Sunday, May 29, 2016

புதிய பஸ் பாஸ் வழங்கும் வரை பள்ளி மாணவ, மாணவிகள் பழைய பாஸ் பயன்படுத்தலாம் .....

          பள்ளி மாணவர்களுக்கு புதிய பாஸ் வழங்கும் வரையில் தற்போதுள்ள பழைய பஸ் பாஸை பயன்படுத்தலாம். நடத்துநர்கள் மாணவர்களிடம் கட்டணம் வசூலிக்கக் கூடாது என போக்குவரத்து துறை உத்தரவிட்டுள்ளது.

         தமிழகத்தில் கோடை விடுமுறை முடிந்து வரும் ஜூன் 1-ம் தேதி பெரும்பாலான பள்ளிகள் திறக்கப்படவுள்ளன. மாணவர்களின் விவரங்கள், புகைப்படம் உள்ளிட்டவை பள்ளிகளில் பெறப்பட்டு புதிய பஸ் பாஸ் வழங்கப்படவுள்ளது. பள்ளிகள் திறக்கப்பட்ட ஓரிரு வாரத்துக்குள் புதிய பஸ் பாஸ் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அது வரையில் பழைய பஸ் பாஸை பயன்படுத்த அனுமதிக்கலாம் என போக்குவரத்து துறை அதிகாரிகளுக்கு வாய்மொழியாக உத்தரவிட்டுள்ளது.
         இது தொடர்பாக அரசு போக்குவரத்துக் கழகங்களின் உயர் அதிகாரிகளிடம் கேட்ட போது, ‘‘ஆண்டுதோறும் முதல் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை அரசு, உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு இலவச பஸ் பாஸ் வழங்கப்பட்டு வருகிறது. இந்த ஆண்டும் விரைவில் அளிக்க பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம். சம்பந்தப்பட்ட போக்குவரத்துக் கழகங்களின் உயர் அதிகாரிகளுடன், பள்ளிக்கல்வித் துறை அதிகாரிகளும் இணைந்து பணியாற்றி வருகின்றனர். பள்ளிகள் தொடங்கி 10 நாட்களுக்குள் அனைத்து மாணவர்களுக்கு இலவச பஸ் பாஸ் வழங்க திட்டமிட்டுள்ளோம்.
           கடந்த ஆண்டில் சுமார் 30 லட்சம் மாணவ, மாணவிகளுக்கு இலவச பஸ் பாஸ் வழங்கப்பட்டது. இந்த ஆண்டும் தேவைக்கு ஏற்றவாறு வழங்கவுள்ளோம். புதிய பஸ் பாஸ் வழங்கும் வரையில் பழைய பஸ் பாஸை பயன்படுத்திக்கொள்ள அனுமதிக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளோம். குறிப்பாக, பள்ளிச் சீருடையில் வரும் மாணவர்களிடம் டிக்கெட் கேட்கக் கூடாது என வலியுறுத்தியுள்ளோம்’’ என்றனர்.

No comments:

Post a Comment