Friday, August 16, 2024

78ஆவது இந்திய சுதந்திரத் திருநாள் விழா......

ஊத்தங்கரை ஒன்றியம் ஜோதிநகர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் இன்று (15.08.2024) *இந்தியத் திருநாட்டின் 78ஆவது சுதந்திரத் திருநாள் விழா* மிகச் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. முன்னதாக காலை 9.00 மணிக்கு பள்ளி இறை வணக்கக் கூட்டத்தில் மூவர்ண தேசியக் கொடியை பள்ளித் தலைமை ஆசிரியர் திரு செ. இராஜேந்திரன் அவர்கள் ஏற்றி வைத்தார். இந்நிகழ்வில் பள்ளி மாணவர்கள் சாரணர் படை, இளைஞர் செஞ்சிலுவைச் சங்கம் ஆகியவற்றின் சீருடையிலும் பள்ளிச் சீருடையிலும் கலந்துக் கொண்டனர். பின்னர் பள்ளித் தலைமை ஆசிரியர் தலைமையில் நடைபெற்ற சுதந்திர நாள் விழாவில் முன்னதாக உதவி ஆசிரியர் பூ. இராம்குமார் அனைவரையும் வரவேற்றார். உதவி ஆசிரியர்கள் கோ. ஆனந்தன், மா. யோகலட்சுமி, மு.அனிதா, மு. அகிலா, ஊராட்சி மன்ற உறுப்பினர் விஜயகுமாரி பிரகாஷ் ஆகியோரும் , முன்னாள் மாணவரும் இந்நாள் பெற்றோரும் ஆகிய மணி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். பின்னர் விழாத் தலைமை உரையாற்றிய பள்ளித் *தலைமை ஆசிரியர் செ. இராஜேந்திரன் இன்றைய சிறப்பு நிகழ்வான இந்திய சுதந்திர நாள் விழா பற்றியும், சுதந்திரப் போராட்டத்தில் பங்கேற்ற தலைவர்கள் முதல் தொண்டர்கள் வரையிலான தியாகம்* பற்றியும் விரிவாக எடுத்துக் கூறி அவற்றில் ஒரு சிறு அளவிலேனும் நாம் பங்காற்றி இன்றைய நமது சமூகத்தை காத்திட வேண்டுமெனக் கேட்டுக் கொண்டார். தொடர்ந்து பேச்சு (தமிழ், ஆங்கிலம்), கவிதை, கட்டுரை, பாடல்கள் ஓவியம் ஆகிய போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்கள் தத்தம் திறமைகளை விழா மேடையில் வெளிப்படுத்தினர். அதைத் தொடர்ந்து மாணவர்களின் கண்கவர் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இதில் *மாணவர்கள் பல வண்ண ஆடைகளோடு வந்து கிராமியம், தேசியம், தேசபக்தி ஆகிய தலைப்பிலான பாடல்களுக்கு நடனம் ஆடி* அனைவரையும் மகிழ்வித்தனர். அடுத்து பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கும், கலை நிகழ்வில் பங்கேற்ற மாணவர்களுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டது. நிறைவாக பள்ளி உதவி ஆசிரியர் சோ. சிவகுருநாதன் அனைவருக்கும் நன்றி கூறினார். நிகழ்வில் மாணவர்கள் பெற்றோர்கள், முன்னாள் மாணவர்கள் ஆகியோர் அதிக அளவில் கலந்துக் கொண்டனர். அனைவருக்கும் முன்னாள் *மாணவர்கள் இனிப்பு(லட்டு), பாட்டிலில் அடைக்கப்பட்ட குளிர்பானம், மன்ச் இனிப்பு வகை* ஆகியவற்றை வழங்கினர்.

No comments:

Post a Comment