தேசிய ஆசிரியர் கல்வியியல் கவுன்சில்
(என்.சி.டி.இ.) வெளியிட்டுள்ள வழிகாட்டுதலின்படி, பி.எட்., எம்.எட்.
ஆசிரியர் கல்வியியல் பட்டப் படிப்புகளின் படிப்புக் காலம் இரண்டு ஆண்டுகளாக
உயர்ந்துள்ளது.
இந்தப் படிப்புகள் இதுவரை ஓராண்டு படிப்புகளாக
இருந்து வந்தன. தரமான ஆசிரியர்களை உருவாக்கும் நோக்கத்தில் படிப்புக் காலம்
உயர்த்தப்பட்டுள்ளதாக என்.சி.டி.இ. அதிகாரிகள் தெரிவித்தனர்.
உச்ச நீதிமன்ற உத்தரவின்படி, நாடு முழுவதும்
உள்ள ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகங்கள், கல்வி நிறுவனங்களுக்கான புதிய
வழிகாட்டுதலை (என்.சி.டி.இ. வழிகாட்டுதல் 2014) முதன் முறையாக தேசிய
ஆசிரியர் கல்வியியல் கவுன்சில் வெளியிட்டுள்ளது.
இந்த வழிகாட்டுதல் உடனடியாக நடைமுறைக்கு வருவதாக அதன் தலைவர் சந்தோஷ் பாண்டா தெரிவித்தார்.
இதில் ஆசிரியர் கல்வியியல் படிப்பின் தரத்தை மேம்படுத்துவதற்காக பல்வேறு புதிய நடைமுறைகள் கொண்டு வரப்பட்டுள்ளன.
புதிய வழிகாட்டுதலின்படி, இதுவரை ஓராண்டு
படிப்பாக இருந்து வந்த இளநிலை ஆசிரியர் கல்வியியல் பட்டப் படிப்பு
(பி.எட்.), முதுநிலை ஆசிரியர் கல்வியியல் பட்டப் படிப்பு (எம்.எட்.)
ஆகியவற்றின் படிப்புக் காலம் 2 ஆண்டுகளாக உயர்த்தப்பட்டுள்ளது.
ஆண்டுக்கு 200 வேலை நாட்கள் கல்லூரி
நடத்தப்பட்டிருக்க வேண்டும். மேலும், பி.எட். கல்லூரி தொடங்க
விண்ணப்பிக்கும் அமைப்பு மொத்தமாக 2,500 சதுர மீட்டர் பரப்பளவு
நிலத்தையும், 1,500 சதுர மீட்டர் பரப்பில் கட்டட வசதியையும் கொண்டிருக்க
வேண்டும்.
பி.எட்., எம்.எட். இரண்டு படிப்புகளையும் கொண்ட
கல்லூரி தொடங்க குறைந்தபட்சம் 3,000 சதுர மீட்டர் நிலப் பரப்பையும், 2,000
சதுர மீட்டர் பரப்பில் கட்டட வசதியையும் கொண்டிருக்க வேண்டும்.
பட்டயப் படிப்புக்கு ஒரே பெயர்: என்.சி.டி.இ.
வழிகாட்டுதலின்படி நாடு முழுவதும் பி.டி.சி., ஜே.பி.டி., டி.எட். என
பல்வேறு பெயர்களில் வழங்கப்பட்டு வரும் இரண்டு ஆண்டு ஆசிரியர் கல்வியியல்
பட்டயப் படிப்பு இப்போது "டி.எல்.எட்' (தொடக்க ஆசிரியர் கல்வியியல் பட்டயப்
படிப்பு) என ஒரே பெயராக மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
மழலையர் பள்ளி ஆசிரியர் பட்டயப் படிப்பு: 3
வயது முதல் 6 வயது வரையுடைய குழந்தைகளின் திறனை வளர்க்கும் வகையில் புதிதாக
2 ஆண்டு மழலையர் பள்ளி ஆசிரியர் பட்டயப் படிப்பை (டி.பி.எஸ்.இ.)
என்.சி.டி.இ. அறிமுகம் செய்துள்ளது.
இதுபோல் புதிய 3 ஆண்டு ஒருங்கிணைந்த
பி.எட்.,எம்.எட். படிப்பு, 4 ஆண்டு பி.எஸ்சி.பி.எட்., பி.ஏ.பி.எட்.,
ஆகியவற்றுக்கான புதிய வழிகாட்டுதல்களும் வெளியிடப்பட்டுள்ளன.