Monday, December 16, 2013

பிப்.22-ல் தேசிய திறனறி படிப்பு உதவித் தொகைக்கான தேர்வு:

டிச.16 முதல் 20 வரை விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்யலாம்

           தேசிய திறனறி மற்றும் படிப்பு உதவித் தொகைக்கான (என்.எம்.எம்.எஸ்.) தேர்வு வரும் பிப்ரவரி 22-ம் தேதி நடைபெற உள்ளதாக அரசுத் தேர்வுகள் இயக்குநர் கே.தேவராஜன் அறிவித்துள்ளார்.


  இந்தத் தேர்வுக்கான விண்ணப்பங்களை அரசுத் தேர்வுகள் இயக்ககத்தின் www.tndge.in என்ற இணையதளத்திலிருந்து தலைமையாசிரியர்கள் டிசம்பர் 16 முதல் 20 வரை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் எனவும் அவர் அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக வெள்ளிக்கிழமை அவர் வெளியிட்ட அறிவிப்பு:
 
          தேசிய திறனறி மற்றும் படிப்பு உதவித் தொகை வழங்கும் திட்டத்தின் (National Means-cum-Merit Scholarship (NMMS)) கீழ் 8-ஆம் வகுபபு பயிலும் மாணவர்களுக்கு உதவித் தொகை வழங்கப்பட உள்ளது. இந்த உதவித் தொகைக்கான மாணவர்களைத் தேர்வு செய்வதற்காக பிப்ரவரி 22-ம் தேதி தேர்வு நடைபெற உள்ளது.
  இந்தத் தேர்வுக்காக அனைத்து வட்டார அளவில் தேர்வு மையங்கள் அமைக்கப்படுகின்றன.
விண்ணப்பிக்கத் தகுதி:
1. அரசு, மாநகராட்சி, நகராட்சி மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் நடப்பு கல்வி ஆண்டில் (2013-14) எட்டாம் வகுப்பு பயிலும் மாணவ / மாணவியர் இந்தத் தேர்வை எழுதலாம்.
2. மாணவர்களின் குடும்ப வருவாய் ஆண்டுக்கு ரூ.1 லட்சத்து 50 ஆயிரத்துக்கு மிகாமல் இருக்க வேண்டும்.
3. 2012-13 ஆம் கல்வியாண்டில் ஏழாம் வகுப்பு ஆண்டுத் தேர்வில் குறைந்தபட்சம் 55 சதவீதம் மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும் (எஸ்.சி., எஸ்.டி. மாணவர்களுக்கு 50 சதவீத மதிப்பெண் போதுமானது).
விண்ணப்பிக்கும் முறை:
1. என்.எம்.எம்.எஸ். தேர்வுக்கு விண்ணப்பிக்க விருப்பமுடைய தேர்வர்கள் தாங்கள் பயிலும் பள்ளியின் மூலமாக மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். தலைமையாசிரியர்கள் இதற்கான விண்ணப்பங்களை டிச. 16 முதல் டிச. 20 வரை www.tndge.in என்ற இணையதளம் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும்.
2. இந்த விண்ணப்பங்களை எட்டாம் வகுப்பு மாணவர்களிடம் கொடுத்து, அவர்களின் பெற்றோர் உதவியுடன் பூர்த்தி செய்ய வேண்டும்.
3. பூர்த்திசெய்யப்பட்ட விண்ணப்பத்தை ரூ.50 கட்டணத்துடன் பள்ளியின் தலைமையாசிரியரிடம் டிசம்பர் 25-ம் தேதிக்குள் ஒப்படைக்க வேண்டும்.
4. தலைமையாசிரியர் தங்கள் பள்ளிக்குரிய பூர்த்தி செய்யப்பட்ட அனைத்து விண்ணப்பங்களையும் www.tndge.inஎன்ற இணையதளம் மூலம் டிச.23 முதல் டிச.31 வரை பதிவுசெய்ய வேண்டும்.
5. புகைப்படத்தினை வெப் கேமரா மூலம் ஸ்கேனிங் அல்லது பதிவேற்றம் செய்து கொள்ள வேண்டும்.
5. நடுநிலைப் பள்ளி தலைமையாசிரியர்கள் அருகிலுள்ள வட்டார வள மையங்களின் உதவியுடன் இணையதள வசதிகொண்ட உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகளில் தங்கள் பள்ளி மாணவர்களின் விண்ணப்பங்களை இணையதளம் மூலமாகப் பதிவு செய்தல் வேண்டும்.
6. இணையதளம் மூலம் பதிவு செய்தபின் அனைத்து விண்ணப்பங்களையும் ஒரே கட்டாகவும், மொத்தத் தேர்வு கட்டணத்தையும் ரொக்கமாகவும் சம்மந்தப்பட்ட மாவட்டக் கல்வி அலுவலகத்தில் ஜனவரி 2-ம் தேதி ஒப்படைக்க வேண்டும்.
        காலதாமதமாக பெறப்படும் அனைத்து விண்ணப்பங்களும் நிராகரிக்கப்படும் எனவும் அரசுத் தேர்வுகள் இயக்குநர் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment