்ளப்படுவதில்லை. திடீரென்று ஒரேயொரு தகுதித் தேர்வு தேர்ச்சியில் தான் தலைமையாசிரியரின் தகுதி உள்ளது என்று கூறுவது விந்தையாக உள்ளது. இதற்கு முன் பணியாற்றும் அல்லது பணிபுரிந்து பணிநிறைவு பெற்ற தலைமையாசிரியர்கள் யாவரும் தக்க தகுதி வாய்ந்தவர்கள் இல்லையா? அவர்களின் தலைமையின் கீழ் கற்றுக்கொண்ட கல்வி கல்வியே ஆகாதா? இந்தியத் துணைக்கண்டத்தில் தமிழ்நாட்டில் தான் இன்றுவரை பள்ளிகள் அனைத்திலும் தக்க தகுதி படைத்தவர்கள் தாம் ஆசிரியராகப் பணிபுரியும் நிலை தொன்றுதொட்டு உள்ளது.
இதில் பொறுப்பு தலைமையாசிரியர்களின் நிலை பரிதாபத்துக்குரிய ஒன்றாகும். தாம் ஏற்கனவே வகித்து வந்த வகுப்பு அல்லது பாட ஆசிரியராகவும் இல்லாமல் வேறுவழியின்றிப் புதிதாகப் பொறுப்பேற்றிருக்கும் முழு அதிகாரம் மிக்க தலைமையாசிரியராகவும் பள்ளி நிர்வாகத் தலைவராகவும் பணிபுரிய முடியாமல் நாடோறும் வெந்து தணியும் கொடுமைகள் சொல்லவொணாதவை. சிங்க வேடமிட்டுக் கொண்டு பாவப்பட்ட பசுவாக சாதுவாக வாழ்தல் என்பதாகும்.
மேனிலைப்பள்ளி மற்றும் உயர்நிலைப் பள்ளிகளில் மட்டும் பொறுப்புத் தலைமையாசிரியர் பணியிடத்திற்கு பள்ளி மேலாண்மைக் குழு மூலமாக தக்க கல்வித்தகுதி மிக்க பட்டதாரிகளைத் தொகுப்பூதிய அடிப்படையில் நியமனம் செய்து கொள்ள அரசு வழிவகை செய்துள்ளது. நடுநிலைப் பள்ளிகள் மற்றும் தொடக்கப்பள்ளிகள் ஆகியவற்றிற்கு இந்த சலுகையில்லை. எனினும், இஃது ஓர் வேதனைக்குரிய சேதியாகும்.
ஏனெனில், கடந்த கல்வியாண்டு முதற்கொண்டு நடப்புக் கல்வியாண்டில் 1 - 5 வகுப்புகள் உள்ள தொடக்கப்பள்ளிகள் அனைத்திலும் எண்ணும் எழுத்தும் திட்டம் கோலாகலமாக நடந்து வரும் வேளையில் தலைமையாசிரியர் பணியிடங்கள் காலியாக இருப்பது வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள அடித்தட்டு மாணவர்களுக்கு இழைக்கப்படும் பெரும் அநீதியாகும். இத்திட்டம் 1,2,3 வகுப்புகளுக்கு பல்வேறு கற்றல் களங்கள் அடிப்படையிலும் 4, 5 வகுப்புகளுக்குக் கற்றல் களஞ்சியம் அடிப்படையிலும் முறையே அரும்பு, மொட்டு, மலர் மற்றும் காய், கனி என்று மாணவர்கள் வகைப்படுத்தப்பட்டு அவற்றின் அடிப்படையில் கற்றல் கற்பித்தல் நிகழ்த்துவதற்கு இன்றைய சூழலில் ஒருங்கிணைந்த வகுப்புகளின் ஆசிரியர்களே திணறி வருகின்றனர்.
இத்தகைய நிலையில் இரு ஒருங்கிணைந்த வகுப்புகளையும் தலைமையாசிரியர் இன்றி ஒருவரே கையாளுவது என்பது கடவுளால் கூட இயலாத காரியமாகும். பதிலியாக ஒருவேளை தொகுப்பூதிய அடிப்படையில் புதிய ஆசிரியர் ஒருவர் பணிநியமனம் செய்யப்பட்டாலும் அது ஒருபோதும் முழுத் தீர்வாகாது. அது கண்ணைக் கட்டிக் காட்டில் விட்டது போலத்தான் இருக்கும். எண்ணிய குறிக்கோள் நிறைவேறாது. காலையில் எண்ணும் எழுத்தும் வகுப்பறைக்குள் நுழைந்தது முதல் மாலை வெளியில் வரும்வரை ஒருங்கிணைந்த வகுப்புகளின் இருபால் வயது முதிர்ந்த, உடல் உபாதைகள் நிறைந்த ஆசிரியர்கள் தம்மை முழுதாக மறந்து பம்பரமாக எப்போதும் குழந்தைகள் முன்னிலையில் சுற்றிச் சுழன்று கொண்டிருக்க வேண்டிய நிலையில் கூடுதலாக இரட்டைப் பணிச்சுமை என்பது மானுட அறமாகாது. இதன் காரணமாக, தொடக்கநிலை ஆசிரியர்களிடம் மன அழுத்தம் அதிகரித்து பணியை விட்டே ஓடிப் போகும் எண்ணமே மேலோங்கக் கூடும்.
ஆசிரியர்களின் பணி நிமித்தம் காரணமாக ஏற்படும் இந்த மன அழுத்தம் பிஞ்சுக் குழந்தைகளையும் அடித்தள கல்வியையும் வெகுவாகப் பாதிக்கும் என்பதை அரசு காலத்தில் உணர்தல் நல்லது. அதுமட்டுமின்றி, தக்க கொள்கை முடிவெடுத்து காலியாக உள்ள அனைத்துப் பள்ளிகளுக்கும் தலைமையாசிரியர்களை நியமனம் செய்திட முன்வர வேண்டும். வழக்கு காரணங்களால் தற்போதைய சூழலில் பள்ளிகளில் ஏற்படும் கல்வி இழப்புகளை நீதிமன்றங்களில் சுட்டிக்காட்டி மனிதாபிமான அடிப்படையில் ஏழை, எளிய, விளிம்பு நிலை மாணவர்கள் சந்திக்கும் கற்றல் பாதிப்புகளைச் சரிசெய்யும் நோக்கில் உரிய வகையில் விலக்குப் பெற்று காலிப் பணியிடங்களை இன்மை ஆக்குதல் என்பது துரிதமாக மேற்கொள்ள வேண்டிய முடிவாகும்.
இருதரப்பு ஆசிரியர்களின் பிரச்சினைகளுக்காக அப்பாவி அரசுப் பள்ளிப் பிள்ளைகள் பாதிப்பது எந்த வகையிலும் நியாயமில்லை. இலவச கட்டாய தரமான கல்வி கற்பது என்பது ஒவ்வொரு குழந்தையின் அடிப்படை பிறப்புரிமை ஆகும். அதில் சுயநலம் காரணமாக மனித ஆக்கப் பேரிடரை விளைவிப்பதற்கு இங்கு யாருக்கும் உரிமையில்லை. இதுகுறித்து, தமிழக அரசின் நீண்ட நெடிய கனத்த மௌனம் கடைபிடித்தல் என்பது மாணவர் நலன் கருதி பார்க்கையில் சரியல்ல. சரியோ தவறோ ஏதேனும் ஒன்றை முன்வைப்பது தான் சாலச்சிறந்தது.
ஆசிரியர்களின் எந்தவொரு பதவி உயர்விற்கும் தகுதித் தேர்வு தேர்ச்சி தேவையில்லை என்பதை அரசு துணிந்து கொள்கை முடிவு எடுத்து அறிவிப்பது என்பது ஒரு வழியாகும். அல்லது தகுதித் தேர்வு தேவை என்று கருதும் பட்சத்தில் 2012 இல் பட்டதாரி மற்றும் இடைநிலை ஆசிரியர் பட்டியலின, பழங்குடியினருக்கான பின்னடைவுக் காலிப் பணியிடங்களில் (Backlog Vacancy) கட்டாயத் தகுதித் தேர்வு தேர்ச்சிக்கு ஐந்து ஆண்டுகள் சலுகை வழங்கி வழமைபோல் உரிய கல்வித் தகுதிகளை மட்டும் கணக்கில் கொண்டு பணிநியமனம் செய்தது போல பணிமூப்பு அடிப்படையில் பதவி உயர்வு பெறுவோருக்குத் தகுதித் தேர்வுத் தேர்ச்சிக்கான சலுகையை நீட்டித்து போதிய கால அவகாசம் வழங்குவது என்பது பிறிதொரு வழியாகும்.
இதுதவிர, குழந்தைகளின் கல்வி நலனைக் கவனத்தில் கொண்டு அதனை மையப்படுத்தி நீதிமன்றத்தில் நடப்புக் கல்வியாண்டிற்கு மட்டும் பதவி உயர்விற்கு ஆசிரியர் தகுதித் தேர்வு தேவை என்பதிலிருந்து சிறப்பு விலக்குப் பெற்று காலிப் பணியிடங்கள் அனைத்தையும் நிரப்பி வழிவகை காணுதல் என்பது மூன்றாவது மாற்று வழியாகும். அப்படி அல்லாமல் ஏதும் செய்ய வாளாதிருப்பது என்பது காலம் கடந்து பெறப்படும் நீதியின் பொருட்டுக் காட்டப்படும் பச்சைக்கொடியால் நடப்புக் கற்றலுக்கு ஒரு பயனும் இல்லை. இது வெறும் கையில் முழம் போடச் சொல்வதற்கு ஒப்பாகும்.
இறுதியாக, தலைமை ஆசிரியர்கள் நிரப்பப்படாதப் பள்ளிகள் தலையில்லாத உடம்பிற்கு ஈடாகும். தற்காலிக தொகுப்பூதிய பதிலிகளால் நிறைவான கல்வியும் முழுமையான அடைவும் கிடைப்பது அரிது. பேருக்கு ஒப்பேற்றுவதில் ஒரு பயனும் விளையப் போவதில்லை. முதல் பருவம் முடிய உள்ள நிலையிலும் இதுகுறித்து உறுதியான நடவடிக்கை இதுவரை எடுக்கப்படாதது பாராமுகத்தையே எடுத்துக் காட்டுவதாக அமைந்துள்ளது. பொதுமக்கள் வரிப்பணத்தில் ஒரு பெரும் பகுதியை ஆக்கிரமித்துக் கொள்ளும் பள்ளிக் கல்வித்துறையின் தொலைநோக்கு இலக்குகளுக்கு இதுபோன்ற நிலைகள் முட்டுக்கட்டைகள் ஆகாதா?
தமிழ்நாடு முழுவதும் நான்காயிரத்திற்கும் மேற்பட்ட தலைமையாசிரியர்கள் இல்லாத பள்ளிகளில் பயிலும் வறுமையிலும் அறியாமையிலும் உழலும் கல்வியறிவற்ற, பாமர மக்களின் கடைசி நம்பிக்கை நட்சத்திரமாக மிளிரும் பச்சிளம் குழந்தைகளின் கல்வியில் மண்ணை அள்ளிப் போடுவதற்கு நாம் யார்?
நன்றி: எழுத்தாளர் மணி கணேசன்
Subscribe to:
Posts (Atom)