Tuesday, July 30, 2024

வருமான வரி கணக்கில் தவறான தகவல் அளித்து 'ரீபண்டு' பெற்றால் நடவடிக்கை பாயும் - வருமான வரித்துறை எச்சரிக்கை.......

வருமான வரி கணக்கு தாக்கல் செய்யும்போது, 'ரீபண்டு' பெறுவதற்காக தவறான தகவல்களைத் தெரிவிக்கக் கூடாது. தவறான தகவல் தருவது அல்லது தகவலை மறைப்பது தண்டனைக்குரிய குற்றமாகும்' என, வருமான வரித்துறை எச்சரித்துள்ளது. கடந்த 2023 - 24 நிதியாண்டுக்கான வருமான வரி கணக்கு தாக்கல் செய்வதற்கான கடைசி நாள், இம்மாதம் 31ம் தேதி. இந்தக் காலக்கெடு நீட்டிக்கப்படாது என்று கூறப்படுகிறது. வருமான வரித்துறை மற்றும் அதை நிர்வகிக்கும் மத்திய நேரடி வரி வாரியம் ஆகியவற்றின் தகவலின்படி, இதுவரை, ஐந்து கோடிக்கும் மேற்பட்டோர் வருமான வரி கணக்கை தாக்கல் செய்துள்ளனர். மேலும் இதில், மூன்றில் இரண்டு பங்கினர், புதிய நடைமுறையின்படி கணக்கு தாக்கல் செய்துள்ளதாக புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன. வருமான வரி விதிகளின்படி, தற்போது, இரண்டு நடைமுறைகள் உள்ளன. பழைய நடைமுறையின்படி, வரி அடுக்கு மற்றும் அதற்கான வரி விகிதம் அதிகமாக இருக்கும். அதே நேரத்தில், பல்வேறு வரிச் சலுகைகளைப் பெற முடியும். புதிய நடைமுறையின்படி, வரி அடுக்கு குறைவாக இருப்பதுடன், வரி விகிதமும் குறைவாக இருக்கும். அதே நேரத்தில், இதில் வரிச்சலுகை கோர முடியாது. சமீபத்தில் தாக்கல் செய்யப்பட்ட மத்திய பட்ஜெட்டில், புதிய நடைமுறைக்கு பல புதிய சலுகைகளும் அறிவிக்கப்பட்டுள்ளன. இது நடப்பு நிதியாண்டுக்கான கணக்கு தாக்கலில் நடைமுறைக்கு வரும். 'ரிட்டர்ன்' எனப்படும் வருமான வரி கணக்கு தாக்கல் செய்வதற்கு, ஜூலை, 31ம் தேதி கடைசி நாள். கடந்தாண்டில் எட்டு கோடிக்கும் மேற்பட்டோர் கணக்குத் தாக்கல் செய்துள்ளனர். இதுவரை ஐந்து கோடிக்கும் அதிகமானோர் தாக்கல் செய்துள்ளனர். அடுத்த மூன்று நாட்களில், மீதமுள்ளவர்கள் தாக்கல் செய்வர் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், மத்திய நேரடி வரி வாரியம் சமீபத்தில், சில அறிவுறுத்தல்களை வெளியிட்டுள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது: வருமான வரி கணக்கு தாக்கல் செய்வோர், ரீபண்டு எனப்படும் பிடித்த வரியை திரும்ப பெறுவதற்காக சில தகவல்களை அளிக்கின்றனர். இதற்காக பொய்யான தகவல்களை அளிப்பது அல்லது தன் வருவாயை குறைத்துக் காட்டுவது போன்றவற்றில் ஈடுபட வேண்டாம். ரீபண்டு கேட்பவர்களின் விண்ணப்பங்கள் முழுமையாக ஆய்வு செய்யப்படுகின்றன. அதில் சந்தேகம் இருந்தால், சம்பந்தப்பட்டவருக்கு, நோட்டீஸ் அனுப்பி விளக்கம் கேட்கப்படும். அதிலும் திருப்தி இல்லை என்றால் அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுக்கப்படும். சரியான மற்றும் துல்லியமான தகவல்களை மட்டுமே கணக்கு தாக்கலில் தெரிவிக்க வேண்டும். அவை முறையாகப் பரிசீலிக்கப்பட்டு, ரீபண்டு அளிக்கப்படும். தவறான தகவல் அளிப்பது தண்டனைக்குரிய குற்றமாகும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. வரிச்சான்று -- அரசு விளக்கம் சமீபத்தில் தாக்கல் செய்யப்பட்ட மத்திய பட்ஜெட்டில், வெளிநாட்டுக்கு பயணம் செய்வதற்கு, வரி பாக்கி இல்லை என்ற சான்றிதழ் சமர்ப்பிப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.இது குறித்து மத்திய நிதி அமைச்சகம் அளித்துள்ள விளக்கம்:இந்த உத்தரவு அனைவருக்கும் அல்ல. வரிச் சட்டத்தின்படி, அதிக வரி நிலுவை வைத்துள்ளவர்கள், நிதி மோசடிகளில் ஈடுபட்டவர்கள் உள்ளிட்டோருக்கு மட்டுமே இந்த உத்தரவு பொருந்தும். வரி பாக்கியை வசூலிக்கவும், நிதி மோசடி செய்து வெளிநாடு தப்பிச் செல்வதைத் தடுக்கவும், கருப்புப் பணச் சட்டத்தின்படி, இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment