எட்டாம் வகுப்பு
மாணவர்களுக்கான தேசிய வருவாய் வழி-திறன் கல்வி உதவித் தொகைத் திட்டத்தின்
(NMMS) கீழ் நடைபெறும் தேர்வுக்கான விண்ணப்பங்களை டிசம்பர் 4-ஆம்
தேதிக்குள் பதிவிறக்கம் செய்துகொள்ள வேண்டும் என அரசுத் தேர்வுகள் இயக்ககம்
அறிவித்துள்ளது.
தேசிய வருவாய்
வழி-திறன் கல்வி உதவித் தொகை திட்டத்தின் கீழ் உதவித் தொகை பெறும்
மாணவர்களைத் தேர்வு செய்ய டிசம்பர் 27-ஆம் தேதி தேர்வு நடைபெற உள்ளது.
இந்தத் தேர்வுக்கான விண்ணப்பங்களை அந்தந்த பள்ளிகளின் தலைமையாசிரியர்கள்
நவம்பர் 26 முதல் டிசம்பர் 4 வரை www.tndge.in என்ற
இணையதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்யலாம். இந்தத் தேர்வுக்கு
விண்ணப்பிக்கும் மாணவர்களுடைய பெற்றோரின் குடும்ப ஆண்டு வருமானம் ரூ.1.50
லட்சத்துக்கு மிகாமல் இருக்க வேண்டும். ஏழாம் வகுப்பு முழு ஆண்டுத்
தேர்வில் குறைந்தபட்சம் 55 சதவீத மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும். இந்தத்
தேர்வுக்கு விண்ணப்பிக்க விருப்பமுடைய தேர்வர்கள் தங்களது பள்ளியின் மூலமாக
மட்டுமே விண்ணப்பிக்க இயலும். பதிவிறக்கம் செய்யப்பட்ட விண்ணப்பத்தை
மாணவர்களிடம் கொடுத்து பெற்றோர் உதவியுடன் பூர்த்தி செய்யுமாறு
தலைமையாசிரியர்கள் அறிவுறுத்த வேண்டும். டிசம்பர் 5-ஆம் தேதிக்குள் இந்த
விண்ணப்பங்கள் தலைமையாசிரியர்களிடம் ஒப்படைக்கப்பட வேண்டும்.
தலைமையாசிரியர்கள்
தங்களது பள்ளிக்குரிய அனைத்து விண்ணப்பங்களையும் டிசம்பர் 5 முதல் 8-ஆம்
தேதி வரை இணையதளம் மூலமாக பதிவு செய்ய வேண்டும். அதன்பிறகு, பதிவிறக்கம்
செய்த விண்ணப்பங்களையும், தேர்வுக் கட்டணத்தையும் மாவட்டக் கல்வி
அலுவலர்களிடம் டிசம்பர் 11-ஆம் தேதிக்குள் தலைமையாசிரியர்கள் ஒப்படைக்க
வேண்டும் என அரசுத் தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது.
No comments:
Post a Comment