Thursday, December 4, 2014

பிளஸ் 2க்கு இணையானது ஆசிரியர் பயிற்சி பட்டய சான்று: பள்ளிக்கல்வித்துறை உத்தரவு

     சென்னை ஐகோர்ட் தீர்ப்பின் அடிப்படையில், 10ம்வகுப்பு தேர்ச்சிக்குப்பின்னர் பெறப்பட்ட இரண்டாண்டு ஆசிரியர் பயிற்சி பட்டயச் சான்றினை பிளஸ் 2க்கு இணையாக கருதவேண்டும் என பள்ளிக்கல்வித்துறை முதன்மைச் செயலர் சபீதா உத்தரவிட்டுள்ளார்.

     தமிழகத்தில் 10, பிளஸ் 2 என்ற கல்விமுறை 1978-79ல் இருந்து அறிமுகப்படுத்தப்பட்டது. 1986-87 வரை ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களில் சேர்வதற்கு குறைந்தபட்ச கல்வித்தகுதி 10ம் வகுப்பு. அதன்படியே சேர்க்கை நடந்தது. 1987ல் வெளியிடப்பட்ட அரசாணைப்படி( எண் 906) 1987-88 முதல் ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களில் சேர குறைந்தபட்ச கல்வித்தகுதி பிளஸ் 2 என நிர்ணயம் செய்யப்பட்டது.இதன் அடிப்படையில் பிளஸ் 2 தேர்ச்சி பெறாமல் திறந்தவெளி பல்கலைக்கழகங்கள் மூலம் டிப்ளமோ, பட்டம், முதுகலைப்பட்டங்களை பெற்று பள்ளிக்கல்வித்துறையில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு வழங்குவதற்கான கருத்துருவை ஏற்க இயலாது என பள்ளிக்கல்வித்துறையால் 2011 அக்.,25 ல் தெரிவிக்கப்பட்டது. இதனால் 2011 ,2012 ம்ஆண்டிற்கான பட்டதாரி ஆசிரியர் பதவி உயர்வுக்கான முன்னுரிமை பட்டியல்களில் பிளஸ் 2 தேர்ச்சி பெறாமல் பட்டம் பெற்றவர்கள் நீக்கம் செய்யப்பட்டனர். அதை எதிர்த்து அவர்கள் தொடர்ந்த வழக்குகளில் 10ம் வகுப்பிற்கு பின் பெறப்பட்ட இரண்டாண்டு ஆசிரியர் பயிற்சி பட்டய சான்றினை பிளஸ் 2க்கு இணையாக கருதி பதவி உயர்வு வழங்க வேண்டும் என்ற கோர்ட் உத்தரவு பிறப்பித்தது. இதையடுத்து அவ்வாறு ஆணை பிறப்பித்து பள்ளிக்கல்வித்துறை முதன்மை செயலர் சபீதா உத்தரவிட்டுள்ளார். கல்வித்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், "10ம்வகுப்பில் தேர்ச்சி பெற்ற பின்னர் 1987 ஜூலைக்கு முன் பெறப்பட்ட இரண்டாண்டு ஆசிரியர் பயிற்சி பட்டய சான்றினை பிளஸ்2க்கு இணையாக கருதி முதன்மை செயலர் உத்தரவிட்டுள்ளார். இதன் நகல் அனைத்து முதன்மைக்கல்வி அதிகாரிகளுக்கும் அனுப்பப்பட்டுள்ளது. சம்பந்தப்பட்ட ஆசிரியர்களின் பதவி உயர்வு குறித்து பின்னர் துறை முடிவு செய்யும்,”என்றார்.

No comments:

Post a Comment