Thursday, December 4, 2014

பள்ளிக்கல்வித்துறையில் இயக்குனர்கள் இடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு.

          பள்ளிக்கல்வித்துறையில் இயக்குனர்கள் இடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. 
         புதிய பள்ளிக்கல்வித்துறை இயக்குனராக மதிப்புமிகு.கண்ணப்பன் அவர்களை நியமனம் செய்தும், ஏற்கெனவே பள்ளிக்கல்வி இயக்குனராக இருந்த மதிப்புமிகு. வி.சி. இராமேஸ்வர முருகன் அவர்களை மாநில ஆசிரியர் கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி இயக்குனராக இடமாற்றம் செய்தும் தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. புதிய பதவியில் இன்று பொறுப்பேற்பார்கள் என்று தெரிகிறது.

பிளஸ் 2க்கு இணையானது ஆசிரியர் பயிற்சி பட்டய சான்று: பள்ளிக்கல்வித்துறை உத்தரவு

     சென்னை ஐகோர்ட் தீர்ப்பின் அடிப்படையில், 10ம்வகுப்பு தேர்ச்சிக்குப்பின்னர் பெறப்பட்ட இரண்டாண்டு ஆசிரியர் பயிற்சி பட்டயச் சான்றினை பிளஸ் 2க்கு இணையாக கருதவேண்டும் என பள்ளிக்கல்வித்துறை முதன்மைச் செயலர் சபீதா உத்தரவிட்டுள்ளார்.

     தமிழகத்தில் 10, பிளஸ் 2 என்ற கல்விமுறை 1978-79ல் இருந்து அறிமுகப்படுத்தப்பட்டது. 1986-87 வரை ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களில் சேர்வதற்கு குறைந்தபட்ச கல்வித்தகுதி 10ம் வகுப்பு. அதன்படியே சேர்க்கை நடந்தது. 1987ல் வெளியிடப்பட்ட அரசாணைப்படி( எண் 906) 1987-88 முதல் ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களில் சேர குறைந்தபட்ச கல்வித்தகுதி பிளஸ் 2 என நிர்ணயம் செய்யப்பட்டது.இதன் அடிப்படையில் பிளஸ் 2 தேர்ச்சி பெறாமல் திறந்தவெளி பல்கலைக்கழகங்கள் மூலம் டிப்ளமோ, பட்டம், முதுகலைப்பட்டங்களை பெற்று பள்ளிக்கல்வித்துறையில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு வழங்குவதற்கான கருத்துருவை ஏற்க இயலாது என பள்ளிக்கல்வித்துறையால் 2011 அக்.,25 ல் தெரிவிக்கப்பட்டது. இதனால் 2011 ,2012 ம்ஆண்டிற்கான பட்டதாரி ஆசிரியர் பதவி உயர்வுக்கான முன்னுரிமை பட்டியல்களில் பிளஸ் 2 தேர்ச்சி பெறாமல் பட்டம் பெற்றவர்கள் நீக்கம் செய்யப்பட்டனர். அதை எதிர்த்து அவர்கள் தொடர்ந்த வழக்குகளில் 10ம் வகுப்பிற்கு பின் பெறப்பட்ட இரண்டாண்டு ஆசிரியர் பயிற்சி பட்டய சான்றினை பிளஸ் 2க்கு இணையாக கருதி பதவி உயர்வு வழங்க வேண்டும் என்ற கோர்ட் உத்தரவு பிறப்பித்தது. இதையடுத்து அவ்வாறு ஆணை பிறப்பித்து பள்ளிக்கல்வித்துறை முதன்மை செயலர் சபீதா உத்தரவிட்டுள்ளார். கல்வித்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், "10ம்வகுப்பில் தேர்ச்சி பெற்ற பின்னர் 1987 ஜூலைக்கு முன் பெறப்பட்ட இரண்டாண்டு ஆசிரியர் பயிற்சி பட்டய சான்றினை பிளஸ்2க்கு இணையாக கருதி முதன்மை செயலர் உத்தரவிட்டுள்ளார். இதன் நகல் அனைத்து முதன்மைக்கல்வி அதிகாரிகளுக்கும் அனுப்பப்பட்டுள்ளது. சம்பந்தப்பட்ட ஆசிரியர்களின் பதவி உயர்வு குறித்து பின்னர் துறை முடிவு செய்யும்,”என்றார்.

மாநிலம் முழுவதும் ஒரே மாதிரியான முறையில் அலுவலக நடவடிக்கைகள் அமைய தொடக்கக் கல்வித் துறை உத்திரவு

       அனைத்து அலுவல்களுக்கும் மாதிரி படிவங்கள் மற்றும் அலுவலக குறிப்புகள் வழங்கி கடைபிடிக்க உத்திரவு தொடக்கக் கல்வித் துறையில் உள்ள இலட்சக் கணக்காண ஆசிரியர்கள் சார்ந்த விடுப்பு, உயர்கல்வி முன் அனுமதி, மருத்துவவிடுப்பு, ஈட்டியவிடுப்பு, அரைச்சம்பள விடுப்பு, வைப்புநிதி முன்பணம் கோரல், பகுதி இறுதிப் பணம் கோரல், சேமநல நிதி கணக்கீடு, ஊக்க ஊதியம் அனுமதித்தல், பதவி உயர்வுக்குண்டான ஊதிய நிர்ணயம், பண்டிகை முன்பணம், மருத்துவ விடுப்பு அனுமதித்தல், ஆண்டு ஊதிய உயர்வு அனுமதித்தல், போன்ற நடைமுறைகள் அந்தந்த உதவித் தொடக்கக்கல்வி அலுவலகப் பணியாளர்களால் அவர்கள் ஏற்கனவே கையாண்ட நடைமுறைகளின்படி அலுவலக குறிப்புகளும், ஆணைகளும் வழங்கப்பட்டு வந்தன ஆனால் தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து உதவித் தொடக்கக் கல்வி அலுவலகங்களிலும் ஒரே மாதிரியான வழி முறையிணை பின்பற்ற தொடக்கக் கல்வித் துறை இயக்குனரகம் மூலம் ”மாதிரிப்படிவங்கள், அலுவலக நடைமுறைக் கடிதம், அலுவலக செயல்முறை ஆணைகள் மற்றும், பணிப் பதிவேட்டில் பதிய மாதிரி சீல்கள்” ஆகியன நிர்வாகப் பயிற்சியின் போது வழங்கப்பட்டுள்ளது. .அதனை கடைபிடிக்க கோரப்பட்டு அனைத்து உதவி தொடக்கக் கல்வி அலுவலகங்களுக்கும் உரிய மாவட்டக் கல்வி அதிகாரிகள் வாயிலாக அனுப்பப்படுள்ளதாக அறியப்படுகிறது.

Wednesday, December 3, 2014

அடுத்த கல்வி ஆண்டு முதல் அனைத்து பள்ளிகளிலும் தமிழ் கட்டாயம் செயலாளர் சபீதா தகவல்


        தமிழகத்தில் அடுத்த கல்வி ஆண்டு முதல் அரசு உள்பட அனைத்து பள்ளிகளிலும் 1ம் வகுப்பில் இருந்து தமிழ் கட்டாயமாக்கப்படுகிறது என்று பள்ளி கல்வித் துறை செயலாளர் சபீதா கூறினார்.தொடக்க கல்வித்துறையின் கீழ் பணியாற்றும் உதவித் தொடக்க கல்வி அலுவலர்களுக்கான நிர்வாக பயிற்சியும், அதற்கான கையேடு வெளியிடுதல், அரசுப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் எளிதில் ஆங்கிலம் கற்கும் வகையில் ஆங்கில உச்சரிப்பு குறுந்தகடு வெளியிடுதல் நிகழ்ச்சி டிபிஐ வளாகத்தில் நேற்று நடந்தது.
             பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் வெளியிட்டார். பள்ளிக் கல்வித்துறை செயலாளர் சபீதா பேசியதாவது:பள்ளியின் தரம், கற்பிக்கும் தரம் உயர வேண்டும் என்பதற்காக தொடக்க கல்வி அலுவலர்களுக்கு நிர்வாக பயிற்சி அளிக்க அரசு உத்தரவிட்டது. மாநில பாடத்திட்டத்தின் கீழ் படிக்கும் மாணவர்களுக்கு தமிழ் கட்டாயம் என்று கடந்த 2006ம் ஆண்டு கொண்டு வரப்பட்டது. அந்த சட்டம் இப்போது விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது. அதனால் அரசுப் பள்ளிகளுடன் மற்ற பள்ளிகளிலும் அடுத்த கல்வி ஆண்டு முதல் 1ம் வகுப்பில் தமிழ் கட்டாயமாகிறது. மேலும், அரசுப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் எளிதில் ஆங்கிலம் கற்கும் வகையில் ‘பொனிடிக்ஸ்‘ உடன் கூடிய ஆங்கில உச்சரிப்புக்கான குறுந்தகடு தயாரிக்கப்பட்டுள்ளது.
        இந்த குறுந்தகடு அனைத்து பள்ளிகளிலும் கணினி மூலம் திரையிடப்பட்டு ஒவ்வொரு ஆங்கில சொல்லையும் எப்படி உச்சரிக்க வேண்டும் என்று மாணவர்களுக்கு கற்றுக் கொடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு பள்ளிக்கும் தேவையான குறுந்தகடுகள் விரைவில் அனுப்பி வைக்கப்படும். ஆசிரியர்களை பொருத்தவரை பள்ளி தொடங்குவதற்கு அரை மணி நேரம் முன்னதாக பள்ளிக்கு வர வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.இவ்வாறு பள்ளிக் கல்வித்துறை செயலாளர் சபீதா தெரிவித்தார்.

Tuesday, December 2, 2014

அனைத்து வகை மாற்றுத் திறனாளிகள் டிசம்பர் 3 அன்று சிறப்பு தற்செயல் விடுப்பு எடுத்துக் கொள்ளலாம்.

சமூக நலம் - சர்வதேச மாற்றுத் திறனாளிகள் தினத்தை முன்னிட்டு தமிழக அரசுப் பணியில் உள்ள அனைத்து வகை மாற்றுத் திறனாளிகள் டிசம்பர் 3 அன்று சிறப்பு தற்செயல் விடுப்பு எடுத்துக் கொள்ளலாம்.