Monday, December 16, 2013

உதவித் தொடக்கக் கல்வி அலுவலர்கள் - சந்திப்பு

              இன்று (16.12.2013) ஊத்தங்கரை வட்டாரப் பொருப்பாளர்களின் அறிமுகச் சந்திப்பு உதவித் தொடக்கக் கல்வி அலுவலகத்தில் நடைபெற்றது. 
       வட்டாரச் செயலாளராக செயல்பட்டு வந்த திரு செ. இராஜேந்திரன் அவர்கள் மாவட்டத் தலைவராகத் தேர்வு பெற்றதால் புதிதாக வட்டாரச் செயலாளராக திரு சே. லீலாகிருஷ்ணன் தேர்வு செய்யப்பட்டார். எனவே புதிய பொருப்பாளர்களை உதவித் தொடக்கக் கல்வி அலுவலர்களுக்கு அறிமுகம் செய்யும் நிகழ்ச்சி நடைபெற்றது. 
              நிகழ்வில் மாவட்டத் தலைவர் திரு செ. இராஜேந்திரன் அவர்கள் உதவித் தொடக்கக் கல்வி அலுவலர்களுக்கு பொன்னாடை போர்த்தி புதிய பொருப்பாளர்களை அறிமுகம் செய்து வைத்தார். அப்போது அவர் தமிழக ஆசிரியர் கூட்டணி ஆசிரியர்கள் எப்போதும் மாணவர்கள் நலனிலும், ஆசிரியர்கள் நலனிலும் அக்கரை கொண்டு செயல்படும் இயக்கம் என்றும், அலுவலர்கள் நல்ல ஒத்துழைப்பை வழங்க வேண்டும் கேட்டுக்கொண்டார்.
                     இதில் கலந்துக்கொண்ட உதவித் தொடக்கக் கல்வி அலுவலர் திரு. இரா. பிரசாத், கூடுதல் உதவித் தொடக்கக் கல்வி அலுவலர் திரு கொ.மா. சீனிவாசன் ஆகியோர் புதிய பொருப்பாளர்களுக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்த அதே வேளையில் ஆசிரியர்களின் அனைத்து பணப் பயன்களையும் தாங்கள் உடனுக்குடன் முடித்து தந்து விடுவதாகவும், அலுவலக பணிகளுக்கு இயக்கம் முழு ஒத்துழைப்பு நல்கிடவும் கேட்டுக்கொண்டனர்.
              நிகழ்ச்சியில் வட்டாரத் தலைவர் திரு கி. கோபால், வட்டாரப் பொருளாளர் திரு பூ. இராம்குமார், வட்டார மகளிர் அணிச் செயலாளர் திருமதி க. தமிழ்ச்செல்வி, மாவட்ட தணிக்கைக் குழு உறுப்பினர் திரு ந. இராஜசூரியன், மாவட்டப் பொதுக் குழு உறுப்பினர் திரு மொ. சிதம்பரம், வட்டாரத் துணைச் செயலாளர் திரு மு. இளங்கோவன், வட்டாரச் செயற்குழு உறுப்பினர்கள் திருமதி ஈ. அகிலாண்டேஸ்வரி, திரு இரா கண்ணன், திரு பெ. வெங்கடேசன், உள்ளிட்ட பலரும் கலந்துக்கொண்டனர்.


தமிழக ஆசிரியர் கூட்டணியின் மாநிலச் செயற்குழுக் கூட்டம் - திருச்சி

             தமிழக ஆசிரியர் கூட்டணியின் மாநிலச் செயற்குழுக் கூட்டம் நேற்று (15.12.2014) . திருச்சி அருண் விடுதியில் காலை 10 மணி முதல் மாலை 4.30 வரையில் நடைபெற்றது. 
          கூட்டத்தில் மாநிலப் பொதுச் செயலாளர் திரு அ. வின்செண்ட் பால்ராஜ் அவர்கள் நகல் தீர்மானங்களை முன் மொழிந்தார். அதில் அவர் மாநில அளவில் உள்ள ஆசிரியர்களுக்கான பல்வேறு பிரச்சனைகள் பற்றியும் அவற்றைக் களைந்திட அரசுக்கு வேண்டுகோள் விடுக்கும் தீர்மானங்கள், மற்றும்  இயக்கச் செயல்பாடுகள் குறித்த தீர்மானங்கள் இடம்பெற்றிருந்தன. பின்னர் அனைத்து மாவட்டச் செயலர்களும் அத்தீர்மானங்கள் குறித்து கருத்து தெரிவித்தனர் அத்தோடு தமது மாவட்டம் தொடர்பான ஆசிரியர்கள் பிரச்சனைகள் குறித்தும் விளக்கினர்.
          பின்னர் கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராகக் கலந்துக் கொண்ட அகில இந்திய துவக்கப் பள்ளி ஆசிரியர் சங்கங்களின் கூட்டமைப்பின் அகில இந்தியச் செயலாளர் திரு வா. அண்ணாமலை அவர்கள் சிறப்புரை ஆற்றினார். அப்போது அவர் இன்றைய ஆசிரியர்கள் பிரச்சனைகள் குறித்தும், அவற்றை தீர்த்திட தமிழக ஆசிரியர் கூட்டணி மேற்கொண்டு வரும் செயல்பாடுகள் பற்றியும் விளக்கினார்.
           மேலும் நடைபெற உள்ள டிட்டோஜேக் போராட்ட களத்தில் தமிழக ஆசிரியர் கூட்டணியின் பங்களிப்பு பற்றியும் விளக்கம் அளித்தார். 
             கூட்டத்தில் 31 மாவட்டங்களைச் சேர்ந்த மாநிலச் செயற்குழு உறுப்பினர்கள் அனைவரும் கலந்துக்கொண்டனர்.



        


பிப்.22-ல் தேசிய திறனறி படிப்பு உதவித் தொகைக்கான தேர்வு:

டிச.16 முதல் 20 வரை விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்யலாம்

           தேசிய திறனறி மற்றும் படிப்பு உதவித் தொகைக்கான (என்.எம்.எம்.எஸ்.) தேர்வு வரும் பிப்ரவரி 22-ம் தேதி நடைபெற உள்ளதாக அரசுத் தேர்வுகள் இயக்குநர் கே.தேவராஜன் அறிவித்துள்ளார்.


  இந்தத் தேர்வுக்கான விண்ணப்பங்களை அரசுத் தேர்வுகள் இயக்ககத்தின் www.tndge.in என்ற இணையதளத்திலிருந்து தலைமையாசிரியர்கள் டிசம்பர் 16 முதல் 20 வரை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் எனவும் அவர் அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக வெள்ளிக்கிழமை அவர் வெளியிட்ட அறிவிப்பு:
 
          தேசிய திறனறி மற்றும் படிப்பு உதவித் தொகை வழங்கும் திட்டத்தின் (National Means-cum-Merit Scholarship (NMMS)) கீழ் 8-ஆம் வகுபபு பயிலும் மாணவர்களுக்கு உதவித் தொகை வழங்கப்பட உள்ளது. இந்த உதவித் தொகைக்கான மாணவர்களைத் தேர்வு செய்வதற்காக பிப்ரவரி 22-ம் தேதி தேர்வு நடைபெற உள்ளது.
  இந்தத் தேர்வுக்காக அனைத்து வட்டார அளவில் தேர்வு மையங்கள் அமைக்கப்படுகின்றன.
விண்ணப்பிக்கத் தகுதி:
1. அரசு, மாநகராட்சி, நகராட்சி மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் நடப்பு கல்வி ஆண்டில் (2013-14) எட்டாம் வகுப்பு பயிலும் மாணவ / மாணவியர் இந்தத் தேர்வை எழுதலாம்.
2. மாணவர்களின் குடும்ப வருவாய் ஆண்டுக்கு ரூ.1 லட்சத்து 50 ஆயிரத்துக்கு மிகாமல் இருக்க வேண்டும்.
3. 2012-13 ஆம் கல்வியாண்டில் ஏழாம் வகுப்பு ஆண்டுத் தேர்வில் குறைந்தபட்சம் 55 சதவீதம் மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும் (எஸ்.சி., எஸ்.டி. மாணவர்களுக்கு 50 சதவீத மதிப்பெண் போதுமானது).
விண்ணப்பிக்கும் முறை:
1. என்.எம்.எம்.எஸ். தேர்வுக்கு விண்ணப்பிக்க விருப்பமுடைய தேர்வர்கள் தாங்கள் பயிலும் பள்ளியின் மூலமாக மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். தலைமையாசிரியர்கள் இதற்கான விண்ணப்பங்களை டிச. 16 முதல் டிச. 20 வரை www.tndge.in என்ற இணையதளம் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும்.
2. இந்த விண்ணப்பங்களை எட்டாம் வகுப்பு மாணவர்களிடம் கொடுத்து, அவர்களின் பெற்றோர் உதவியுடன் பூர்த்தி செய்ய வேண்டும்.
3. பூர்த்திசெய்யப்பட்ட விண்ணப்பத்தை ரூ.50 கட்டணத்துடன் பள்ளியின் தலைமையாசிரியரிடம் டிசம்பர் 25-ம் தேதிக்குள் ஒப்படைக்க வேண்டும்.
4. தலைமையாசிரியர் தங்கள் பள்ளிக்குரிய பூர்த்தி செய்யப்பட்ட அனைத்து விண்ணப்பங்களையும் www.tndge.inஎன்ற இணையதளம் மூலம் டிச.23 முதல் டிச.31 வரை பதிவுசெய்ய வேண்டும்.
5. புகைப்படத்தினை வெப் கேமரா மூலம் ஸ்கேனிங் அல்லது பதிவேற்றம் செய்து கொள்ள வேண்டும்.
5. நடுநிலைப் பள்ளி தலைமையாசிரியர்கள் அருகிலுள்ள வட்டார வள மையங்களின் உதவியுடன் இணையதள வசதிகொண்ட உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகளில் தங்கள் பள்ளி மாணவர்களின் விண்ணப்பங்களை இணையதளம் மூலமாகப் பதிவு செய்தல் வேண்டும்.
6. இணையதளம் மூலம் பதிவு செய்தபின் அனைத்து விண்ணப்பங்களையும் ஒரே கட்டாகவும், மொத்தத் தேர்வு கட்டணத்தையும் ரொக்கமாகவும் சம்மந்தப்பட்ட மாவட்டக் கல்வி அலுவலகத்தில் ஜனவரி 2-ம் தேதி ஒப்படைக்க வேண்டும்.
        காலதாமதமாக பெறப்படும் அனைத்து விண்ணப்பங்களும் நிராகரிக்கப்படும் எனவும் அரசுத் தேர்வுகள் இயக்குநர் தெரிவித்துள்ளார்.

எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கான NMMS திறனறிதேர்வு விண்ணப்பம்

நடப்பு கல்வி ஆண்டில், 3,500 ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப தமிழக அரசு அனுமதி

      ஆசிரியர் தகுதி தேர்வு (டி.இ.டி.,) மற்றும் முதுகலை ஆசிரியர் தேர்வில் இருந்து, தேர்வு செய்யப்பட உள்ள, 15 ஆயிரம் பேர் நியமனத்துடன் சேர்த்து, இந்த, 3,500 பேரும் தேர்வு செய்யப்படுவர் என, துறை வட்டாரங்கள் தெரிவித்தன. இதனால், ஒட்டுமொத்தமாக, 18,500 ஆசிரியர், விரைவில் நியமனம் செய்யப்பட உள்ளனர்.

      கடந்த கல்வி ஆண்டுக்கான காலி பணியிடங்கள் மற்றும் நிரப்பப்படாத பணியிடங்கள் என, 15 ஆயிரம் பேர், டி.இ.டி., தேர்வு மற்றும் முதுகலை ஆசிரியர் தேர்வு மூலம், விரைவில் நியமனம் செய்யப்பட உள்ளனர். இதற்கான பணிகள், ஆசிரியர் தேர்வு வாரியத்தில் (டி.ஆர்.பி.,), மும்முரமாக நடந்து வருகிறது.இந்நிலையில், நடப்பு கல்வி ஆண்டுக்கான காலி பணியிடங்கள் குறித்த பட்டியலை, பள்ளி கல்வித்துறையும், தொடக்க கல்வித்துறையும், தமிழக அரசுக்கு அனுப்பியது. பள்ளி கல்வி இயக்குனர், 3,487 பணியிடங்களுக்கும், தொடக்க கல்வி இயக்குனர், 694 இடங்களுக்கும், அரசின் அனுமதி கோரி, பட்டியலை அனுப்பினர். இதை, அரசு ஆய்வு செய்து, 3,525 இடங்களை நிரப்ப அனுமதி அளித்து, அரசாணை பிறப்பித்துள்ளது. கல்வித்துறை செயலர், சபிதா, 10ம் தேதி வெளியிட்ட அரசாணை விவரம்:நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர், 314; ஆரம்ப பள்ளி தலைமை ஆசிரியர், 380 பணியிடங்களை, பதவி உயர்வு மூலம் நிரப்ப, அரசு அனுமதி அளிக்கிறது. மேலும், முதுகலை ஆசிரியர், 809; பட்டதாரி ஆசிரியர், 979; இடைநிலை ஆசிரியர், 887; சிறப்பு ஆசிரியர் (ஓவியம், இசை, தையல்), 156 பணியிடங்கள் என, 3,525 பணியிடங்களை, நடப்பு கல்வி ஆண்டில் நிரப்ப, சம்பந்தப்பட்ட துறைகள், நடவடிக்கை எடுக்கலாம்.இவ்வாறு, அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அனைவருக்கும் கல்வி திட்டத்தில் பணியாற்றும், வட்டார வள மைய மேற்பார்வையாளர்களில், 71 பேர், முதுகலை ஆசிரியராகவும், 115 வட்டார வள மைய பயிற்றுனர், பட்டதாரி ஆசிரியராகவும், பணிமாற்றம் செய்யப்படுவர் எனவும், அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து, கல்வித்துறை வட்டாரம் கூறுகையில், "2012 13ம் ஆண்டுக்காக, 10 ஆயிரம் பட்டதாரி ஆசிரியர் பணியிடம், 2,800 முதுகலை ஆசிரியர் பணியிடம் உட்பட, 15 ஆயிரம் பணியிடங்களை, டி.இ.டி., மற்றும் முதுகலை ஆசிரியர் தேர்வு மூலம் நிரப்பப்பட உள்ளனர். இவர்களுடன் சேர்த்து, 3,500 பணியிடங்களை நிரப்பவும் வாய்ப்பு உள்ளது' என, தெரிவித்தன. மொத்தத்தில், பள்ளி கல்வித்துறை, தொடக்க கல்வித்துறையில், 18,500 பேர் நிரப்பப்பட உள்ளனர்.

Wednesday, November 27, 2013

2014ஆம் ஆண்டுக்கான விடுப்பு பட்டியல்

அரசு அறிவிப்புகளில் தமிழ் தேதி அவசியம் போட வேண்டும் - அரசு அறிவிப்பு


             அரசு உத்தரவு மற்றும் அரசு அறிவிப்புகளில் தமிழ் தேதி அவசியம் போட வேண்டும் என்ற ஆணையை பின்பற்றவில்லையென்றால் அலுவலர்கள் மற்றும் அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அரசு அறிவிப்பு