Thursday, June 9, 2016

பள்ளிகள் ஆண்டாய்வு மற்றும் பார்வை - இயக்குநரின் செயல்முறைகள்

       பள்ளிகள் ஆண்டாய்வு மற்றும் பார்வையின் போது கூடுதல் / உதவி தொடக்கக்கல்வி அலுவலர்கள் மேற்கொள்ளவேண்டியவை சார்பான இயக்குநரின் செயல்முறைகள்



Tuesday, May 31, 2016

சென்னையில் நாளை முதல் புத்தகக் கண்காட்சி .....

        சென்னையில் 39-ஆவது புத்தகக் கண்காட்சி தீவுத்திடலில் புதன்கிழமை (ஜூன்1) தொடங்க உள்ளது. தென்னிந்திய புத்தக விற்பனையாளர்கள்- பதிப்பாளர்கள் சங்கத்தின் (பபாசி) சார்பில் நடைபெறவுள்ள இந்தப் புத்தகக் கண்காட்சியில் சுமார் 700 அரங்குகள் இடம்பெறவுள்ளன. ஜூன் 1-ஆம் தேதி முதல் 13-ஆம் தேதி வரை புத்தகக் கண்காட்சி நடைபெறும்.

             இது தொடர்பாக சங்கத்தின் பொருளாளர் ஒளிவண்ணன் கூறியது: புலம் பெயர்ந்த தமிழர்களை அங்கீகரிக்கும் வகையில் இந்த ஆண்டு சிங்கப்பூர் வாழ் தமிழ் எழுத்தாளர்களுக்கென்று ஒரு அரங்கம் பிரத்யேகமாக ஒதுக்கப்பட்டுள்ளது. சிங்கப்பூர் வாழ் தமிழ் எழுத்தாளர்களின் படைப்புகள் அந்த அரங்கில் காட்சிப்படுத்தப்படும். மேலும், அந்த எழுத்தாளர்களுடன் கலந்துரையாடல், விவாதம் உள்ளிட்ட நிகழ்வுகளுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கண்காட்சியில் சுமார் 6 ஆயிரம் புதிய புத்தகங்களும், சுமார் ஒரு லட்சம் நூல்களும் இடம் பெறவுள்ளன. பார்வைத் திறன் குறைபாடுடையவர்களுக்கான பிரெய்லி நூல்கள் அடங்கிய சிறப்பு அரங்கமும் அமைக்கப்பட உள்ளது.
              நுழைவுக் கட்டணம் ரூ.10: புத்தகக் கண்காட்சிக்கான நுழைவுக் கட்டணம் ரூ. 10 ஆகும். வார நாள்களில் பிற்பகல் 1 மணி முதல் இரவு 9 மணி வரையிலும், வார இறுதி நாள்கள், விடுமுறை நாள்களில் காலை 11 முதல் இரவு 9 மணி வரை கண்காட்சி நடைபெறும். கண்காட்சியில் வாங்கும் புத்தகங்களுக்கு 10 சதவீதம் சலுகை அளிக்கப்படும்.
           மேலும் மாடித் தோட்டம் குறித்த அரங்கு, உணவுத் திருவிழா, ஓவியம், இசை, சார்ந்த போட்டிகளும் நடைபெறும் என்றார் அவர்.

பள்ளி கல்வித்துறை மாவட்ட கல்வி அதிகாரிகள் மற்றும் தலைமை ஆசிரியர்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கை ......

      
           கோடை விடுமுறைக்கு பின், நாளை மறுதினம் (ஜூன், 1), அரசு பள்ளிகள் திறக்கப்படுகின்றன. அதற்கான ஆயத்த பணிகள் குறித்து, பள்ளி கல்வித்துறை, மாவட்ட கல்வி அதிகாரிகள் மற்றும் தலைமை ஆசிரியர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.

அதில் கூறியிருப்பதாவது:

          பள்ளி வளாக தூய்மை, காற்றோட்டத்துடன் சுத்தமான வகுப்பறை, பாதுகாக்கப்பட்ட சுத்தமான குடிநீர், சுகாதாரமான கழிப்பிடங்கள், கருப்பு வண்ணம் பூசப்பட்ட கரும்பலகை இருக்க வேண்டும். வகுப்பறை மின் விசிறி, மின்விளக்குகள் நல்ல நிலையில் இயங்க வேண்டும். பள்ளி மேற்கூரை தூய்மையாக இருக்க வேண்டும்.குடிநீர் தொட்டியை, பிளீச்சிங் பவுடரால் சுத்தப்படுத்தியிருக்க வேண்டும். குழாய்களில் தண்ணீர் வீணாவதை தவிர்க்க வேண்டும். கழிப்பறை பராமரிப்பு சரியாக இருக்க வேண்டும். இதற்கான செலவினத்தை பெற்றோர் ஆசிரியர் கழக நிதி அல்லது பொது நிதியை பயன்படுத்தலாம்.மாணவர் பதிவேடு, முழுமையான விவரங்களுடன் தயாராக இருக்க வேண்டும். ஆசிரியர்களின் பதிவேடு, ஊழியர்கள் பதிவேடு சரியாக இருக்க வேண்டும்.

    ஆசிரியர்களுக்கான கால அட்டவணை, எழுது பொருட்கள், மாணவர்களுக்கான இலவச புத்தங்களை தயாராக வைத்திருக்க வேண்டும்.மாணவர் சேர்க்கையை அதிகரிப்பதற்கான நடவடிக்கையை தீவிரப்படுத்த வேண்டும்; விழிப்புணர்வு ஊர்வலம், துண்டுபிரசுரம் வினியோகிக்க வேண்டும். வீடு வீடாகச் சென்று, அரசு பள்ளியின் தேர்ச்சி, சிறப்பம்சங்களை தெரிவிக்க வேண்டும். பள்ளி திறக்கும் நாளில், அனைத்து குழந்தைகளுக்கும் பாடப்புத்தகங்கள் வழங்க வேண்டும்; முதல் நாளிலேயே, கற்பித்தல் பணியை துவக்க வேண்டும். ஆசிரியர்கள், பள்ளி துவங்குவதற்கு, 30 நிமிடம் முன்னதாக வந்து, பள்ளி சூழலை கண்காணிக்க வேண்டும்.மாணவர் மத்தியில், நற்பண்புகளை விதைக்கும் வகையில், நீதி போதனை வகுப்பு நடத்த வேண்டும்.

           நல்ல கதைகள், கருத்துகளை கற்பிக்க வேண்டும். மாணவர்களுக்கு வாசிப்புதிறன், கையெழுத்து பயிற்சி, வாசிப்பு பயிற்சி, எழுத்து பயிற்சி அளிக்க வேண்டும். மாணவர்கள் மத்தியில் நூலக வாசிப்பு ஆர்வத்தை தூண்டுவது முக்கியம். தினசரி நாளிதழ்களை வாசிக்கச் செய்ய வேண்டும். மாணவர்களை, மாலை நேரங்களில் விளையாட ஊக்குவிக்க வேண்டும்.

           எக்காரணம் கொண்டும், வகுப்பறையில் ஆசிரியர் இல்லாத நிலை கூடாது; விடுப்பில் உள்ள ஆசிரியர்களுக்கு பதிலாக, மாற்று ஆசிரியர்கள் வகுப்புக்குச் சென்று கற்பிக்க வேண்டும். பணி நேரத்தில் பள்ளி வளாகத்தை விட்டு வெளியே செல்ல, மாணவர்களை அனு மதிக்கக் கூடாது. தவிர்க்க முடியாத நேரத்தில், தலைமை ஆசிரியர் அனுமதி பெற்று, பதிவேட்டில் பதிவு செய்த பின்பே செல்ல வேண்டும். ஆசிரியர்கள், வகுப்பறையில் மொபைல் போன் பயன்படுத்தக்கூடாது.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

Sunday, May 29, 2016

4-ஆம் வகுப்பு வரை மட்டுமே கட்டாயத் தேர்ச்சி இருக்க வேண்டும்: நிபுணர் குழு பரிந்துரை. .....

         அனைவரையும் தேர்ச்சி பெற வைக்கும் திட்டத்தை 4-ஆம் வகுப்பு வரை மட்டுமே செயல்படுத்த வேண்டும் என்றும், 5-ஆம் வகுப்பு முதல் தேர்வு நடத்தப்பட வேண்டும் என்றும் சுப்பிரமணியன் குழு பரிந்துரை செய்துள்ளது. 
             அனைவருக்கும் கட்டாயக் கல்வி திட்டத்தின்படி தற்போது 8-ஆம் வகுப்பு வரை அனைவரையும் தேர்ச்சி பெற வைக்கும் திட்டம் அமலில் உள்ளது. புதிய கல்விக் கொள்கையை வகுப்பது தொடர்பாக மத்திய அமைச்சரவையின் முன்னாள் செயலாளர் டி.எஸ்.ஆர்.சுப்பிரமணியன் தலைமையில் நிபுணர் குழு அமைக்கப்பட்டது. அந்தக் குழு, தனது ஆய்வறிக்கையை மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சகத்திடம் கடந்த வெள்ளிக்கிழமை சமர்ப்பித்தது. தங்களது 200 பக்க ஆய்வறிக்கையில், தொடக்கக் கல்வி முதல் உயர் கல்வி வரையிலான கல்வியின் தரத்தை உயர்த்துவதற்கு பல்வேறு பரிந்துரைகளை அந்தக் குழு தெரிவித்திருப்பதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. குறிப்பாக, உயர் கல்வியின் தரத்தை உயர்த்தும் வகையில் வெளிநாட்டு கல்வி நிறுவனங்களை இந்தியாவில் தொடங்க அனுமதி அளிக்கலாம் என்று பரிந்துரைக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. 
        மேலும், கட்டாயத் தேர்ச்சி திட்டத்தை 4-ஆம் வகுப்பு வரை மட்டுமே செயல்படுத்த வேண்டும் என்றும், 5-ஆம் வகுப்பு முதல் தேர்வு நடத்தப்பட வேண்டும் என்றும் நிபுணர் குழு பரிந்துரை செய்துள்ளது. இதுகுறித்து தகவலறிந்த வட்டாரங்கள் மேலும் கூறியதாவது: இந்திய கல்வி நிறுவனங்கள் பல உலக தர வரிசையில் இடம்பெற முடிவதில்லை. இந்நிலையில், உயர் கல்வியின் தரத்தை உயர்த்தும் நோக்கில், குறிப்பிட்ட சில நிபந்தனைகளுடன் வெளிநாட்டு கல்வி நிறுவனங்களுக்கு இந்தியாவில் அனுமதி அளிக்கலாம். மாணவர்களின் திறன் வளர்ச்சி மற்றும் தொழில் பயிற்சி சார்ந்ததாக கல்வி இருக்க வேண்டும். தொழிற் கல்வியை நெறிமுறைப்படுத்த யூஜிசி, ஏஐசிடிஇ போன்ற அமைப்புகள் அடங்கிய ஒழுங்குமுறை ஆணையத்தை அமைக்க வேண்டும். நுழைவுத் தேர்வுகளில் பயிற்சி வகுப்புகள் ஏற்படுத்தும் விளைவுகள் குறித்து அந்தக் குழு விரிவாக ஆய்வு செய்துள்ளது. மாணவர்களின் நிர்வாகத் திறனை மேம்படுத்தும் நோக்கில் கல்வியில் மாற்றம் செய்ய வேண்டும் எனவும் நிபுணர் குழு பரிந்துரைத்துள்ளது.

புதிய பஸ் பாஸ் வழங்கும் வரை பள்ளி மாணவ, மாணவிகள் பழைய பாஸ் பயன்படுத்தலாம் .....

          பள்ளி மாணவர்களுக்கு புதிய பாஸ் வழங்கும் வரையில் தற்போதுள்ள பழைய பஸ் பாஸை பயன்படுத்தலாம். நடத்துநர்கள் மாணவர்களிடம் கட்டணம் வசூலிக்கக் கூடாது என போக்குவரத்து துறை உத்தரவிட்டுள்ளது.

         தமிழகத்தில் கோடை விடுமுறை முடிந்து வரும் ஜூன் 1-ம் தேதி பெரும்பாலான பள்ளிகள் திறக்கப்படவுள்ளன. மாணவர்களின் விவரங்கள், புகைப்படம் உள்ளிட்டவை பள்ளிகளில் பெறப்பட்டு புதிய பஸ் பாஸ் வழங்கப்படவுள்ளது. பள்ளிகள் திறக்கப்பட்ட ஓரிரு வாரத்துக்குள் புதிய பஸ் பாஸ் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அது வரையில் பழைய பஸ் பாஸை பயன்படுத்த அனுமதிக்கலாம் என போக்குவரத்து துறை அதிகாரிகளுக்கு வாய்மொழியாக உத்தரவிட்டுள்ளது.
         இது தொடர்பாக அரசு போக்குவரத்துக் கழகங்களின் உயர் அதிகாரிகளிடம் கேட்ட போது, ‘‘ஆண்டுதோறும் முதல் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை அரசு, உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு இலவச பஸ் பாஸ் வழங்கப்பட்டு வருகிறது. இந்த ஆண்டும் விரைவில் அளிக்க பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம். சம்பந்தப்பட்ட போக்குவரத்துக் கழகங்களின் உயர் அதிகாரிகளுடன், பள்ளிக்கல்வித் துறை அதிகாரிகளும் இணைந்து பணியாற்றி வருகின்றனர். பள்ளிகள் தொடங்கி 10 நாட்களுக்குள் அனைத்து மாணவர்களுக்கு இலவச பஸ் பாஸ் வழங்க திட்டமிட்டுள்ளோம்.
           கடந்த ஆண்டில் சுமார் 30 லட்சம் மாணவ, மாணவிகளுக்கு இலவச பஸ் பாஸ் வழங்கப்பட்டது. இந்த ஆண்டும் தேவைக்கு ஏற்றவாறு வழங்கவுள்ளோம். புதிய பஸ் பாஸ் வழங்கும் வரையில் பழைய பஸ் பாஸை பயன்படுத்திக்கொள்ள அனுமதிக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளோம். குறிப்பாக, பள்ளிச் சீருடையில் வரும் மாணவர்களிடம் டிக்கெட் கேட்கக் கூடாது என வலியுறுத்தியுள்ளோம்’’ என்றனர்.

பள்ளிக் கல்வித்துறை எச்சரிக்கை .......

பள்ளிக்கு மாணவர்கள் செல்போன், டூ வீலர் கொண்டு சென்றால் ஒழுங்கு நடவடிக்கை: பள்ளிக் கல்வித்துறை எச்சரிக்கை

         பள்ளிக்கு மாணவர்கள் செல்போன், இருசக்கர வாகனங்களை கொண்டுவரக் கூடாது. மீறி கொண்டுவந்தால் அவர்கள் மீது பள்ளி ஆசிரியர்கள் ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
          இதுகுறித்து, தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறை இயக்குநர் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியுள்ளதாவது:பள்ளி மாணவர்களின் பாதுகாப்பு குறித்து அதிகப்படியான விழிப்புணர்வுடன் செயல்பட வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. எனவே, மாணவர்களின் பாதுகாப்பு குறித்து மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் சில வழிமுறைகளை கடைபிடிக்க வேண்டும். பள்ளி மாணவர்கள் பேருந்துகள் மற்றும் ஆட்டோ ரிக்சாக்களில் பயணம் செய்யும்போது அனுமதிக்கப்பட்ட எண்ணிக்கைக்கும் கூடுதலாக பயணம் செய்வதை தவிர்க்க வேண்டும். கூடுதலாக மாணவர்களை ஏற்றிச்செல்வதை எக்காரணம் கொண்டும் அனுமதித்தல் கூடாது. வாகனங்களின் கூரையிலும், படிக்கட்டிலும் பயணம் செய்யக்கூடாது என்பதை எடுத்துரைத்தல் வேண்டும்.

சாலையில் செல்லும்போதும் சாலையைக் கடக்கும்போதும் ஒன்றுக்கும் மேற்பட்டவர்கள் கைகோர்த்து கூட்டாகச் செல்லக் கூடாது எனவும் , சாலைப் பிரிப்பானை (டிவைடர்) குறுக்கே தாண்டிச் செல்லக் கூடாது எனவும் பாதசாரிகள் சாலையை கடக்கும் இடத்தில் மட்டுமே சாலையைக் கடக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தல் வேண்டும்.போக்குவரத்துக் காவலரின் சமிக்ஞைகளுக்கு (சிக்னல்) கட்டுப்பட்டு போக்குவரத்து மற்றும் சாலைப் பாதுகாப்பு விதிகளை கடைபிடித்தல் வேண்டும். அனைத்துப் பள்ளிகளிலும் படிக்கட்டுப் பயணத்தில் ஏற்படும் விபத்துகள் பற்றி மாணவர்களுக்கு தெரிவித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.பேருந்துகளில் படிக்கட்டில் பயணம் செய்யும் மாணவர்களை அடையாளம் கண்டு அவர்களுக்கு எச்சரிக்கை செய்யப்பட்டு, அதே மாணவர் மேலும் தொடர்ந்து படிக்கட்டில் பயணம் செய்தால், அந்த மாணவரின் பெற்றோர் அல்லது பாதுகாவலரை அழைத்து அவர்கள் முன்னிலையில் உரிய அறிவுரை வழங்க வேண்டும்.

பள்ளி வகுப்பு ஆசிரியர்கள், தலைமை ஆசிரியர்களால் எச்சரிக்கை செய்யப்பட்டும் தொடர்ந்து இத்தகைய தவறுகளில் ஈடுபடும் மாணவர்களின் விலையில்லா பேருந்துப்பயண அட்டை திரும்பப் பெறப்படும் என்றும், அவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மாணவர்களுக்கு கண்டிப்புடன் தெரிவித்தல் வேண்டும். காலை இறைவணக்கக் கூட்டத்தில் ஏற்கெனவே வழங்கப்பட்டுள்ளசாலைப் பாதுகாப்பு உறுதிமொழி எடுக்க அறிவுறுத்த வேண்டும்.16-18 வயதுடைய மாணவர்கள் முறையாக ஓட்டுநர் உரிமம் பெறாத நிலையில் இருசக்கர வாகனங்களை இயக்கக் கூடாது என தெரிவித்தல் வேண்டும். மேலும், பள்ளி மாணவர்கள் இருசக்கர வாகனங்களில் பள்ளிக்கு வருவதை அனுமதிக்கக் கூடாது. அவ்வாறு அவர்கள் பள்ளிக்கு இருசக்கர வாகனங்களில் வந்தால், அவர்கள் வாகனத்தின் சாவியை எடுத்து வைத்து, அந்த மாணவரின் பெற்றோரை நேரில் வரவழைத்து உரிய அறிவுரைக்குப் பின் வாகனத்தின் சாவியை ஒப்படைத்தல் வேண்டும்.

பள்ளிக்கு வரும் மாணவர்கள் செல்போனை எடுத்து வர அனுமதிக்கக் கூடாது. அவ்வாறு செல்போன்களை பள்ளிக்கு எடுத்து வந்தால் அதை வாங்கி வைத்து, பெற்றோரை வரவழைத்து அவர்களிடம் ஒப்படைத்து தொடர்ந்து பள்ளி மாணவர்கள் செல்போனைக் கொண்டு வராமல் தடுக்க நடவடிக்கை எடுக்குமாறும் பெற்றோரை அறிவுறுத்த வேண்டும்.இவ்வாறு கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.