Saturday, July 26, 2014

மாவட்ட செயற்குழுக் கூட்டம்

               தமிழக ஆசிரியர் கூட்டணி கிருஷ்ணகிரி மாவட்டக் கிளையின் செயற்குழுக் கூட்டம் இன்று (26.07.2014) ஒசூர் சூடவாடி துவக்கப் பள்ளியில் நடைபெற்றது. 
                  கூட்டத்திற்கு மாவட்டத் தலைவர் திரு செ. இராஜேந்திரன் தலைமை தாங்கினார். முன்னதாக மாவட்டச் செயலாளர் இரா. பவுன்துரை அவர்கள் அனைவரையும் வரவேற்றார். 
          கூட்டத்தில் மாவட்டத் தலைவர் திரு செ. இராஜேந்திரன் அவர்கள் சேலம் சரக உருது உதவித் தொடக்கக் கல்வி அலுவலராகப் பணி மாற்றம் செய்யப்பட்டுள்ள முன்னாள் மாவட்டச் செயலாளர் திரு வ.மி. ஹபிபுர்ரஹ்மான் அவர்களுக்கு பாராட்டு தெரிவித்தல்,  மாவட்டக் கிளை சார்பில் புதிய மாநிலப் பொருப்பாளர்களுக்கு பாராட்டு விழா நடத்துதல் மற்றும் ”ஆசிரியர் இயக்க குரல்” சந்தா சேகரிப்பு இயக்கம் அனைத்து வட்டாரக் கிளைகளிலும் நடத்துதல் உள்ளிட்ட செய்திகளை தனது    உறையில் விரிவாக எடுத்துக் கூறினார். பின்னர் மாவட்டச் செயலாளர் அவர்கள் இதைச் செயல் வடிவம் பெறத் தக்க அறிவுரைகளை வழங்கிய பின்னர் அனைத்து வட்டாரப் பொருப்பாளர்களும் தமது கருத்துரைகளைப் பதிவு செய்தனர். அதன் பின் கீழ்க் கண்ட தீர்மானங்கள் ஒரு மனதாக நிறைவேற்றப்பட்டது. 
தீர்மானங்கள் :
1.  சேலம் சரக உருது உதவித் தொடக்கக் கல்வி அலுவலராகப் பணி மாற்றம் செய்யப்பட்டுள்ள முன்னாள் மாவட்டச் செயலாளர் திரு வ.மி. ஹபிபுர்ரஹ்மான் அவர்கள் பணி சிறக்க இச்செயற்குழு  பாராட்டு தெரிவிக்கிறது.
2. வரும்  12.10.2014 அன்று தளியில் தமிழக ஆசிரியர் கூட்டணி கிருஷ்ணகிரி மாவட்டக் கிளையின் சார்பில் புதிய மாநிலப் பொருப்பாளர்களுக்கு பாராட்டு விழா மிகச் சிறப்பாக நடத்துதல்.
3. அனைத்து வட்டாரங்களிலும் ”ஆசிரியர் இயக்க குரல்” சந்தா சேகரிப்பு இயக்கம் நடத்தி, 300க்கும் அதிகமான ஆயுட் சந்தாக்களை  சேர்த்து 12.10.2014 விழாவில் மாநில பொருப்பாளர்களிடம் வழங்குதல்.
               இன்றைய கூட்டத்தில் ஊத்தங்கரை, மத்தூர். ஒசூர், தளி, கெலமங்கலம், சூளகிரி ஆகிய ஒன்றியங்களின் பொருப்பாளர்களும், மாவட்ட தலைமை நிலையச் செயலாளர் திரு தூ. மனுநீதி, உள்ளிட்ட அனைவரும் கலந்துக்கொண்டனர்.
             இறுதியில் மாவட்டப் பொருளாளர் திரு அ.செ. நவீத்அக்பர் அனைவருக்கும் நன்றி கூறினார்.





















"பென்ஷனில் 3.96 மடங்கு திருத்தம் செய்யுங்கள்" 7வது ஊதியக்குழுவில் ஓய்வூதியர் முறையீடு

           மத்திய அரசின், ஏழாவது ஊதியக்குழுவுக்கு, அகில பாரத மூத்த குடிமக்கள் மற்றும் பென்ஷனர்கள் கூட்டமைப்பு சார்பில், பென்ஷன் உயர்வு குறித்து, தபால் மற்றும் இமெயில் மூலம் அனுப்பி உள்ளனர்.


            இக்கூட்டமைப்பு மாநிலத்தலைவர் சாமிநாதன் தலைமையில், ஈரோட்டில் இருந்து, பென்ஷனர்கள், ஏழாவது ஊதியக்குழுவுக்கு, அனுப்பிய கடிதத்தில் கூறியதாவது:உயர்ந்து வரும் மருந்துகளின் விலை, மருத்துவ கட்டணம், வயது முதிர்வு போன்றவைகளை கணக்கிட்டு, மாத மருத்துவப்படியை, 2,500க்கு குறையாமல் வழங்குதல். 50க்கு பதில், 65 சதவீதமும், 30க்கு பதில், 45 சதவீத குடும்ப பென்ஷன் வழங்க வேண்டும். பென்ஷன், குடும்ப பென்ஷன், 3.96 மடங்கு திருத்தம் செய்ய வேண்டும். திருந்திய பென்ஷன், குடும்ப பென்ஷன் அமலாகும் நாளுக்கு பின் உள்ளவர்களைவிட, முன் உள்ளவர்களுக்கு குறைவு ஏற்படுவதை நிவர்த்தி செய்ய வேண்டும். குறைந்த பட்ச, அதிகப்பட்ச ஊதிய விகிதத்தை மாற்றி அமைக்க வேண்டும்.பத்தாண்டுகளுக்கு பதில், ஐந்தாண்டுகளுக்கு ஒரு முறை அல்லது, 50 சதவீதம் டி.ஏ., உயர்வில், பென்ஷன், குடும்ப பென்ஷன் திருத்த வேண்டும். கம்யூட்டேஷன் பிடித்தம், 12 ஆண்டாக, ஐந்தாவது ஊதியக்குழு பரிந்துரைப்படி நிர்ணயிக்க வேண்டும்.புதிய பென்ஷன் திட்டத்தை கைவிட வேண்டும். வீட்டு வாடகைப்படி அனுமதிக்க வேண்டும், என்பது உட்பட பல்வேறு கோரிக்கைகளை, மனுவாக அனுப்பி வைத்தனர்.

15 முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு மாறுதல் மற்றும் 15 மாவட்டக் கல்வி அலுவலர்களுக்கு பதவி உயர்வு அளித்து அரசு உத்தரவு

             பள்ளிக்கல்வி - 15 முதன்மைக் கல்வி அலுவலர்கள் பணி மாறுதல் மற்றும் 15 மாவட்டக் கல்வி அலுவலர்கள் அதனையொத்த பணியிடங்களில் பணிபுரிபவர்களுக்கு முதன்மைக் கல்வி அலுவலர்களாக பதவி உயர்வு அளித்து அரசு உத்தரவு

Saturday, July 12, 2014

Thursday, July 10, 2014

இசையில் திருக்குறள்....

திருக்குறளுக்கு இசையமைக்கும் பணி நிறைவு: "1 லட்சம் குறுந்தகடுகள் இலவசமாக விரைவில் வழங்கப்படும்'

          திருக்குறளுக்கு இசையமைக்கும் பணி நிறைவு பெற்றுள்ளது. விரைவில் 1 லட்சம் குறுந்தகடுகள் இலவசமாக வெளியிடப்படும் என்றார் இசையமைப்பாளர் பரத்வாஜ்.தென்காசி திருவள்ளுவர் கழகம் மற்றும் மூத்த குடிமக்கள் மன்றம் சார்பில் இசையமைப்பாளர் பரத்வாஜுக்கு செவ்வாய்க்கிழமை பாராட்டு விழா நடைபெற்றது.

       திருக்குறளின் 1330 குறள்களுக்கும் இசையமைத்து குறுந்தகடாக வெளியிட உள்ள அவரின் அரிய சேவையைப் பாராட்டி இந்ப் நிகழ்ச்சி நடைபெற்றது. தென்காசி திருவள்ளுவர் கழகத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு மூத்த குடிமக்கள் மன்றத் தலைவர் துரை.தம்புராஜ் தலைமை வகித்தார். செயலர் ஆ.சிவராமகிருஷ்ணன் விளக்கவுரையாற்றினார்.

இதில், இசையமைப்பாளர் பரத்வாஜ் பேசியதாவது:

திருக்குறளை சாதாரண மக்களிடம் கொண்டு சேர்ப்பதுதான் என்னுடைய நோக்கம். அதற்காக உலகம் முழுவதும் உள்ள தமிழர்களை ஒருங்கிணைத்து பெருமுயற்சியுடன் திருக்குறளுக்கு இசையமைத்து, இப்போது இறுதிக்கட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன.

ஒரு லட்சம் சி.டி.க்கள் தயாரித்து அதனை உலகம் முழுவதுமுள்ள தமிழர்களுக்கு வழங்க ஏற்பாடுகளை செய்து வருகிறேன். அவற்றை இலவசமாக வழங்க முயற்சிகள் மேற்கொண்டு வருகிறேன் என்றார் அவர்.

சீதாராமன், புலவர் செல்வராஜ், பேராசிரியர் ராமச்சந்திரன்,கணபதிசுப்பிரமணியன், ராஜாமுகம்மது ஆகியோர் பேசினர்.

பட்ஜெட் - 2014-15 : பட்ஜெட்டில் வெளியிடப்பட்ட கல்வித்துறை தொடர்பான அறிவிப்புகள்


* ஆசிரியர் பயிற்சிக்கான மதன் மோகன் மாளவியா திட்டம்
* நாட்டில், புதிதாக 5 ஐ.ஐ.டி....,கள் மற்றும் 5 ஐ.ஐ.எம்.,கள் அமைக்கப்படும்
* பல் மருத்துவ வசதியுடன் கூடிய, 12 கூடுதல் அரசு மருத்துவ கல்லூரிகள்
ஏற்படுத்தப்படும்
* வேலை வாய்ப்பை பெறுவதற்கான பயிற்சிகளையும், உதவிகளையும் வழங்கும் திறன் இந்தியா திட்டம்(Skill India Programme) விரைவில் அறிமுகம்
* நாட்டிலுள்ள அனைத்து மகளிர் பள்ளிகளிலும், தேவையான கழிப்பறை மற்றும் குடிநீர் வசதி ஏற்படுத்துவதற்கு தேவையான நிதி ஒதுக்கப்படும்
* பெண் குழந்தைகளின் கல்விக்கான, தொழில்நுட்ப மேம்பாட்டு நிதி திட்டத்தின் மேம்பாட்டிற்காக ரூ.100 கோடி ஒதுக்கீடு
* ஹிமாலயன் படிப்புகளுக்கான தேசிய மையத்தை உத்ரகாண்ட் மாநிலத்தில் அமைக்க, ரூ.100 கோடி ஒதுக்கீடு
* ஆந்திரா மற்றும் ராஜஸ்தான் மாநிலங்களில், புதிய வேளாண் பல்கலைக்கழகங்கள் தோற்றுவிக்கப்படும்
* தெலுங்கானா மற்றும் ஹரியானா மாநிலங்களில் புதிய தோட்டக்கலை பல்கலைக்கழகங்கள் ஏற்படுத்தப்படும்
* நாட்டின் இளைஞர்களிடையே தலைமைத்துவப் பண்பை வளர்க்கும்பொருட்டு, இளம் தலைவர்கள் திட்டத்தை(Young Leaders Programme) உருவாக்க, ரூ.100 கோடி ஒதுக்கீடு
* மணிப்பூர் மாநிலத்தில் புதிதாக விளையாட்டுப் பல்கலைக்கழகம் அமைக்க, ரூ.100 கோடி ஒதுக்கீடு
* எதிர்வரும் ஆசிய விளையாட்டுப் போட்டிகளை முன்னிட்டு, விளையாட்டு வீரர்களுக்கு பயிற்சியளிக்க, ரூ.100 கோடி ஒதுக்கீடு
* வெகு விரைவில், நாட்டில், தேசிய விளையாட்டு ஆணையம் அமைக்கப்படுவதோடு, காஷ்மீர் மாநிலத்தில் சர்வதேச தரத்திலான விளையாட்டு மையங்களும் உருவாக்கப்படும்
* புனேவிலுள்ள எப்.டி.ஐ.ஐ., கொல்கத்தாவிலுள்ள எஸ்.ஆர்.எப்.டி.ஐ., ஆகியவை, தேசிய முக்கியத்துவம் வாய்ந்த கல்வி நிறுவனங்களாக தரம் உயர்த்தப்படும்.
* முஸ்லீம் மத கல்வி நிறுவனமான மதரஸாக்களை நவீனமாக்க, ரூ.100 கோடி ஒதுக்கீடு
* லோக் நாயக் ஜெய்ப்பிரகாஷ் நாராயண் பெயரில், மத்திய பிரதேச மாநிலத்தில் ஒரு உயர்மதிநுட்ப மையம்(Centre of Excellence) அமைக்கும் திட்டம்
* பருவநிலை மாற்றத்தைப் பற்றி ஆய்வுசெய்ய புதிய ஆராய்ச்சி நிறுவனம் அமைக்கப்படும்
* பொதுத்துறை மற்றும் தனியார் பங்களிப்புடன், கைவினைக் கலைகள் தொடர்பான ஹஸ்ட்கலா அகடமியை மேம்படுத்த திட்டம்
* சமூக ரேடியோ மையங்களுக்கு(Community Radio Centres), ரூ.100 கோடி ஒதுக்கீடு
* தேசிய கிராமப்புற இணையம் மற்றும் தொழில்நுட்ப திட்டத்திற்கு ரூ.500 கோடி ஒதுக்கீடு

Tuesday, July 8, 2014

2015க்குள் அனைவருக்கும் கல்வி அடைய முடியுமா?

              வரும் 2015ம் ஆண்டிற்குள், நாட்டிலுள்ள அனைத்துக் குழந்தைகளுக்கும் பள்ளிக் கல்வியை கிடைக்க செய்துவிட வேண்டுமென்ற லட்சியம் நிறைவேறுவது சாத்தியமில்லை என்று யுனெஸ்கோ அமைப்பினுடைய ஆய்வின் மூலம் தெரியவந்துள்ளது.

      யுனெஸ்கோவின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: உலகெங்கிலும் மொத்தம் 57.8 மில்லியன் குழந்தைகள் ஆரம்ப பள்ளி செல்லாமல் உள்ளனர். அதில் இந்தியாவின் பங்கு 1.4 மில்லியன்(14 லட்சம்). இதன்மூலம், தொடக்கப் பள்ளி செல்லாத குழந்தைகள் அதிகம் உள்ள நாடுகளில், உலகளவில் இந்தியா முதல் 5 இடங்களுக்குள் வருகிறது. பாகிஸ்தானும் முதல் 5 நாடுகள் பட்டியலில் இடம் பிடித்துள்ளது.

          பள்ளிக்கு செல்லாத குழந்தைகள் பற்றி, Education for All (EFA) என்ற பெயரில், யுனெஸ்கோ அமைப்பு, ஒரு உலகளாவிய ஆய்வு நடத்தியது. அதில்தான், மேற்கண்ட விபரம் தெரியவந்துள்ளது. குழந்தைகளை ஆரம்ப பள்ளிக்கு அனுப்பும் நடவடிக்கையில், மிகவும் எளிய நாடுகளான நேபாளமும், புருண்டியும் வெகுவாக முன்னேற்றம் கண்டுள்ளன என்று இந்த ஆய்வு தெரிவிக்கிறது.

     உலகளாவிய அளவில் பள்ளிக்கு செல்லாத 43% குழந்தைகளில், ஆண்களின் எண்ணிக்கை 1 கோடி. பெண்களின் எண்ணிக்கை 1.5 கோடி. இந்தியா, இந்தோனேஷியா, நைஜர், நைஜீரியா, பாகிஸ்தான் மற்றும் சூடான் ஆகிய நாடுகளில், ஒவ்வொன்றிலும், 10 லட்சத்திற்கும் அதிகமான குழந்தைகள் பள்ளி செல்லாமல் உள்ளனர் என்று அந்த ஆய்வு தெரிவிக்கிறது.