ஆசிரியர்கள், மாணவர்கள் வருகையை பதிவு செய்ய பயோ-மெட்ரிக் கருவி அறிமுகம்
செய்யப்படும் என்றும், நல்லாசிரியர் விருதுடன் வழங்கப்படும் ரொக்கப்பரிசு
ரூ.10 ஆயிரமாக உயர்த்தப்படுவதாகவும் முதல்-அமைச்சர் ஜெயலலிதா அறிவித்தார்.
நேற்று தமிழக சட்டசபையில் முதல்-அமைச்சர் ஜெயலலிதா பேரவை விதி எண்
110-ன்கீழ் பள்ளி கல்வித்துறை தொடர்பாக 12 அறிவிப்புகளை வெளியிட்டு
பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
5 புதிய தொடக்கப் பள்ளிகள்
பள்ளிக்கல்வித்துறை சார்ந்த கீழ்க்கண்ட அறிவிப்புகளை இம்மாமன்றத்தில்
அறிவிப்பதில் நான் பெருமகிழ்ச்சி அடைகிறேன்.
* நடப்பாண்டில் 5 புதிய தொடக்கப் பள்ளிகள் தொடங் கப்படும். 3 தொடக்கப்
பள்ளிகள் நடுநிலைப் பள்ளிகளாகவும், 19 நடுநிலைப் பள்ளிகள் உயர்நிலைப்
பள்ளிகளாகவும் தரம் உயர்த்தப்படும்.
புதிதாக துவங்கப்படும் தொடக்கப் பள்ளிகளுக்கு 10
இடைநிலை ஆசிரியர் பணியிடங்களும், தரம் உயர்த்தப்படும் நடுநிலைப்
பள்ளிகளுக்கு 9 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களும், உயர்நிலைப் பள்ளிகளுக்கு
95 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களும் தோற்றுவிக்கப்படும். மேலும்,
இப்பள்ளிகளுக்குத் தேவையான வகுப்பறைகள், மாணவர் மற்றும் மாணவியருக்கென
தனித்தனி கழிப்பறைகள், குடிநீர் வசதி மற்றும் சமையலறை கட்டிடம் போன்ற
உள்கட்டமைப்புகள் அமைக்கப்படும். இவை 28 கோடியே 52 லட்சம் ரூபாய் செலவில்
செயல்படுத்தப்படும்.
குடியிருப்புகளில் பள்ளிகள்
* கடந்த 5 ஆண்டுகளில் பள்ளிகளுக்கு தேவைப்படும் பள்ளி கட்டிடங்கள், கூடுதல்
வகுப்பறைகள், கழிவறைகள், குடிநீர் வசதிகள், சுற்றுச்சுவர், சமையலறை,
அறிவியல் ஆய்வகங்கள், மாற்றுத்திறனாளிகளுக்கான சாய்வு தளங்கள், கலை மற்றும்
கைத்தொழில் அறைகள், கணினி அறைகள், நூலக அறைகள் மற்றும் வகுப்பறைகள் பழுது
சரிபார்த்தல் போன்ற உள்கட்டமைப்பு வசதிகள், 4,166 கோடி ரூபாய் செலவில்
அமைத்துக் கொடுக்கப்பட்டுள்ளன. அதன் தொடர்ச்சியாக இந்த ஆண்டில் 60 கோடியே
79 லட்சம் ரூபாய் மதிப்பில் பள்ளிகளில் உட்கட்டமைப்பு வசதிகள்
ஏற்படுத்தப்படும்.
* சென்னை மாநகரத்தில் கடந்த டிசம்பர் மாதம் பெய்த கனமழையால் வீடு இழந்த
குடும்பங்களுக்கு, பெரும்பாக்கம் பகுதியிலும், எழில் நகர் பகுதியிலும்
குடியிருப்புகள் வழங்கப்பட்டன. பெரும்பாக்கம் பகுதியில் உள்ள 564 பள்ளி
செல்லும் குழந்தைகள் மற்றும் எழில் நகர் பகுதியில் உள்ள 1,127 பள்ளி
செல்லும் குழந்தைகள் தங்களது இல்லங்களின் அருகிலேயே கல்வி தொடரும் வகையில்
இந்த குடியிருப்புகளில் தலா ஒரு தொடக்கப் பள்ளியும், ஒரு
நடுநிலைப்பள்ளியும் தொடங்கப்படும்.
மழை கோட்டு
* சென்னை, காஞ்சீபுரம், திருவள்ளூர், விழுப்புரம், வேலூர், கடலூர்,
நாகப்பட்டினம், தஞ்சாவூர், தூத்துக்குடி மற்றும் கிருஷ்ணகிரி ஆகிய 10
மாவட்டங்களில் உள்ள 7 ஆயிரம் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில்
எளிமையாக பாடங்கள் பயிற்றுவிக்க ஏதுவாக புதிதாக தயார் செய்யப்பட்ட
எளிமைப்படுத்தப்பட்ட செயல்வழிக் கற்றல் அட்டைகள் வழங்கப்படும். இந்த
திட்டம் 5 கோடி ரூபாய் செலவில் செயல்படுத்தப்படும்.
* மலைப் பிரதேசங்களில் வாழும் மாணவர்கள் மழை மற்றும் குளிர் காலத்தில் உடல்
நலம் பாதிப்பு இன்றி பள்ளிக்கு சென்றுவர ஏதுவாக 1 முதல் 8-ம் வகுப்பு வரை
அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு
கம்பளிச்சட்டை கடந்த 3 ஆண்டுகளாக வழங்கப்பட்டு வருகிறது. இம்மாணவர்கள்
மழைக்காலங்களிலும் எவ்வித சிரமுமின்றி பள்ளிக்கு வருகை புரிய வேண்டும்
என்னும் குறிக்கோளுடன் கூடுதலாக மழைக்கோட்டு, பூட்ஸ் மற்றும் காலுறைகள்
வழங்கப்படும். இதற்கு 8 கோடி ரூபாய் செலவு ஏற்படும்.
கணித உபகரணப் பெட்டிகள்
* தொடக்கக் கல்வியின் போதே செயல்முறை மூலம் மாணவர்கள் கல்வி கற்பதை உறுதி
செய்யும் வகையில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 3, 4 மற்றும்
5-ம் வகுப்பு மாணவர்களுக்கு சமூக அறிவியல் பாடத்தில் தாங்கள் வாழும் இடம்,
திசைகள், சுற்றுப்புறம், ஆறுகள், மலைகள், அட்சரேகை, தீர்க்க ரேகை பற்றி
அறிந்துகொள்வதற்கான வரைபட பயிற்சித் தாள் வழங்கப்படும். அதேபோன்று
மாணவர்களின் கணித அறிவினை மேம்படுத்தும் விதமாக, 1 மற்றும் 2-ம் வகுப்பு
மாணவர்கள் பயன்பெறும் வகையில் 38,030 அரசு மற்றும் அரசு உதவிபெறும்
தொடக்கப் பள்ளிகளுக்கும், மேலும், 6 முதல் 8-ம் வகுப்பு மாணவர்கள்
பயன்பெறும் வகையில் 8,603 அரசு மற்றும் அரசு உதவிபெறும் நடுநிலைப்
பள்ளிகளுக்கும் கணித உபகரணப் பெட்டிகள் வழங்கப்படும்.
மேலும், மாணவர்களின் அறிவியல் அறிவினை ஊக்குவிப்பதற்காக 3 முதல் 5-ம்
வகுப்பு வரை பயிலும் மாணவர்கள் பயன்பெறும் வகையில் 24,103 அரசு மற்றும்
அரசு உதவிபெறும் தொடக்கப் பள்ளிகளுக்கும், மேலும் 6 முதல் 8-ம் வகுப்பு வரை
பயிலும் மாணவர்கள் பயன்பெறும் வகையில் 2,900 அரசு மற்றும் அரசு உதவிபெறும்
பள்ளிகளுக்கு அறிவியல் உபகரணப்பெட்டிகள் வழங்கப்படும்; அரசு மற்றும் அரசு
உதவிபெறும் பள்ளிகளில் 3, 4 மற்றும் 5-ம் வகுப்பு பயிலும் மாணவர்கள்
வாசித்தல் மற்றும் பொது அறிவுத் திறனை மேம்படுத்தும் வகையில் வாசிப்புத்
திறன் மேம்பாட்டுக்கான புத்தகங்கள் வழங்கப்படும். இவை 46 கோடியே 42 லட்சம்
ரூபாய் செலவில் வழங்கப்படும்.
கணினி வழிக் கற்றல் மையங்கள்
* அரசுப்பள்ளிகளில் பயிலும் 6, 7 மற்றும் 8-ம் வகுப்பு மாணவர்கள்
பயன்பெறும் விதமாக, 555 அரசு நடுநிலைப் பள்ளிகளில் 3 கணினிகள் கொண்ட
கணினிவழிக் கற்றல் மையங்கள் உருவாக்கப்படும். இதன் மூலம் 40 ஆயிரம்
மாணவர்கள் பயன்பெறுவர்.
* அறிவியல் மற்றும் கணித பாடங்களில் உள்ள கடின பகுதிகளை எளிமையாக
புரிந்துகொள்வதற்காகவும், புதிய தொழில் நுட்பங்களான தொடுதிரை, காணொலி
காட்சி, பல்லூடகம் போன்றவைகளால் பள்ளியில் நடைமுறையில் உள்ள கற்றல்
கற்பித்தல் முறைகள் மேம்படுத்துவதற்காகவும், பின்னணி குரலுடன் கூடிய
அசைவூட்டும் காணொலி தொகுப்புகள், 6 முதல் 8-ம் வகுப்பு வரை பயிலும்
மாணவர்கள் பயன்பெறும் வண்ணம் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு
வழங்கப்படும். இதனால் 22 லட்சம் மாணவர்கள் பயனடைவார்கள்.
பயோ-மெட்ரிக் கருவி
* மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் வருகைப் பதிவேடு கையாள்வதில் தற்போது
உள்ள கையெழுத்திடும் நடைமுறையை மாற்றி புதிய தொழில்நுட்ப உத்தியின்
அடிப்படையில் தொட்டுணர் பயோ-மெட்ரிக் கருவிகளைக் கொண்டு வருகைப் பதிவு முறை
முதன்முறையாக அறிமுகப்படுத்தப்படும். இதற்கென 45 கோடியே 57 லட்சம் ரூபாய்
செலவு ஏற்படும்.
* சமூக விழிப்புணர்வினை குழந்தைகளிடம் ஏற்படுத்தும் வகையில், இலவச கட்டாயக்
கல்வி உரிமை சட்டம், பெண் கல்வியின் முக்கியத்துவம், பாலின கூர் உணர்வு
விழிப்புணர்வு, சுத்தம் சுகாதாரம் ஆகியவற்றை மையமாகக் கொண்டு அனைத்துப்
அரசுப் பள்ளிகளிலும் போட்டிகள் நடத்தப்படும். மாணவர்கள் புதிய முறையில்
கல்வி கற்பதற்கு ஏதுவாக வகுப்பறையில் உள்ள சுவர்களில் பாடம் தொடர்புடைய
வண்ணச்சுவர் சித்திரங்கள் வரையப்படும். இதற்கென 11 கோடி ரூபாய் செலவு
ஏற்படும்.
மெய்நிகர் வகுப்பறைகள்
* தமிழக மாணவர்களுக்கு ஒரே வகையான தரமான கற்றல் கற்பித்தலைக் கொண்டு
சேர்க்கும் வகையில் இன்றையத் தகவல் தொழில்நுட்ப வசதிகளைக் கொண்டு மெய்நிகர்
வகுப்பறைகள் ஏற்படுத்தப்படும். முதற்கட்டமாக 770 அரசுப் பள்ளிகளிலும், 11
மாவட்ட ஆசிரியர் கல்வி பயிற்சி நிறுவனங்களிலும் மெய்நிகர் வகுப்பறைகள்
ஏற்படுத்தப்படும். மேலும், 11 மைய ஆசிரியர் கல்வி பயிற்சி நிறுவனங்களில்
இருந்து நடத்தப்படும் வகுப்பறை செயல்பாடுகளை, இணையத் தொடர்பின் வாயிலாக
கிராமப்புறப் பகுதியில் உள்ள அனைத்துப் பள்ளிகளும் பெற்று மாணவர்கள் பயன்
பெறுவர். இத்திட்டத்தினை செம்மையாக செயல்படுத்த கோயம்புத்தூர், பெரம்பலூர்
மற்றும் தர்மபுரி மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனங்களுக்கு
கட்டிடங்கள் மற்றும் தளவாடங்கள், நூலகம் மற்றும் ஆய்வகம் உள்ளிட்ட
உட்கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்திக் கொடுக்கப்படும். இதற்கென 33 கோடியே 22
லட்சம் ரூபாய் செலவு ஏற்படும்.
ரொக்கப்பரிசு ரூ.10 ஆயிரம்
* சிறப்புற பணியாற்றும் ஆசிரியர்களை பாராட்டும் வகையில் நல்லாசிரியர்
விருது வழங்கப்படுகிறது. நல்லாசிரியர் விருது பெறும் ஆசிரியர்களுக்கு 5
ஆயிரம் ரூபாய் ரொக்கப் பரிசுடன் பதக்கம் மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டு
வருகிறது. நல்லாசிரியர்களை மேலும் ஊக்கப்படுத்தும் விதமாக ரொக்கப் பரிசு 10
ஆயிரம் ரூபாயாக உயர்த்தப்படும்.இவ்வாறு ஜெயலலிதா கூறினார்.