Thursday, November 6, 2014

தமிழகத்தில் உள்ள பல்கலைக்கழகங்கள் தொலைதூர கல்வியை பிற மாநிலங்களில் வழங்க தடை

            தமிழகத்தில் உள்ள பல்கலைக்கழகங்கள், பிற மாநிலங்களில் தொலைதூர கல்வியை வழங்க யுஜிசி தடைவிதித்துள்ளது. தங்கள் ஆளுகையின் கீழ் உள்ள பகுதிகளில் மட்டுமே இந்த திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்றும் கூறியுள்ளது. தமிழகத்தில் கலை மற்றும் அறிவியல் பாடங்களை தொலைதூர கல்வி திட்டத்தில், வீட்டில் இருந்து கொண்டோ அல்லது வேலை பார்த்து கொண்டோ படிக்கலாம். இந்த கல்வியை தமிழகத்தில் மாநில அரசின் கீழ் உள்ள 10 பல்கலைக்கழகங்களும், சில நிகர்நிலை பல்கலைக்கழகங்களும் வழங்கி வருகின்றன.
இந்நிலையில், சில மாதங்களுக்கு முன்னர், நிகர்நிலை பல்கலைக்கழகங்கள் மற்றும் சில பல்கலைக்கழகங்களினால் நடத்தப்படும் தொலைதூர கல்வி மையங்களில் முறைகேடு நடப்பதாக புகார்கள் எழுந்தன. இதுதொடர்பாக, பல்கலைக்கழக மானிய குழு, பல்கலைக்கழகங்களுக்கு அனுப்பிய கடிதத்தில், பல்கலைக்கழகங்கள் தங்கள் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள பகுதிகளில் மட்டுமே தொலைதூர கல்வியினை வழங்க வேண்டும்.
        பிற இடங்களில் தொலைதூர கல்வி மையங்களை தொடங்கக் கூடாது என்று கூறி ஒரு கடிதத்தை அனுப்பியது. இந்த கடிதம் தொடர்பாக, தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்கள் மற்றும் உயர்கல்விதுறை அதிகாரிகள் அடங்கிய ஆலோசனை கூட்டம் நடந்தது. அதன் முடிவில் யுஜிசிக்கு எழுதப்பட்ட கடிதத்தில், பல்கலைக்கழகத்திற்கு தொலைதூர கல்வியினால் கிடைத்து வரும் வருவாய் தடைபடும். பல்கலைக்கு வருமான இழப்பீடும் ஏற்படும். எனவே, இந்த முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி இருந்தனர். இதுகுறித்து, பல்கலைக்கழக மானியக்குழு துணை தலைவர் தேவராஜ் கூறியதாவது: தமிழகத்தில் தங்கள் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள பகுதியில் தொலைதூர கல்வியை பல்கலைக்கழகங்கள் வழங்கலாம்.
             மாநிலத்தின் மற்ற பகுதியில் தொலைதூர கல்வி வழங்க தமிழக அரசின் அனுமதியை பெற்றிருக்க வேண்டும். மேலும், தமிழக பல்கலைக்கழகங்கள் வேறு மாநிலங்களில் தொலைதூர கல்வி வழங்க கூடாது. அதேபோல, இந்தியாவின் மற்ற மாநிலங்களில் இருக்கும் ஒவ்வொரு பல்கலைக்கழகமும் அந்தந்த மாநிலத்தில் மட்டுமே தொலைதூர கல்வியை வழங்க வேண்டும். அதேபோல, நிகர்நிலை பல்கலைக்கழகங்கள் அனுமதியில்லாமல் தொலைதூர கல்வியை ஆரம்பித்தால் அவை ரத்து செய்யப்படும். எங்கள் கடிதம் கிடைத்த பிறகு, வெளிமாநிலங்களில் தொலைதூர கல்விநிலையம் வைத்திருக்கும் பல்கலைக்கழகங்கள் மாணவர் சேர்க்கையில் ஈடுபட கூடாது. அவ்வாறு குறிப்பிட்ட தேதிக்கு பிறகு மாணவர்களை சேர்த்து அவர்களை படிக்க வைத்தால் அந்த மாணவர்கள் பெறும் பட்டம் தகுதியற்றதாக கருதப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
சென்னை பல்கலை மையம்
       சென்னை பல்கலைக்கழகத் துக்கு தமிழகத்தில் 40 மையங்களும், வெளிமாநிலத்தில் 50 மையங்களும், வெளிநாட்டில் 4 மையமும் செயல்பட்டு வருகின்றன. இதன் மூலம் 22 இளங்கலை படிப்புகள், 14 முதுகலை படிப்புகள், 9 முதுகலை அறிவியல் படிப்புகள், 16 டிப்ளமோ படிப்புகள், 12 சான்றிதழ் படிப்புகள் வழங்கப்பட்டு வருகிறது.

No comments:

Post a Comment