கூட்டுறவு சங்கத் தேர்தல் தொடர்பாக திமுக கொறடா சக்கரபாணி தொடுத்த வழக்கில் ஜூலை 23ஆம் தேதி தீர்ப்பு வழங்கப்படும் என சென்னை உயர் நீதிமன்றம் இன்று அறிவித்துள்ளது.
தமிழகத்தில் கூட்டுறவு சங்கத் தேர்தல்களில் முறைகேடுகள் நடப்பதாகவும், வேட்பு மனு ஏற்பதில் பாரபட்சம் காட்டப்படுவதாகவும், உரிய விளக்கமின்றி மனுக்கள் நிராகரிக்கப்படுவதாகவும் குற்றம்சாட்டி திமுக கொறடா சக்கரபாணி, கூட்டுறவுச் சங்கங்களில் போட்டியிட்டவர்கள் என 400க்கும் அதிகமானோர் சென்னை உயர்நீதி மன்றம் மற்றும் உயர்நீதி மன்றக் மதுரை கிளையில் மனு தாக்கல் செய்திருந்தனர்.
இது தொடர்பான வழக்குகளை விசாரித்த உயர் நீதிமன்ற மதுரைக் கிளை கூட்டுறவுச் சங்கத் தேர்தல் பணிகளை நிறுத்தி வைக்கவும், 3, 4 மற்றும் 5ஆவது கட்ட தேர்தல்களை நடத்தத் தடை விதித்தும் உத்தரவிட்டது.
இந்த உத்தரவை எதிர்த்துக் கூட்டுறவுச் சங்கத் தேர்தல் ஆணையம் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்குகளை விசாரித்த உச்ச நீதிமன்றம், தமிழகத்தில் கூட்டுறவுச் சங்கத் தேர்தலை நடத்தலாம் எனவும், முடிவுகளை அறிவிக்கக் கூடாது எனவும் உத்தரவிட்டதுடன், சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு விரைந்து விசாரிக்க உத்தரவிட்டது.
அதன்படி சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி பி.டி.ஆஷா அமர்வில் மதுரை உயர் நீதிமன்றதில் உள்ள அனைத்து வழக்குகளையும் ஒன்றாகச் சேர்த்து சுமார் 400க்கும் மேற்பட்ட வழக்குகளை விசாரித்தது.
இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், அனைத்துத் தரப்புகளும் எழுத்துபூர்வமான வாதங்களைத் தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டனர். அதன்படி எழுத்துபூர்வமான வாதங்கள் கூட்டுறவு சங்க ஆணையர் சார்பில் தாக்கல் செய்யப்பட்டன. அதனையடுத்து இந்த வழக்குகளுக்கான தீர்ப்பு வரும் 23ஆம் தேதி அறிவிக்கப்படும் என்று நீதிபதிகள் இன்று உத்தரவிட்டுள்ளனர்.
No comments:
Post a Comment