Tuesday, October 30, 2018

பள்ளி கல்வி துறைக்கு தனி, 'டிவி' சேனல் - பொங்கல் திருநாளில், சேனல் ஒளிபரப்பு துவக்கம்!



        எந்த மாநிலத்திலும் இல்லாத வகையில், தமிழகத்தில், பள்ளி கல்வி துறைக்கு, தனி, 'டிவி' சேனல் துவங்கப்பட உள்ளது.

    தமிழக பள்ளி கல்வி அமைச்சராக, செங்கோட்டையன் பதவியேற்ற பின், இத்துறையில், அடுக்கடுக்கான மாற்றங்கள் செய்யப்பட்டு வருகின்றன. அதன் தொடர்ச்சியாக, பள்ளி கல்வித் துறைக்கு என, பிரத்யேகமாக, 'டிவி' சேனல் துவங்கப்பட உள்ளது.

      இதற்கான பணிகளை மேற்கொள்ள, பள்ளி கல்வி இயக்குனர் ராமேஸ்வர முருகன், மாநில கல்வி யியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன இயக்குனர் அறிவொளி, ஒருங்கிணைந்த கல்வி திட்ட இயக்குனர் சுடலைகண்ணன் மற்றும் இணை இயக்குனர்கள் அடங்கிய குழு அமைக்கப்பட்டுஉள்ளது.தொழில்நுட்ப பணி மற்றும் தொலைக்காட்சிக்கான முன்தயாரிப்பு காட்சிகளை பதிவு செய்யவும், தனியாக குழு அமைக்கப்பட்டுள்ளது. கேமரா, தொழில்நுட்ப கருவிகள் வாங்கும் பணிகளும் துவங்கியுள்ளன. படப்படிப்பு மற்றும் தொழில்நுட்ப தளங்களை, சென்னை, அண்ணா நுாலகத்தில் அமைக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது.

       மேலும், காட்சி பதிவுக்காக, 'ட்ரோன்' என்ற, ஆளில்லா விமானம் வாங்கவும், உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஜனவரியில், பொங்கல் திருநாளில், சேனல் ஒளிபரப்பை துவங்க, பள்ளி கல்வி துறை திட்டமிட்டுள்ளது.

தடுமாறும் தொடக்கக்கல்வியை தூக்கி நிறுத்த நர்சரி பள்ளிகளாகும் அங்கன்வாடி மையங்கள்


            தமிழகத்தில் தடுமாறும் தொடக்கக்கல்வியை தூக்கி நிறுத்த 2 ஆயிரம் அங்கன்வாடி மையங்கள் நர்சரி பள்ளிகளாக மாறுகின்றன.தமிழகத்தில் பள்ளிக்கல்வியின் தரத்தை மேம்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. ஸ்மார்ட் வகுப்பறைகள், ஆசிரியர்களுக்கு டேப்லெட் என அடுத்தடுத்து மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகளை தொடர்ந்து 1ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை ஒரே வளாகத்தில் பயிலும் வகையில் மாதிரி பள்ளிகளும் ஏற்படுத்த தமிழக அரசு முயற்சி மேற்கொண்டுள்ளது.அந்த வகையில் தடுமாறும் தொடக்கக்கல்வியை தூக்கி நிறுத்தும் வகையில் மாநிலம் முழுவதும் 2 ஆயிரம் அங்கன்வாடி மையங்களில் பிரீகேஜி, எல்கேஜி, யுகேஜி வகுப்புகளை தொடங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது

கல்வித்துறை சீர்திருத்தத்தில் குளறுபடி டி.இ.ஓ.,அலுவலகத்திற்கு கூடுதல் சுமை


         கல்வித்துறை நிர்வாக சீர்திருத்தத்தில் ஏற்பட்ட குளறுபடியால், மாவட்டக் கல்வி அலுவலகங்களுக்கு கூடுதல் சுமை ஏற்பட்டுள்ளது. பள்ளி கல்வித்துறையில் மே மாதம் பல சீர்திருத்தங்கள் செய்யப்பட்டன. மெட்ரிக் பள்ளி ஆய்வாளர், ஆங்கிலோ இந்தியன் பள்ளி ஆய்வாளர், மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலர் பணியிடங்கள் கலைக்கப்பட்டன.

              அரசு தொடக்க, நடுநிலை, உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகள், தனியார் நர்சரி, மெட்ரிக் பள்ளிகள் என அனைத்தையும் கண்காணிக்கும் அதிகாரம் மாவட்டக் கல்வி அலுவலர்களுக்கு வழங்கப்பட்டது. இதற்காக 120 மாவட்டக் கல்வி அலுவலகங்கள் ஏற்படுத்தப்பட்டன.அவை 37,112 அரசு பள்ளிகள், 8,403 உதவிபெறும் பள்ளிகள், 12,419 தனியார் பள்ளிகளை கண்காணிக்கின்றனர். நுாறுக்கும் குறைவான பள்ளிகளை கண்காணித்த மாவட்டக் கல்வி அலுவலகங்களுக்கு, கூடுதலாக 400க்கும் மேற்பட்ட பள்ளிகள் ஒதுக்கப்பட்டன. அதற்கேற்ப ஊழியர்களை அதிகரிக்கவில்லை. இதுவரை தேர்வுப்பிரிவும் தனியாக பிரிக்கவில்லை.


 இதனால் மாவட்டக் கல்வி அலுவலக ஊழியர்கள் சிரமப்படுகின்றனர்.கல்வித்துறை நிர்வாக ஊழியர்கள் கூறியதாவது: பள்ளிகள் ஆய்வு, ஆசிரியர் ஊதியம், பணப்பலன், 14 வகையான நலத்திட்டம், தேர்வு போன்ற பணிகளை கவனிக்கிறோம். கூடுதல் பள்ளிகளை ஒதுக்கியபோதிலும், ஊழியர்களை அதிகரிக்கவில்லை. மாவட்டக் கல்வி அலுவலக ஊழியர்களுக்கு மனஉளைச்சலை தருகின்றனர். பலர் விருப்ப ஓய்வு கேட்டு விண்ணப்பித்து வருகின்றனர், என்றனர்

போதிய இடவசதி இல்லாததால் வகுப்பறைகளில் செயல்படும் கல்வி மாவட்ட அலுவலகங்கள்



                 தமிழகத்தில் புதிதாக கல்வி மாவட்டங்கள் உருவாக்கப்பட்ட போதிலும் அதற்குரிய அலுவலகங்கள், போதிய பணியாளர்கள் நியமிக்கப்படாமல் இருப்பது கல்வியாளர்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. தமிழக பள்ளிக்கல்வித்துறையில் கடந்த சில ஆண்டுகளாக பல்வேறு நிர்வாக சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதன்படி, மாவட்ட தொடக்கக்கல்வி அலுவலகம், மெட்ரிக் பள்ளி ஆய்வாளர் அலுவலகங்கள் கலைக்கப்பட்டன. மாநிலம் முழுவதும் இருந்த 32 மாவட்ட தொடக்கக்கல்வி அலுவலர், 17 மெட்ரிக் பள்ளி ஆய்வாளர், 2 மாவட்ட முறைசாரா கல்வி அலுவலர் மற்றும் ஒரு ஆங்கிலோ இந்தியன் பள்ளிகள் ஆய்வாளர் பணியிடங்கள்,மாவட்ட கல்வி அலுவலர் பணியிடமாக மாற்றப்பட்டன.

             இதனையடுத்து,புதிதாக 52 கல்வி மாவட்டங்கள் உருவாக்கப்பட்டன. இதனால், கல்வி மாவட்டங்களின் எண்ணிக்கை, 67ல் இருந்து, 119 ஆக அதிகரித்தது. மாவட்ட கல்வி அலுவலர்கள் நியமிக்கப்பட்ட நிலையில், அவர்களுக்கான புதிய அலுவலகங்கள் அமைக்கப்படவில்லை. இதே போல் போதிய பணியாளர்களும் நியமிக்கப்படவில்லை. இதனால், மாநிலம் முழுவதும் கல்வித்துறை சார்ந்த பணிகள் தடைபட்டுள்ளன. இது குறித்து கல்வியாளர்கள் கூறியதாவது:தமிழக பள்ளிக்கல்வித்துறையை பொறுத்தவரை, லேப்டாப், பள்ளி சீருடைகள்,நோட்டு புத்தகங்கள் உள்பட 16 வகையான இலவச திட்டங்கள் மாணவர்களுக்காக செயல்படுத்தப்படுகிறது. ஒவ்வொரு திட்டங்களுக்கும் தனித்தனியாக புள்ளி விவரங்களை இயக்குநரகத்திற்கு அனுப்ப வேண்டும்.



                மேலும்,அரசு உதவிபெறும் பள்ளியைச் சேர்ந்த ஆசிரியர்களுக்கு சம்பள பட்டியல் தயாரித்தல் உள்ளிட்ட பெரும்பாலான பணிகளுக்கு, மாவட்ட கல்வி அலுவலகமே பொறுப்பாகும். ஆனால் புதிதாக உருவாக்கப்பட்ட 52 கல்வி மாவட்டங்களுக்கு தனியாக பணியாளர்கள்  யாரும் நியமிக்கப்படவில்லை. குறிப்பாக, மாநிலம் முழுவதும் 100கண்காணிப்பாளர், 52 பள்ளி துணை ஆய்வாளர்,52 நேர்முக உதவியாளர் பணியிடம் உள்பட சுமார் 350க்கும் மேற்பட்ட முக்கிய  பணியிடங்கள் காலியாக உள்ளது. ஒரு மாவட்ட கல்வி அலுவலகத்தை பொறுத்தவரை, ஒரு மாவட்ட கல்வி அலுவலர், ஒரு பள்ளித்துணை ஆய்வாளர் (பட்டதாரி ஆசிரியர் நிலை), ஒரு நேர்முக உதவியாளர் (அமைச்சுப்பணி), 2 பிரிவு கண்காணிப்பாளர், 2 இருக்கை பணி கண்காணிப்பாளர், 4 உதவியாளர், 4 இளநிலை உதவியாளர், ஒரு தட்டச்சர், ஒரு பதிவறை எழுத்தர், ஒரு அலுவலக உதவியாளர், ஒரு காவலர் மற்றும் ஒரு டிரைவர் என மொத்தம் 20 பணியிடங்கள் உள்ளன.



              போதுமான பணியாளர்கள் நியமிக்கப்படாத நிலையில், நாள்தோறும் புதுப்புது திட்ட அறிவிப்பை வெளியிட்டு வருவது வேதனை அளிக்கிறது. ஆட்கள் பற்றாக்குறையால்,ஒருவரே பல பணிகளை பார்க்க வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளனர். மேலும் புதிதாக கல்வி மாவட்டங்கள் உருவாக்கப்பட்ட போதிலும், அதற்கான தனி அலுவலகம் தொடர்பான எந்தவொரு அறிவிப்பும் வெளியிடப்படவில்லை. இதனால், அரசு பள்ளிகளின் வகுப்பறைகளே, பெரும்பாலும் மாவட்ட கல்வி அலுவலகமாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. மேலும், ஒரு அலுவலகத்திற்கு தேவையான கணிப்பொறி,பிரிண்டர், இணையம் வசதி, பீரோ, மேசை, டேபிள், மின்விசிறி போன்ற எந்தவித தளவாட பொருட்களும் புதிய மாவட்ட கல்வி அலுவலகங்களுக்கு ஒதுக்கப்படவில்லை என்பது வேதனைக்குரியது. இவ்வாறு கல்வியாளர்கள் தெரிவித்தனர்

தீபாவளி பண்டிகையின் பொழுது மாணவர்களுக்கு தீ விபத்து ஏற்படாமல் பாதுகாக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை தொடர்பான இயக்குநரின் செயல்முறைகள்!